(ஆர்.விதுஷா)

ஆசியர்களின் சம்பளமுரண்பாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்த பீ.சி. பெரேரா ஆணைக்குழுவின்  சிபாரிசுகளை அரசாங்கம் டனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் அஜித் பீ. பெரேரா கோரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது இன்று இடம் பெறவுள்ள  கல்வித்துறை தொழிற்சங்கங்களின் சுகயீன விடுமுறைப்போராட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும்  கூறியதாவது  , 

நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகயீன  விடுமுறை அறிவித்து விட்டு இன்றைய தினம் மாபெரும் எதிர்ப்பு  ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

கல்வித்துறையினரின் தீர்வு காணப்படாத பல்வேறு பிரச்சினைகள்  காணப்பட்டன. ஆகவே,அந்தபிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைளை மேற்கொள்வதற்காக பீ.சி பெரேரா  ஆணைக்குழு அமைக்கப்பட்டது. 

அந்த ஆணைக்குழுவினால் கொண்டுவரப்பட்ட சிபாரிசுகளை  உடனடியாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக தமது சம்பளப்பிரச்சினைக்கான தீர்வினைப்பெற்றுத்தருமாறு கூறி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் எதிர்ப்பு ஆர்பாட்டங்களை  மேற்கொண்டிருந்தனர். 

அதனை தொடர்ந்து அவர்களுடைய கோரிக்கைக்கான தீர்வை  பெற்றுக்கொடுக்கும் வகையில் அந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகள்     நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்சரவை அனுமதியை நாம் பெற்றுக்கொண்டிருந்தோம்.

அதிலும் சில குறைபாடுகள் காணப்படுவதாக ஆசிரியர்  சங்கங்கள் சுட்டிக்காட்டியதை அடுத்துகடந்த வருடம் ஒக்டோபர் 15 ஆம் திகதி  அந்த பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்யும் வகையிலான புதிய அமைச்சரவை பத்திரத்தை வெளியிட்டிருந்தோம். 

அந்த சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம்  தயாராயில்லை.ஆகவே தான் கல்வி சார் தொழில் சங்கங்கள் இன்று  எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன. இதனால் பாரிய அசௌகரியத்தை சந்திக்க நேரிடும் என அவர் தெரிவித்தார்.