மட்டக்களப்பு, கல்குடாக் கல்வி வலயத்துக்கு உட்பட்ட கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அல்லது அவர்களுக்கு பதிலீடாக ஆசிரியர்களை இவ்வித்தியாலயத்தில் நியமிக்க வேண்டும் என்று கோரி அவ்வித்தியாலய மாணவர்களும் பெற்றோரும் இன்று   காலை வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு -திருகோணமலை பிரதான நெடுஞ்சாலையை வழிமறித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதால், சிறிது நேரம் இந்நெடுஞ்சாலை ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. 

குறித்த பாடசாலையில் கற்கின்ற 425 மாணவர்களுக்கு ஒன்பது ஆசிரியர்களே கற்பித்து வந்தனர்.

இந்நிலையில், இந்த ஆசிரியர்களில் இரண்டு பேருக்கு மட்டக்களப்பு நகரப் பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டவர்களை மீண்டும் தமது வித்தியாலயத்துக்கு திருப்பித்தர வேண்டும்.

அல்லாவிடின், இவர்களுக்குப் பதிலீடாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் பெற்றோரும்; தெரிவித்தனர். 

இந்நிலையில், ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகைதந்த வாகரைக் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.பரமேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனும் மாணவர்களுடனும் பெற்றோருடனும் கலந்துரையாடினார்.

இதன்போது, இடமாற்றப்பட்ட  ஆசிரியர்களுக்குப் பதிலீடாக இரு ஆசிரியர்களை அடுத்த இரு வாரங்களுக்குள் வழங்குவதாக இவர்கள் உறுதியளித்தனர். 

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில்; ஈடுபட்ட மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டுச் சென்றனர்.