புதுடில்லியில் வன்முறைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் முஸ்லீம் குடும்பமொன்றிற்கு ஏற்படவிருந்த பெரும் ஆபத்தை  பாரதியஜனதாவின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் தடுத்து நிறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

  யமுனா விகார் என்ற பகுதியை சேர்ந்த பாரதியஜனதாவின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பிரமோத் குப்தா என்பவர் 150 பேர் கொண்ட கும்பலொன்று சகீத்சித்திக் என்பவரின் குடும்பத்தினரை வீட்டுடன் எரித்துகொலை முயன்றவேளை அந்த குடும்பத்தினரை காப்பாற்றியுள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் குறித்து சகீத் சித்தீக் இந்தியா டுடேயிற்கு தெரிவித்துள்ளார்.

நேற்று புதுடில்லியின் பல பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் நள்ளிரவில்  கும்பலொன்று தங்கள் பகுதியை நோக்கி வந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜெய் ஸ்ரீராம்  என கோசமிட்டபடி அவர்கள் காவல்துறையினரின் தடைகள் அற்ற வீதிக்குள் நுழைந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தனது வீட்டிற்கு கீழேயிருந்த சிறிய கடையை அவர்கள் முதலில் எரித்தனர் என  சகீத் சித்தீக் தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த வீட்டை சேர்ந்த கார் மோட்டார்சைக்கிளையும் அவர்கள் தீயிட்டு கொழுத்தினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வேளையிலேயே அவ்விடத்திற்கு வந்த  பாரதியஜனதாவின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பிரமோத் குப்தா குடும்பத்தினரையும் அவரது வீட்டையும் காப்பாற்றியுள்ளார்.

நான் ஆபத்தை உணர்ந்தவுடன் இரண்டு வயது குழந்தையுடன் தப்பிவிட்டேன் என குறிப்பிட்டுள்ள சித்தீக் அந்த காடையர் கும்பல் எனது வீட்டை தீ மூட்டி அழிப்பதை பாரதியஜனதாவின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பிரமோத் குப்தாவே தடுத்து நிறுத்தினார் என தெரிவித்துள்ளார்.