யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் ஒழிந்து அமைதி நிலவுகின்ற இக்காலப்பகுதியில் அமைதியை சீர்குலைப்பதற்கு சில சக்திகள் முயற்சி செய்கின்றன. இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிதாக கடமையேற்றுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கோரிக்கை விடுத்தார்.

யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையேற்றுள்ள கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ்,  நீதிபதி முன்னிலையில் ஆஜராகிய போதே நீதிபதி இளஞ்செழியன் மேற்படி கோரிக்கையை விடுத்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த நீதிபதி,

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதங்களாக குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. குற்றச் செயல்களை கட்டுப்படுத்தக் கோரி பலத்தரப்பினரும் வலிறுயுறுத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தல்கள் மிக நுட்பமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வடக்கு கடற்பரப்பில் உள்ள படகுகள் சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும்.

 குறிப்பாக யாழில் தற்போது வாள்வெட்டு சம்பவங்கள் குறைவடைந்துள்ளன. குழு மோதல்கள் குறைவடைந்துள்ளன.

எனினும் தற்போது சில சக்திகள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனை ஆரம்பத்திலேயே இனங்கண்டு இல்லாதொழிக்க வேண்டும்.