சாய்ந்­த­ம­ரு­துக்­கான உள்­ளூ­ராட்சி சபை அறி­வித்­தலை வாபஸ் பெற்­றுள்­ளதன் மூல­மாக இலங்­கையை யார் ஆட்சி செய்­தாலும் பௌத்த இன­வா­தி­களின் ஆதிக்­கத்­தி­லி­ருந்து விடு­பட முடி­யா­தென்­ப­தனை இன்­றைய ஆட்சியா­ளர்­களும் நிரூ­பித்­துள்­ளார்கள். அது­மட்­டு­மன்றி சட்ட அமு­லாக்கம் என்­பது பெரும்­பான்மை, சிறுபான்மை என்ற பார­பட்­சத்­துடன் நடை­பெற்றுக் கொண்­டி­ருப்­ப­த­னையே சுதந்­திர இலங்­கையில் அறிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்கின்­றது.

இன்­றைய ஆட்­சியில் கொழும்பு – கண்டி வீதியில் நெலுந்­தெ­னிய உடு­கும்­புற நூர் ஜும்ஆப் பள்­ளி­வாசல் வளா­கத்தில் சட்ட விரோ­த­மாக வைக்­கப்­பட்ட புத்தர் சிலை அகற்­றப்­ப­ட­வில்லை. அதனை அங்கே வைப்­ப­தற்கு சுமு­க­மாக தீர்வு காணப்­பட்டாலும், அதனை நீதி­யாகக் கொள்ள முடி­யாது.

முஸ்­லிம்­க­ளிடம் பௌத்த இன­வா­திகள் குறித்­தான அச்­சத்­தினால் ஏற்­பட்ட விட்டுக் கொடுப்­பாகும்.  கடந்த 14ஆம் திகதி சாய்ந்­த­ம­ரு­துக்கு நகர சபை என அரச வர்த்­த­மா­னியில் அறி­விக்­கப்­பட்­டதன் பின்னர், ஐந்து நாட்­களின் பின்னர் அந்த அறி­வித்­தலை அர­சாங்கம் வாபஸ் பெற்றுக் கொண்­டது. இவ்­விரு சம்­ப­வங்­களும் பௌத்த கடும்­போக்­கு­வா­தி­களின் அழுத்­தங்­களின் பிர­தி­ப­லிப்­பாகும். ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ அதி­ரடி நட­வ­டிக்­கை­களின் மூல­மாக மக்­களின் மனங்­களில் இடம் பிடித்துக் கொண்­டி­ருந்­தாலும், அவரால் பௌத்த இன­வா­தி­களின் அழுத்­தங்­க­ளி­லி­ருந்து விடு­பட முடி­யா­தென்­ப­த­னையே இச்­சம்­ப­வங்கள் காட்­டு­கின்­றன. எல்­லாளன், துட்­டகை­முனு காலத்­தி­லி­ருந்து வளர்ந்து வந்­துள்ள இன­வாத செயற்­பா­டுகள் மிகவும் ஆழ­மாக வேரூன்­றி­யுள்­ளன. ஆதலால் ஆட்­சி­யா­ளர்கள் தங்­களை விடு­வித்துக் கொள்­வது என்­பது அர­சியல் ரீதியில் அவர்கள் தற்­கொலை செய்­வ­தற்கு சம­மாகும். பௌத்த இன­வா­தி­க­ளையும் பௌத்த அமைப்­பு­க­ளையும் தலையில் வைத்து பூஜித்­த­வர்­களே ஆட்­சி­யா­ளர்­க­ளா­கி­யுள்­ளார்கள். அதற்கு இன்­றைய ஆட்­சி­யா­ளர்­களும் விதி­வி­லக்­கல்ல. இதற்கு இலங்­கையில் காணப்­படும் அர­சியல் கலாசா­ரமே பிர­தான காரணமாகும்.

அர­சியல் கலா­சாரம்

இலங்­கையின் அர­சியல் கலா­சாரம் சிங்­கள பெரும்­பான்மை மக்­களின் நலன்­க­ளுக்கு மிகக் கூடுதல் முன்­னு­ரிமை அளிக்கும் வகை­யி­லேயே தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. ஆட்சி­யா­ளர்கள் யாராக இருந்­தாலும் இந்த கலா­சா­ரத்தை பேணுதல் கட்­டாயம் என்ற நிலையே காணப்­ப­டு­கின்­றது. சிறு­பான்­மை­யினர் பெரும்­பான்­மை­யி­னரின் நலன்­க­ளுக்கு தடை­யாக இருக்கக் கூடாது.

அதே வேளை, பெரும்­பான்­மை­யினர் சிறு­பான்­மை­யி­னரின் நலன்­க­ளுக்கு தடை­யாக இருப்­ப­தனை தவ­றாக கணிக்­கவும் முடி­யாது. இது எழு­தப்­ப­டாத சட்­ட­மா­கவே இருந்து கொண்­டி­ருக்­கின்­றது.

ஆதலால், இலங்­கையின் ஆட்சியாளர்கள் சகல இனங்­க­ளையும் ஒன்­றி­ணைத்துக் கொண்டு செல்லக் கூடி­ய­தொரு அர­சியல் கலா­சா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­ப­வில்லை. இதில் பெரும்­பான்­மை­யினத் தலை­வர்கள் மட்­டு­மன்றி சிறு­பான்­மை­யினத் தலை­வர்­களும் தவ­றி­ழைத்­துள்­ளார்கள் என்ற போதிலும், தற்­போ­துள்ள அர­சியல் கலா­சா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வதில் சிங்­கள அர­சியல் தலை­வர்­களும் பௌத்த பிக்­கு­களும் அதிக செல்வாக்கு செலுத்­தி­யுள்­ளார்கள்.

சிங்­கள பெரும்­பான்­மை­யி­ன­ருக்­காக கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட அர­சியல் கலா­சாரம் நாட்­டுக்கு வேண்­டப்­ப­டாத பல விட­யங்­களை உரு­வாக்­கி­யுள்­ளது. அவற்றில் இன­வாதம் முத­லி­டத்தை வகிக்­கின்­றது. இன­வாதம் தேசி­ய­வா­தத்தை விடவும் மேலோங்கிக் காணப்­ப­டு­கின்­றது. நாம் இலங்­கையர் என்ற தேசி­ய­வா­தத்­துக்கு பதி­லாக, இலங்கை பௌத்த சிங்­க­ள­வர்­க­ளுக்கு மாத்­தி­ரமே என்ற தேசி­ய­வா­தமே காணப்­ப­டு­கின்­றது. தமி­ழர்­களும், முஸ்­லிம்­களும் தேசிய இனம் அல்ல என்ற கொள்­கையே பௌத்த கடும்­போக்­கு­வா­தி­க­ளி­டமும் பேரி­ன­வா­திகள் பல­ரி­டமும் காணப்­ப­டு­கின்­றது. இவ்­வாறு சிறு­பான்­மை­யி­னரை தேசிய இனம் என்று அங்­கீ­க­ரிக்­காத, அவர்­களின் உரி­மை­களை ஏற்றுக் கொள்­ளா­த­வர்­க­ளையே தேசப்­பற்­றா­ளர்கள் எறு அ­ழைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆனால், இவர்கள் செய்யும் அநேக நட­வ­டிக்­கைகள் தேசத்தின் நலன்­க­ளுக்கு குந்­த­க­மா­கவே இருந்து கொண்­டி­ருக்­கின்­றன. இத்­த­கை­ய­வர்­கள்தான் சாய்ந்­த­ம­ரு­துக்கு உள்­ளூ­ராட்சி சபை எனும் அரச வர்த்­த­மானி அறி­வித்­தலை அர­சாங்கம் வாபஸ் பெறுவ­தற்கு பின்­ன­ணியில் இருந்­துள்­ளார்கள். இவர்­களின் எதிர்ப்­பினை அர­சாங்கம் சம்­பா­தித்துக் கொள்ள விரும்­ப­வில்லை. இத்­த­கை­ய­வர்­களின் பெரும் பங்­க­ளிப்­புடன் ஜனா­தி­பதித் தேர்­தலை வெற்றி கொண்­ட­வர்­க­ளினால், பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் வெற்றி பெற்று ஆட்­சி­ய­மைக்க வேண்­டி­யுள்­ளது. இதற்கு பௌத்த கடும்­போக்­கு­வா­தி­க­ளி­னதும் பௌத்த அமைப்­பு­களின் ஆத­ரவும் அவ­சி­ய­மாகும். ஆதலால், அர­சியல் தேவைக்­காக சாய்ந்­த­ம­ரு­துக்கு உள்­ளூ­ராட்சி சபை அறி­விக்­கப்­பட்­டது. அதன் மூல­மாக இன்­றைய ஆட்­சி­யா­ளர்­களின் தோழ­னாக உள்ள முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதா­வுல்­லாவின் ஆத­ரவு அதி­க­ரிக்கும் என்று எதிர்­பார்த்­தார்கள். ஆனால், தேசப்­பற்­றா­ளர்கள் என்று அழைத்துக் கொள்ளும் பௌத்த கடும்­போக்­கு­வா­தி­களின் எதிர்ப்பு தென்­னி­லங்­கையில் சிங்­க­ள­வர்­களின் வாக்­கு­களில் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்ற நிலை ஏற்­பட்­ட­த­னால்தான் அரச வர்த்­த­மா­னியை அர­சாங்கம் வாபஸ் பெற்றுள்­ளது. ஆதலால், அர­சியல் தேவைக்­காக சாய்ந்­த­ம­ரு­துக்கு உள்­ளூ­ராட்சி சபை என்ற அறி­விப்பு, அர­சியல் தேவைக்­கா­கவே வாபஸ் பெறப்­பட்டுள்­ளது.

வன்­முறை அர­சியல்

இலங்­கையில் காணப்­படும் பல்­லினத் தன்­மையை ஏற்றுக் கொள்­ளாத அர­சியல் கலா­சாரம் இன­வா­தத்தை உரு­வாக்­கி­யுள்­ள­துடன் அத­னுடன் இணைந்­த­வாறு வன்­மு­றை­யையும் வன்­முறை அர­சி­ய­லையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இன­வா­தத்தின் முற்­றிய நிலையே வன்­மு­றை­யாகும். இனத்­துவ அடிப்­ப­டையில் அரச பாது­காப்பு தரப்­பி­னரின் முன்­னி­லை­யி­லேயே இன வன்­மு­றைகள் நடை­பெற்­றுள்­ளன.

தமி­ழர்­களின் உரி­மை­க­ளையும் சுய­நிர்­ண­யத்­தையும் ஏற்றுக் கொள்­ளாத நிலை­யில்தான், தமிழர் தரப்­பினர் யுத்­தத்தை மேற்­கொண்­டார்கள். இதனைக் கூட தமது இலக்கை அடைந்து கொள்­வ­தற்­கு­ரிய வன்­முறை அர­சியல் என்றே கூறுதல் வேண்டும்.

சவுதி அர­சாங்­கத்­தினால் அக்­க­ரைப்­பற்று நுரைச்­சோ­லையில் சுனா­மியால் வீடு­களை இழந்த குடும்­பங்­க­ளுக்­காக கட்­டப்­பட்­டுள்ள 500 வீடு­களை நீதி­மன்­றத்­துக்கு சென்று தடை செய்­தமை இன­வாத நட­வ­டிக்­கை­யாகும். சுனா­மியால் பாதிக்­கப்­ப­டாத சிங்­க­ள­வர்­க­ளுக்கும் வீடு தரப்­பட வேண்டும். அதுவும் இன­வி­கி­தா­சா­ரத்­துக்­கேற்ப என்று கேட்டுக் கொண்­டார்கள். இறக்­காமம் மாணிக்­க­மடு பிர­தே­சத்தில் மாயக்­கல்லி மலையில் சட்­ட­வி­ரோ­த­மாக புத்தர் சிலை வைக்­கப்­பட்­டது. இப்­போது அங்கு புத்தர் சிலை வைக்­கப்­பட்­ட­மையை சட்­டத்­துக்­கு­ரி­ய­தாக மாற்­றி­யுள்­ளார்கள். அங்கு நிரந்­தர கட்­டு­மானப் பணிகள் நடை­பெற்று முடி­வுறும் நிலையில் உள்­ளன. இத்­த­கைய நட­வ­டிக்­கை­களின் பின்­ன­ணியில் அர­சி­யலே உள்­ளது. சட்­டத்­துக்கு மாற்­ற­மாக வன்­மு­றையை பாவித்து சிங்­கள பௌத்த மக்­களின் ஆத­ரவைப் பெற்றுக் கொள்ள நினைக்­கின்­றார்கள்.  யாழ். நூல­கத்­தினை தீயிட்டு கொளுத்­தி­யமை கூட வன்­முறை அர­சியல் நட­வ­டிக்­கை­யாகும்.

அக்­க­ரைப்­பற்றில் உள்ள 500 வீடு­களை வழங்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை அதா­வுல்லா எடுக்­காது, சாய்ந்­த­ம­ரு­துக்கு உள்­ளூ­ராட்சி சபையை வழங்க முயற்­சி­களை எடுத்துக் கொண்­டமை அர­சியல் இலா­பத்­துக்­கா­க­வே­யாகும். ஆனால், அவ­ரினால் பேரி­ன­வா­தி­களின் வன்­முறை அர­சி­ய­லுக்கு எதி­ராக குதி­ரையை செலுத்த முடி­ய­வில்லை.

சிறு­பான்­மை­யினர் தங்­களின் உரி­மை­க­ளுக்­காக ஜன­நா­யக ரீதியில் போராட்­டங்­களை மேற்­கொண்ட போதெல்லாம் அவற்றை ஆட்­சி­யா­ளர்கள் வன்­மு­றையால் தடுத்து நிறுத்­தி­யுள்­ளார்கள்.

மேலும், சிறு­பான்­மை­யி­னரின் மத வழி­பாட்டுத் தலங்­களை தாக்­கி­யுள்­ளார்கள். இவற்றின் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­திகள் இருக்­கின்­றார்கள். சிறு­பான்­மை­யி­னரை வன்­முறை மூல­மாக அடக்­கி­யாள்­வ­தற்கு எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­யா­கவே சிறு­பான்­மை­யினர் மீதான அனைத்து நட­வ­டிக்­கை­களும் அமைந்­துள்­ளன. சிறு­பான்­மை­யினர் தங்­களின் உரி­மை­க­ளுக்­காக போராட்டம் நடத்­து­வ­தற்கு அச்சம் இருக்க வேண்­டு­மென்­ப­தற்­கா­கவே இத்­த­கைய தாக்­கு­தல்கள் நடை­பெற்­றன.

இன­வா­தமும் வன்­மு­றையும் இணைந்து செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இதனை பால் ஊற்றி வளர்க்­கின்­ற­வர்­க­ளாக அர­சியல் தலை­வர்­களும் கட்­சி­களும் இருக்­கின்­றன. தாம் ஆட்­சி­யா­ளர்­க­ளாக மாற வேண்­டு­மென்­ப­தற்­காக வன்­மு­றை­யா­ளர்­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­க­ளையும் காலத்­துக்கு காலம் ஆட்­சி­யா­ளர்கள் மேற்­கொண்டு வந்­துள்­ளார்கள். பௌத்த இன­வா­தமும் கடும்­போக்கு சிந்­த­னை­க­ளும்தான் தங்­களை ஆட்சி பீடத்தில் அமரச் செய்யும்.

அதனால் அதற்­கேற்ற வகையில் ஆட வேண்­டி­ய­வர்­க­ளாக பேரி­ன­வாத அர­சி­யல்­வா­திகள் உள்­ளார்கள். கோல் ஆட குரங்கு ஆடும் என்ற பழ­மொ­ழிக்கு அமைய பேரி­ன­வா­தி­களை ஆட்டி வைக்கும் கோல் பௌத்த இன­வாத கடும்­போக்­கு­வா­தி­களின் கைகளில் உள்­ளது.

இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளினால் நாட்டு மக்­க­ளி­டையே ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்த முடி­யா­துள்­ளது. பேரி­ன­வா­தி­க­ளி­னதும் ஆட்­சி­யா­ளர்­க­ளி­னதும் இன­வாத கடும்­போக்­கு­வா­தி­க­ளி­னதும் நட­வ­டிக்­கை­க­ளினால் சிறு­பான்­மை­யி­ன­ரி­டையே பலத்த சந்­தே­கங்கள் ஏற்­பட்­டுள்­ளன.

அதே­வேளை, அர­சியல் தேவைக்­காக சிறு­பான்­மை­யினர் பற்­றி­ய­தொரு போலி­யான அச்­சத்தை பெரும்­பான்மை சிங்­கள மக்­க­ளிடம் பேரி­ன­வா­தி­களும் கடும்­போக்கு இன­வா­தி­களும் விதைத்து வைத்­துள்­ளார்கள். அதனை எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அதிகம் காணக் கூடி­ய­தாக இருக்கும்.

 சாய்ந்­த­ம­ரு­துக்கு உள்­ளூ­ராட்சி சபை என்ற அறி­விப்பை ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திரன், காவிந்த ஜய­வர்­தன ஆகி­யோர்கள் இன ரீதி­யாக விமர்­சனம் செய்­துள்­ளார்கள். ஆதலால், இப்­போதே இன­வாதக் கருத்­து­களை பேரி­ன­வா­திகள் ஆரம்­பித்­துள்­ளார்கள். அதனால், பாரா­ளு­மன்றத் தேர்­தலில் சிங்­கள மக்­களின் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு மிகப் பெரிய கரு­வி­யாக இன­வாத கருத்­து­களே அமை­ய­வுள்­ளன.

எதிர்­கால அர­சியல்

இலங்­கையின் எதிர்­கால அர­சியல் ஒரு நேரிய பாதையில் செல்­லு­மென்று நம்­பிக்கை கொள்ள முடி­யாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. இலங்­கையில் அர­சியல் கலா­சாரம் மிக மோச­மாக சிதை­வ­டைந்­துள்­ளது. அதனால், இன­வா­தமும் வன்­மு­றையும் ஏற்­ப­டு­கின்­றது.

ஆதலால், இலங்­கையின் எதிர்­கா­லத்தை சிறப்­பாக்கிக் கொள்­வ­தற்கு சிதை­வ­டைந்­துள்ள அர­சியல் கலா­சா­ரத்தை முதலில் சீர்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. அர­சியல் கலா­சா­ரத்தை சீர்­ப­டுத்­து­வ­தென்­பது மிகவும் கடி­ன­மான பணி­யாகும். இதற்கு ஆட்­சி­யா­ளர்­களும் அர­சி­யல்­வா­தி­களும் துணிவு கொள்ள வேண்டும்.

பேரி­ன­வாத அர­சி­யல்­வா­தி­களும் ஆட்­சி­யா­ளர்­களும் பேரி­ன­வாதக் கட்­சி­களும் தங்­களை மத­வாத கடும்­போக்­கு­வா­திகள், இன­வா­திகள் போன்­ற­வர்­களின் பிடி­யி­லி­ருந்து விடு­வித்துக் கொள்ள வேண்டும். அவர்­களின் தய­வி­னால்தான் வாக்­கு­களைப் பெற்றுக் கொள்­ள­லா­மென்ற நிலையை மாற்­றி­ய­மைக்க வேண்டும். இதனை இலங்கை தேசத்தின் எதிர்­காலத்­துக்­காக மேற்­கொள்ள வேண்டும். இந்த தூய எண்ணம் ஏற்­ப­டாத வரை இலங்­கையின் எதிர்­காலம் வெளிச்­சத்தைக் காணாது.

சிங்­கள மொழிச் சட்டம், பௌத்த மதத்­துக்கு அர­சியல் யாப்பின் மூல­மாக முன்­னு­ரிமை அளித்­தமை, பௌத்த புனித பூமி என்ற பெயரில் சிறு­பான்­மை­யி­னரின் காணி­களை பறித்துக் கொண்­டமை, அர­சாங்­கத்தின் நடு­நிலைத் தன்­மையில் காணப்­பட்ட பார­பட்சம் போன்ற பல கார­ணிகள் சிறு­பான்­மை­யி­ன­ரி­டையே காணப்­பட்ட சந்­தே­கங்­களை அதி­க­ரிக்கச் செய்­துள்­ளன என்­பது தெளி­வா­ன­தாகும்.

இந்த சந்­தே­கங்கள் நாம் இலங்­கையர் என்று இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு தடை­யாக இருந்து கொண்­டி­ருக்­கின்­றன. இலங்­கையர் என்ற அடை­யா­ளத்­துடன் இணை­யாது, இனத்­துவ அடை­யா­ளங்­க­ளுடன் இணைந்து செயற்­பட்டுக் கொண்டிருக்­கின்­றார்கள்.

இனத்­துவ அடை­யாளம் கார­ண­மாக நீதிக்கு மாற்­ற­மான நட­வ­டிக்­கை­களைக் கூட, எமது இனம் என்­ப­தற்­காக நியா­யப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.  இதேவேளை, ஆட்சியாளர்கள் தாம் இலங்கை மக்களின்ஆட்சியாளர்கள் என்று செயற்படாது, பெரும்பான்மையினத்தின் அரசாங்கம் என்ற அடிப்படையில் செயற்பட்டுக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையின் அரசியல் கலாசார சிதைவினால் ஏற்பட்டதாகும். இது தொடருமாயின் இலங்கையின் எதிர்காலம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாதாளத்துக்குள் அகப்பட்டுவிடும்.

ஆனால், மேற்படி குறைபாடுகளை கலைவதற்கு இலங்கையின் ஆட்சியாளர்கள் தயாரில்லை. இதற்கு முதல் இருந்த ஆட்சியாளர்களும் இவ்வாறுதான் செயற்பட்டார்கள். அவர்கள் இருக்கின்ற நிலைமையை இன்னும் மோசமாக்கிக் கொள்ளவும் அதன் மூலமாக அரசியல் இலாபம் அடைந்து கொள்ளவுமே எண்ணுகின்றார்கள். தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ள திட்டமிடுகின்றார்கள்.

கடந்த காலங்களில் தமிழர்களையும் முஸ்லிம்களையும் திட்டமிட்டு மோதவிட்ட சம்பவங்களும் உள்ளன.

சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை வழங்கியமையை ஏற்றுக் கொள்ளாத பௌத்த கடும்போக்குவாதிகள், கல்முனை உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டுமென்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டமை தமிழர்களின் மீதுள்ள பாசத்தினால் அல்ல.

மாறாக தமிழர்களையும் முஸ்லிம்களையும் பகைப்புலத்தில் வைத்துக் கொள்வதற்காகவேயாகும். இவர்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளும் காரணமாகும். கல்முனை உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்தினாலும் அதனைக் கூட பௌத்த கடும்போக்குவாதிகள் எதிர்ப்பார்கள்.

-சஹாப்தீன்