இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் இன்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்துள்ளார்.

குடியரசு தலைவர் மாளிகையிலிருந்து புறப்பட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்திற்கு செல்லவுள்ள  அமெரிக்க ஜனாதிபதி,  பிரதமர் நரேந்திர மோதி மற்றும் டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா  இந்தியாவுக்கு வருகை தந்தனர். 

அவர்கள் முதலில் ஆமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று, பின் அங்கு மொடேரா அரங்கத்தில் நடைபெற்ற `நமஸ்தே டிரம்ப்` நிகழ்ச்சியில் உரையாற்றியபின் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹாலை பார்வையிட்டனர்.

இதன்போது பலத்த பாதுகாப்பு, மற்றும்  அமோக வரவேற்பைக் கண்டு மனம் நெகிழ்ச்சியுடன் டிரம்ப் `நமஸ்தே டிரம்ப்` வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றியிருந்தார்.

அதற்கு உரையாற்றுகையில், இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பொருளாதார ரீதியில் அதிக வளர்ச்சிக்கண்டுள்ளதாக அவர் பாராட்டியிருந்தார். அத்தோடு, முக்கிய சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.