(ஆர்.விதுஷா)

ஓய்வூதியம் பெற்ற அனைத்து அரச ஊழியர்களினதும் ஓய்வூதியக்கொடுப்பனவில் காணப்படும் குறைபாடுகளை  நிவர்த்தி செய்து தருமாறு கோரி அகில இலங்கை ஓய்வூதியகாரர்களின் தேசிய இயக்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த எதிர்ப்பு ஆர்பாட்டம் இன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது. இதில் 300  இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதுடன், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவிருந்து ஜனாதிபதி செயலகம் வரை ஊர்வலமாக சென்றனர்.

இதன்போது  அவர்கள் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்ற சுலோகம் எழுத்தப்பட்ட பதாகைகளை  ஏந்தியவாறு  ஊர்வலமாக சென்றனர் .

ஜனாதிபதி செயலகத்தை அடைந்ததும் அவர்களில்  ஆறு  பேருக்கு  ஜனாதிபதி செயலகத்தினுள் சென்று  கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான அனுமதிவழங்கப்பட்டது.

இது தொடர்பில் அந்த சங்கத்தின் தேசிய  ஓருங்கிணைப்பாளரை  தொடர்பு கொண்டு வினவிய போது அவர் கூறியதாவது  , 

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய க் கொடுப்பனவு தொடர்பில்  பல்வேறு குறைபாடுகள்  காணப்படுகின்றன. 

இந்நிலையில் அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு உரிய  தரப்பினரிடத்தில் பல தடவைகள் முறைப்பாடுகளை  செய்திருந்தோம். அதேவேளை இரண்டு தடவைகள் வேலை நிறுத்த போராட்டங்களையும் மேற்கொண்டிருந்தோம்.

இருந்த போதிலும் எமது பிரச்சினைக்கு தீர்வு  கிட்டவில்லை.  ஆகவே , தான்  இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தை செய்தோம். இதன்  போது  ஜனாதிபதி செயலகத்தில் எமது பிரச்சினையை  முறையிடக்கூடியதாகவிருந்தது. 

நாளை பொது நிர்வாக  உள்நாட்டலுவல்கள்  , மாகாண சபைகள்  மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனுடன்  கலந்துரையாடுவதற்கான  வாய்ப்பை ஏற்படுத்தி  தருவதாக   ஜனாதிபதியின்  செயலாளர்  கூறியிருக்கின்றார். 

இருப்பினும் இன்றைய கலந்துரையாடலின் போது எமது பிரச்சினைகளுக்கான எந்த தீர்மானமும்  கிடைக்கப்பெறவில்லையென அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.