(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில் 14 ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள  கடற்படையின் முன்னாள் தளபதி அத்மிரல் ஒப் த ப்ளீட்  வசந்த கரன்னாகொடவை எதிர்வரும் மார்ச் 20  ஆம் திகதி கொழும்பு விஷேட நிரந்தர மேல் நீதிமன்றில் ஆஜராக மூவர் கொண்ட சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் இன்று  நான்காவது தடவையாகவும் அறிவித்தல் பிறப்பித்தது. 

பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் கடற்படையின் தளபதி ஊடாக கடந்த பெப்ரவரி 7 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட அறிவித்தல் செயற்படுத்தப்பட்டிருக்காத நிலையிலேயே இந்த நான்காவது அறிவித்தல் பாதுகாப்பு செயலாளர் ஊடாக இவ்வாறு பிறப்பிக்கப்பட்டது.

அவ்வாறு அனுப்பப்ப்படும் அறிவித்தலின் பிரதிகள் இரண்டை, கரன்னாகொடவின் தனிப்பட்ட முகவரிகளுக்கு பதிவுத் தபாலில் அனுப்புமாறும்,  மற்றொரு பிரதியை அவரது வீட்டில் சேவையாளர் ஒருவரிடம் கையளிக்குமாறும், மற்றொரு பிரதியை அவரது வீட்டில் வெளிப்படையான இடமொன்றில் ஒட்டி வைக்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்னத்தின் தலைமையின் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளான  அமல் ராஜகருணா, நவரத்ன மாரசிங்க ஆகியோர் உள்ளடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகளால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட  மூன்று அறிவித்தல்கள், வசந்த கரன்னாகொடவுக்கு கையளிக்கப்படத நிலையில், அவரை கண்டறிய முடியவில்லை என தொடர்ந்தும் மன்று பொலிஸ் தரப்பிலும், கடற்படை தரப்பிலும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அது குறித்து சட்ட மா அதிபர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் ஆராய்ந்து குற்றவியல் சட்டக் கோவையின் 45,46,47 ஆம் அத்தியாயங்களின் கீழ், அறிவித்தல் தொடர்பில் எடுக்க முடியுமான இந்த நடவடிக்கைகளை நீதிபதிகள் எடுத்து  அது குறித்த அறிவித்தலை பிறப்பித்தனர்.