(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கடந்த மூன்று மாத காலத்திற்குள் 700 பில்லியன் ரூபாய் வீண் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை உண்மைக்கு புறம்பானது. உண்மையில் அரசாங்கம் அவ்வாறு வீண் செலவு செய்துள்ளதென்றால் அதனை சஜித் பிரேமதாச ஆதரங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

எவ்வித ஆதரங்களும் இன்றி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த சில நாட்களாக முரண்பாடான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். நிதி அல்லது பொருளாதார விடயங்கள் பற்றி முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர போன்றிடம் சில தகவல்களைப் பெற்று தனக்கு தோன்றும் எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருக்கின்றார்.

அதற்கமையவே கடந்த மூன்று மாத காலத்தில் அரசாங்கம் 700 பில்லியன் வீண் செலவு செய்துள்ளதாகவும், அபிவிருத்தி மற்றும் கடன் பெற்றுக் கொள்ளல் தொடர்பில் பாராளுமன்றத்தில் சட்ட மூலமொன்றை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி தொடர்பான எந்தவொரு சட்ட மூலமும் அண்மையில் அரசாங்கத்தால் முன்வைக்கப்படவில்லை.

இவ்வாறு போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பானவர் என்றால் அவர் கூறியவற்றை ஆதரங்களுடன் நிரூபிக்க வேண்டும். அத்தோடு அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்கு நாளொன்றுக்கான செலவு, மாதமொன்றுக்கான செலவு, மூன்று மாதங்களுக்கான செலவு, 100 நாட்களுக்கான செலவு என்பவற்றை தெளிவுபடுத்த வேண்டும்.

எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை அரசாங்கத்தை நடத்திச் செல்வதில் எந்த சிக்கலும் இல்லை.

அந்த காலப்பகுதி வரையான செலவுகள் இடைக்கால கணக்கறிக்கை மூலம் திட்டமிடப்பட்டுள்ளன. அதற்கு பின்னரான மூன்று மாத காலப்பகுதிக்கான செலவுகளை அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களின் மூலம் கூட்டு நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.