குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு காணி வழங்கினாலும்  , அக்காணிகள் அவர்களுக்கு சொந்தமாக்கப்படுவதில்லை.   இந்நிலைமை மாற்றியமைக்கப்படும்.

காணி தொடர்பிலான அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண  காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஸ்தாபிப்பதற்கு ஒத்துழைப்பு  வழங்கியதையிட்டு பெருமையடைகின்றேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் 2500 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 1972 1ம் இலக்க காணி மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு சார்பாக  வாக்களித்து சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொண்டோம். இந்த சட்டத்தின்  பிரகாரம் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.இதனால் பெருமளவான காணிகள் அரசுடமையாக்கப்பட்டன.

விவசாய மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகளுக்கும் அரச காணிகள்  பயன்படுத்த வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.

இதுவரையில் இவ்வாறு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் 16 ற்கும் அதிகமாள நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளேன். கடந்த அரசாங்கத்தில் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் போது  அவற்றில் மஹிந்த ராஜபக்ஷ என்ற கைச்சாத்து இடப்பட்டுள்ளது.

 ஆனால் காணி உறுதிப்பத்திரங்களை அப்போதைய ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.

 காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளில்  வசிக்கும் 2500 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கி  வைக்கப்படுகின்றது.

பல காலமாக காணி உறுதிப்பத்திரம் இல்லாததினால் இந்த மக்கள் பல  பிரச்சினைகளை எதிர்க் கொண்டுள்ளார்கள். பல  முறைப்பாடுகள் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. குறைந்த வருமானத்தை பெறும்   மக்களுக்கு காணிகளை ஒதுக்கியிருந்தாலும் அவற்றில் பல அடிப்படை  பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.

 ஒவ்வொரு காணிகளுக்கு நட்டஈடு  செலுத்துபவர்களும் உள்ளார்கள். இவ்வாறான பல வழக்குகள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான நட்டத்தை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் கோருகின்றார்கள். அத்துடன் காணியை ஒப்பந்த அடிப்படையில் பெற்றவர்களும்  நட்டஈடு கோருகின்றார்கள்.  128 கோடி நட்ட ஈடாக வழங்க வேண்டும் என  மதிப்பிடப்பட்டுள்ளது.

நடுத்தர குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்  என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.