ஐ.நா மனித உரி­மைகள்  பேர­வையில்   நிறை­வேற்­றப்­பட்ட 30/1 தீர்­மா­னத்­துக்கு வழங்­கப்­பட்ட இணை அனு­ச­ர­ணையில் இருந்து விலகிக் கொள்ளும் முடிவை அர­சாங்கம் எடுத்­தி­ருக்­கி­றது. இந்த முடிவு, ஏற்­க­னவே எதிர்­பார்க்­கப்­பட்ட ஒன்று தான்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக்ஷவின் தேர்தல் அறிக்­கையில் கூறப்­பட்­டி­ருந்த விட­யமே இது என்றும், ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்கள் அளித்த ஆணைக்கு அமை­யவே, இந்த முடிவு எடுக்­கப்­பட்­ட­தா­கவும், அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க கூறி­யி­ருந்தார்.

ஆனால், இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா மற்றும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கு, அமெ­ரிக்கா பயணத் தடை விதித்­ததை அடுத்தே, அர­சாங்கம் இந்த முடிவை எடுத்­தி­ருப்­ப­தாக பிர­தமர் மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்­துள்ளார்.

ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் அமர்வு நாளை ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில், அர­சாங்­கத்தின் இந்த முடிவு வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது.

அர­சாங்­கத்தின் இந்த முடிவு குறித்து கவலை வெளி­யிட்­டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் மிச்சேல் பச்லெட் அம்­மையார், ஜெனீவா வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் நிறை­வேற்ற வேண்டும் என்றும் குறிப்­பாக பொறுப்­புக்­கூறல் மற்றும் பாது­காப்­புத்­துறை  மறு­சீ­ர­மைப்­பு­களை இலங்கை முன்­னெ­டுக்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார். அதே­வேளை, ஜெனீவா தீர்­மா­னத்தில் இருந்து அர­சாங்­கத்­தினால் விலக முடி­யாது என்றும், விலகப் போவ­தாக கூறு­வது சிங்­கள மக்­களை ஏமாற்­று­வ­தற்­கான பூச்­சாண்­டியே எனவும் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் கூறி­யி­ருக்­கிறார்.

கடை­சி­யாக இலங்கை அர­சாங்கம், 2019 மார்ச்சில் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு செல்­லு­ப­டி­யாகும் தீர்­மா­னத்­துக்கு இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது என்றும் அந்த ஆணை அடுத்த ஆண்டு மார்ச் வரை தொடரும் என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

ஜெனீவா தீர்­மா­னத்தை நிறை­வேற்­றிய உறுப்பு நாடு­க­ளுடன் நடத்­திய பேச்­சுக்­களின் பின்னர், கருத்து வெளி­யிட்­டி­ருந்த எம்.ஏ.சுமந்­திரன், அவ்­வாறு இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னத்தில் இருந்து விலக இட­ம­ளிக்கப் போவ­தில்லை என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஜெனீவா தீர்­மா­னத்தில் இருந்து விலகும் முடிவை, அர­சாங்கம் எடுத்­தி­ருந்­தாலும் அதற்கு அமைச்­ச­ரவை அனு­மதி பெறப்­பட்­டி­ருந்­தாலும் அது­பற்றி பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ அதி­கா­ர­பூர்­வ­மாக அறிக்கை மூலம் கூறி­யி­ருந்­தாலும் இந்த முடிவு ஜெனீ­வாவில் தெரி­யப்­ப­டுத்­தப்­பட வேண்டும். உறுப்பு நாடு­க­ளிடம் அறி­விக்கப்பட வேண்டும்.

நாளை ஆரம்­ப­மாகும் பேரவைக் கூட்­டத்­தொ­டரில் பங்­கேற்று வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஸ் குண­வர்­தன இந்த முடிவை அறி­விப்பார் என்று கூறப்­ப­டு­கி­றது.

அவர், அவ்­வாறு முடிவை அறி­விக்­காது போனாலும் ஜெனீவா தீர்­மான கடப்­பாட்­டி­லி­ருந்து அர­சாங்கம் ஏற்­க­னவே விலகி விட்­டது என்­பது தான் உண்மை.

 2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ பத­விக்கு வந்த பின்னர்,  அடுத்த ஆண்­டி­லேயே விடு­தலைப் புலி­களுக்கும் அரச படை­க­ளுக்கும் இடையில் போர் தொடங்கி விட்­டது.

ஆனாலும், 2002 ஆம் ஆண்டு நோர்­வேயின் ஏற்­பாட்டில், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் பிர­பா­க­ரனும் கையெ­ழுத்­திட்­டி­ருந்த போர்­ நி­றுத்த புரிந்­து­ணர்வு உடன்­பாடு நடை­மு­றை­யி­லேயே இருந்து வந்­தது.

போர்­நி­றுத்த உடன்­பாடு முறித்துக் கொள்­ளப்­ப­டு­வ­தாக முறைப்­படி அறி­விக்­கப்­ப­டா­ம­லேயே இரு­த­ரப்பும் போரில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­தன.  

2006 ஜூலை மாதமே இரண்டு தரப்­பு­க­ளுக்கும் இடை­யி­லான போர் மாவி­லாறில் தொடங்­கி­யது. அதற்குப் பின்னர், முக­மா­லையில் 2006 ஓகஸ்ட் மாதமே முழு அள­வி­லான போர் வெடித்­தி­ருந்­தது.

ஆனாலும், போர்­நி­றுத்த உடன்­பாட்­டி­லி­ருந்து விலகிக் கொள்­வ­தாக அர­சாங்கம் 2007 பெப்­ர­வரி மாதமே அறி­வித்­தி­ருந்­தது.

போர்­நி­றுத்த உடன்­பாடு நடை­மு­றையில் இருந்­தாலும் அதனைக் கடைப்­பி­டிக்­கா­ம­லேயே இருந்­தது போலத் தான், ஜெனீவா தீர்­மா­னத்தில் இருந்து வில­கா­வி­டினும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தா­ம­லேயே அர­சாங்­கத்­தினால் காலத்தை கடத்­தி­யி­ருக்க முடியும்.

தற்­போது பொதுத்­தேர்தல் ஒன்று வராமல் இருந்­தி­ருந்தால் அர­சாங்கம் அவ்­வா­றா­ன­தொரு முடிவைத் தான் எடுத்­தி­ருக்கும். இதன் மூலம், சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு அர­சாங்கம் முகம் கொடுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருக்­காது.

ஆனால் பொதுத்­தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சிங்­கள பௌத்த வாக்­கு­களை கைப்­பற்­று­வ­தற்­காக அவர்­களை உசுப்­பேற்றி உணர்ச்சி வச நிலையில் வைத்­தி­ருப்­ப­தற்கு, ஜெனீவா தீர்­மா­னத்­தி­லி­ருந்து விலகும் முடிவை அர­சாங்கம் எடுத்­தி­ருக்­கி­றது.

அதற்கு ஒரு காரணம் தேவைப்­பட்­டது, இரா­ணுவத் தள­பதி லெப். ஜெனரல் சவேந்­திர சில்­வா­வுக்கு அமெ­ரிக்கா விதித்த தடையை கார­ண­மாக மாற்­றி­யி­ருக்­கி­றது.

இந்தக் காரணம் கிடைக்­காமல் போயி­ருந்தால் கூட, அர­சாங்கம், ஜெனீவா தீர்­மா­னத்­தி­லி­ருந்து விலகும் முடிவை எடுத்­தி­ருக்கும்.

ஏனென்றால், பொதுத்­தேர்­தலில் அர­சாங்­கத்­துக்கு சில பிர­மாண்­ட­மான பிர­சா­ரங்கள் தேவைப்­ப­டு­கின்­றன.

ஜனா­தி­பதித் தேர்­தலில் தேசிய பாது­காப்பு என்ற பூச்­சாண்டி பெரி­து ­ப­டுத்­தப்­பட்­டது. ஆட்­சிக்கு வந்து விட்­டதால், இனி அதனை முன்­னெ­டுக்க முடி­யாது.  நாட்டின் இறைமை, சுதந்­திரம் போன்­ற­வற்றை தான் அடுத்­த­தாக கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  இரா­ணுவத் தள­ப­திக்கு விதிக்­கப்­பட்ட தடை அதற்குச் சாத­க­மா­ன­தாக அமைந்­தி­ருப்­பதால், இந்தச் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்திக் கொண்டு ஜெனீவா தீர்­மா­னத்­தி­லி­ருந்து விலகப் போவ­தாக அறி­வித்­தி­ருக்­கி­றது.

அர­சாங்கம் ஜெனீவா தீர்­மா­னத்­தி­லி­ருந்து வில­காமல் போனாலும், இதனை நடை­மு­றைப்­ப­டுத்தும் என்­றில்லை. அதுவும் பொறுப்­புக்­கூறல், பாது­காப்பு மறு­சீ­ர­மைப்பு விவ­கா­ரங்­களில் அர­சாங்கம் எந்த வாக்­கு­று­தி­யையும் நிறை­வேற்­றாது.

தற்­போ­தைய அர­சாங்கம் பாது­காப்பு மறு­சீ­ர­மைப்­புக்கு பதி­லாக, சிவில் நிர்­வா­கத்தில் இரா­ணுவத் தலை­யீ­டு­களை அதி­க­ரித்துக் கொண்­டி­ருக்­கி­றது.

ஏற்­க­னவே பாது­காப்புச் செயலர், துறை­முக அதி­கார சபை தலைவர், தொலைத் தொடர்பு ஒழுங்­க­மைப்பு ஆணைக்­குழு தலைவர், விமான நிலை­யங்கள் அதி­கார சபைத் தலைவர் உள்­ளிட்ட பல பத­வி­க­ளுக்கு முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரிகள் பலர் நிய­மிக்­கப்­பட்ட நிலையில், இப்­போது சுங்கப் பணிப்­பா­ள­ராக மேஜர் ஜெனரல் விஜித ரவிப்­பி­ரிய  நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

இவ்­வா­றாக, சிவில் நிர்­வாகப் பத­வி­களில் இரா­ணுவ அதி­கா­ரி­களை அமர்த்தி, இரா­ணுவ ஆட்­சியை நோக்கி நாட்டை நகர்த்திக் கொண்­டி­ருக்கும் அர­சாங்கம், ஐ.நா மனித உரி­மைகள் பேர­வை­யினால் முன்­மொ­ழி­யப்­பட்ட பாது­காப்பு மறு­சீ­ர­மைப்புத் திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு வாய்ப்­பில்லை.

அதை­விட, போரில் மீறல்கள் நடக்­க­வில்லை என்று கூறும் அர­சாங்கம், போர்க்­கா­லத்தில் நடந்த மீறல்­களை விசா­ரிக்­கவோ பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான வழி­மு­றை­களை பின்­பற்­றவோ வாய்ப்­புகள் இல்லை.

அர­சாங்கம் பொறுப்­புக்­கூ­றலை முன்­னெ­டுக்கத் தவ­றி­யது தான் இரா­ணுவத் தள­பதி மீதான அமெ­ரிக்­காவின் தடைக்குக் காரணம்.

ஐ.நா விசா­ரணை அறிக்­கையில் போர்க்­குற்­றங்கள் குறித்த நம்­ப­க­மான குற்­றச்­சாட்­டுகள் அவர் மீது இருப்­ப­தாக கூறப்­பட்­டுள்­ளதை அமெ­ரிக்கா சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­றது.

அர­சாங்­கமோ அவர் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளவை ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்­டுகள் என்றும் நிரூ­பிக்­கப்­ப­டாத குற்­றச்­சாட்­டுகள் என்றும் கூறி­யுள்ள பிர­தமர், குற்றம் நிரூ­பிக்­கப்­ப­டாத வரையில் எவரும் குற்­ற­வா­ளிகள் அல்ல என்று நியா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ.

இரா­ணுவத் தள­பதி மீது சுமத்­தப்­பட்­டுள்ள போர்க்குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் அரசாங்கம், அந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் பொறிமுறையைக் கூட தீர்மானிக்கும் பொறுப்பை அரசாங்கத்திடமே ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஒப்படைத்திருந்தது.

பொறுப்புக்கூறலுக்கான விசாரணைப் பொறிமுறையை உருவாக்காமல், குற்றச்சாட்டுகளை விசாரிக்க நடவடிக்கை எடுக்காமலேயே பொய்யான குற்றச்சாட்டுகள் என்று காலத்தைக் கடத்தி வந்திருக்கிறது அரசாங்கம்.

இனிமேலும், அந்த இழுத்தடிப்பு சாத்தியமில்லை என்பதை தான் இராணுவத் தளபதி மீதான தடை எடுத்துக் காட்டியிருக்கிறது.

இந்த தடையுடன் எல்லாம் முடிந்து போய் விடும் என்றில்லை. இதற்குப் பின்னர் என்ன நடக்கப் போகிறது என்பது தான் முக்கியமானது.

-சுபத்ரா