கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகை முனையத்திற்கு அருகில் பயணிகளுடன் முரண்பாட்டில் ஈடுப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களை, விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இவர்கள் சட்டவிரோதமான முறையில், விமான நிலையத்தில் வருகை முனையத்திற்கு அருகில் தரகர்களாகச் செயற்படுபர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று முன் தினம் இரவு 9.45 மணியளவில் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனையின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் 42 மற்றும் 49 வயதுடைய ஹரித்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும், ஒரே நாளில் பயணிகளைத் தாக்கியதாகக் கூறப்படும் இரண்டு நபர்களையும், பயணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் மேலும் இருவரையும், கட்டுநாயக்க விமான நிலையப் பொலிசார் கைது செய்துள்ளனர். 

இதேவேளை, 2020 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல், கட்டுநாயக்க விமான நிலைய முனையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 60 பேர் வரை கைது கைது செய்யப்பட்டுள்ளதாக, கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.