இணை அனுசரணை வழங்கி சர்வதேச அரங்கில் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் பிரேரணையில் இருந்து விலகுவதற்கு ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானத்தை பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குவணவர்தன நேரடியாக அறிவிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும்போக்குடைய அரசாங்கத்தின் இந்த நகர்வு, தமிழர் பிரச்சினையில் சர்வதேசம் கொண்டிருக்கின்ற கரிசனையும் அக்கறையும் அற்றுப் போகச் செய்துவிடுமோ என்ற அச்சத்தைத் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இதனால் தீர்க்கப்படாமல் இழுபறிபட்டுச் செல்கின்ற இனப்பிரச்சினைக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கான அடுத்த கட்ட நகர்வு கடினமானதாக இருக்கப் போகின்றதே என்ற ஏக்கமும் மக்கள் மனங்களில் தலையெடுத்துள்ளது.
ஐ.நா. பிரரேரணைக்கு மைத்திரி – ரணில் இரட்டையர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் கொண்டிருந்த இணை அனுசரணையைக் கைவிடுவது, அத்துடன் இந்தப் பிரேரணையில் இருந்து விலகுவது என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ அறிக்கையொன்றின் மூலம் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும், அமைச்சர் என்ற ரீதியில் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 30/-1 மற்றும் 40-/1 ஆகிய இரண்டு தீர்மானங்களில் இருந்தும் அரசு விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
ஐ.நா. பிரேரணையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று 2019 ஜனாதிபதி தேர்தலின்போது மக்களுக்கு அளித்திருந்த வாக்குறுதியின் அடிப்படையில், அந்தத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற கடப்பாட்டைக் கொண்டுள்ள அரசாங்கம் அதனை நிறைவேற்றும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்தத் தீர்மானம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 30-/1 தீர்மானத்திற்கு முன்னைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி அதனை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்தமை ஒரு வரலாற்றுத் தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வரலாற்றுத் தவறினாலேயே ஏனைய நாடுகள் இலங்கையின் பாதுகாப்புப் படைகள் மீது மனித உரிமைகள் குறித்த குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கின்றன என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தார் என்பதற்காக இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவும், அவருடைய குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க முடியாது என்று அமெரிக்கா விதித்துள்ள தடை உத்தரவையடுத்தே, ஐ.நா. பிரேரணையில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொருத்தமான நடவடிக்கையா.....?
மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் என்பன நம்பகமான தகவல்களின் அடிப்படையிலேயே இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்டுள்ளன என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாகும். அதனடிப்படையிலேயே அவர் தனது நாட்டுக்குள்ளே நுழைய முடியாது என அமெரிக்கா தடைவிதித்துள்ளது.
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றச் செயற்பாடுகள் குறித்து ஐ.நா. மேற்கொண்டிருந்த மூவரடங்கிய விசாரணைக்குழுவினால் வெளியிடப்பட்ட தருஸ்மன் அறிக்கையில் யுத்த மோதல்களின் போது 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி
யாக இருந்த சவேந்திர சில்வா மீது ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அவற்றை ஆதாரமாகக் கொண்டே இராணுவத் தளபதி மீது மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவருக்கு எதிராக அமெரிக்கா தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனை மிகப் பாரதூரமான ஒரு விடயமாக அரசாங்கம் கருதி, அதற்கு மாற்று நடவடிக்கையாக ஐ.நா. பிரேரணையில் இருந்து விலகுவதற்கான முடிவை மேற்கொண்டுள்ளது.
ஒரு நாட்டின் இராணுவத் தளபதி என்பது சாதாரண பதவியல்ல. அது அரசியல் ரீதியாகவும், பாதுகாப்பு நிலைமை தொடர்பிலும் அதி உயர்ந்த, அதி கூடிய கௌரவத்துக்கும் மரியாதைக்கும் உரியதொரு பதவியாகும். நாட்டின் உயர் நிலையில் உள்ள அரசியல் தலைவர்களாகிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வரிசையில் மிக முக்கியமான அடுத்த நிலையில் இராணுவத் தளபதி இடம்பெறுகின்றார்.
அத்தகைய பதவியில் உள்ள ஒருவருக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றம் சுமத்தி பிரயாணத் தடை விதிக்கப்படுவது அந்த நாட்டின் வெளிவிவகார கௌரவத்திற்கு இழுக்கானதாகும். அத்தகைய ஒரு நிலைமையானது சர்வதேச அரங்கில் அந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாகும். இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இருந்து விலகுவதற்கு எடுத்துள்ள முடிவு அரசியல் ரீதியாக உணர்வுபூர்வமான ஒரு நிலைப்பாடு என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் எனக் கூறி, இராணுவத் தளபதிக்கு அமெரிக்காவே தனது நாட்டுக்குள் வரக்கூடாது என தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. உரிமை மீறல்கள், போர்க்குற்றச் செயற்பாடுகள் தொடர்பிலான இந்தத் தடை உத்தரவை ஐ.நா.வோ அல்லது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையோ பிறப்பிக்கவில்லை.
அதேவேளை, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா இப்போது உறுப்புரிமை கொண்டிருக்கவுமில்லை. அந்த வகையில் அமெரிக்காவின் தடை உத்தரவுக்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தீரமானத்திற்கும் நேரடியான தொடர்பு இல்லையென்றே கூற வேண்டும்.
இருப்பினும் ஐ.நா.வினால் நியமிக்கப்பட்ட தருஸ்மன் குழுவினருடைய விசாரணை அறிக்கையின் தகவல்களுக்கு அமைவாகவே போர்க் குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா முன்வைத்துள்ளது என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டியதைத் தவிர்க்க முடியாது. அதற்காக தானே முன்வந்து இணை அனுசரணை வழங்கி நிறைவஉேற்றிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய இணை அனுசரணையைக் கைவிட்டு, 30-/1 தீர்மானத்தில் இருந்து விலகுவதாக ஒருதலைப்பட்சமாக அரசாங்கம் முடிவெடுத்திருப்பது பொருத்தமான ஒரு நடவடிக்கையாகத் தோன்றவில்லை.
விவாதம் முக்கியத்துவம் பெற்றிருக்கும்
இலங்கையின் போர்க்கால மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு அமைய பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடு குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சில தினங்களில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், அதில் இருந்து விலகுவதாக அரசாங்கம் அறிவித்திருப்பதும் சாதாரண விடயமல்ல.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அங்கத்துவம் பெற்றுள்ள உலக நாடுகளின் முன்னிலையில் தனக்கு எதிரான ஒரு பிரேரணைக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகளில் இணை அனுசரணை வழங்கி, அதனை நிறைவேற்றுவதாக வாக்களித்து அதனை நிறைவேற்றிய அரசாங்கம் எழுந்தமானதாக அதில் இருந்து விலகிக் கொள்ள முடியாது. அவ்வாறு பின்வாங்குவது, பல்வேறு பக்கவிளைவுகளையும் பின்விளைவுகளையும் ஏற்படுத்துகின்ற விவகாரமாக விஸ்வரூபம் எடுப்பதற்கே வழிவகுக்கும்.
உலக அரசியல் ஒழுங்கில் ஜனநாயக
நடைமுறையும் மனித உரிமைகளைப் பேணுகின்ற தன்மையும் மிகவும் முக்கியமான அம்சங்களாகக் கருதப்படுகின்றன. அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு விடயங்களில் நாடுகளின் வாக்குச்சுத்தம் மிக முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. வாக்குத் தவறுபவர்கள் தொடர்பில் சர்வதேசம் மிகவும் விழிப்பாக நடந்து கொள்ளும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
இது ஒருபுறமிருக்க, இந்த வருட மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை ஏற்கனவே அரசாங்கத்திற்குக் கையளிக்கப்பட்டு, பதில் கோரப்பட்டிருந்த போதிலும், அதுகுறித்த கருத்துக்கள் எதனையும் வெளியிட அரசாங்கம் மறுத்துவிட்டது. அதனைத் தொடர்ந்து அந்த அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்லெட்டின் அந்த அறிக்கை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதும் உறுப்பு நாடுகளின் விவாதத்திற்கு விடப்படும். அப்போது பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படும். அதன் மூலம் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் அறிக்கையில் உள்ளடக்கப்படாத பல்வேறு விடயங்களும் வெளிச்சத்திற்கு வரக் கூடிய சந்தர்ப்பமும் காணப்படுகின்றது.
ஆனால் இந்த விடயம் தொடர்பிலான விவாதம் நிச்சயமாக இலங்கை அரசுக்கு மகிழ்ச்சி அளிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கமாட்டாது என்றும் நிச்சயமாக நம்பலாம். விவாதத்தைத் தொடர்ந்து சர்வதேச அரங்கில் இலங்கை பல்வேறு நிலைமைகளுக்கு முகம் கொடுக்கத்தக்க சந்தர்ப்பங்களும் ஏற்படுவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன.
ஏனெனில் மனித உரிமைகள் நிலைப்பாட்டில், மனித உரிமைகளைப் பேணி நடக்கின்ற கைங்கரியத்தில் இலங்கையை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்பதையும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பச்லெட் தனது அறிக்கையில் அழுத்தி உரைத்திருக்கின்றார்.
நிலைமை என்ன?
பொறுப்பு கூறும் கடப்பாட்டில் முன்னைய அரசாங்க காலத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும். புதிய அரசாங்கத்தின் கடும் போக்கு அந்த முன்னேற்ற நிலைமைகளைப் பின்னடையச் செய்துள்ளமையையும் மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
பிரேரணையில் இருந்து விலகிக்கொள்வதாக அரசாங்கம் தீர்மானித்திருக்கின்ற அதேநேரத்தில் அந்த 30-/1 பிரேரணையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார். பிரேரணையில் இருந்து வெளியேறுவதன் மூலம் பொறுப்புக் கூறுகின்ற கடப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி இடுகின்ற பாங்கிலான அரசாங்கத்தின் அணுகுமுறை வெளிப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டி பிரேரணையின் பல்வேறு அம்சங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.
இந்த வருட அமர்வின்போது மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான மனித உரிமை நிலைமைகள் வெளிப்படுத்தப்பட்டு அவை தொடர்பில் விவாதிக்கப்படுமேயொழிய புதிய தீர்மானங்கள் எதனையும் எடுப்பதற்குத் திட்டமிடப்படவில்லை.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஓர் ஒழுங்கிலேயே இலங்கையின் மனித உரிமை விவகாரம் மனித உரிமைகள் பேரவையில் கையாளப்படும். கையாளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த அமர்வின் போது இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்னும் முடிவடையவில்லை. அந்த அவகாசம் முடிவடையும் வரையில் புதிய தீர்மானங்களை எடுப்பதற்கான அறிகுறிகளையோ ஏற்பாடுகளையோ மனித உரிமைப் பேரவையில் இதுவரையில் காணப்படவில்லை.
ஆகவே, இம்முறை அரசாங்கம் தனது கருத்துக்களை வெளியிடுவதற்கு ஒரு சந்தர்ப்பமும் அதனைத் தொடர்ந்து அவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஆணையாளரின் அறிக்கை தொடர்பிலான விவாதத்தில் கருத்துக்களை வெளியிடுவதற்கான சந்தர்ப்பமும் கிட்டலாம். அதனைவிட வேறு எந்தவித முன்னேற்றமும் இப்போதைக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படவில்லை.
குறிப்பாக அரசாங்கம் தலைகீழாக நின்றாலும்கூட உடனடியாக ஐ.நா. தீர்மானத்தில் இருந்து இலகுவில் அதனால் வெளியேறிவிட முடியாது. அதேபோன்று ஏற்கனவே இலங்கை அரசினால் வழங்கப்பட்டுள்ள இணை அனுசரணை என்ற நிலைப்பாட்டையும் கைவிட்டு முழுமையாக அதிலிருந்து விலகிவிடவும் முடியாது.
இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவதற்கு மனித உரிமைப் பேரவை புதிதாகத் தீர்மானங்களை உருவாக்கி அதனை பேரவையின் அமர்வில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் இந்த அமர்வின் போது இடம்பெறும் என்று எழுந்தமானமாகக் கூற முடியாது. ஏனெனில் இது போன்ற விடயங்களைக் கையாள்வதற்கு மனித உரிமைப் பேரவையில் நிலையியல் கட்டளை வடிவிலான காலக்கிரமத்துடன் கூடிய ஒழுங்கு முறைகள் இருக்கின்றன. அந்த ஒழுங்கு முறைகளை மீறி அரசாங்கத்தின் கடும் போக்கிற்கும், தீவிரமான உணர்வு நிலைப்பாட்டிற்கும் ஏற்ற வகையில் நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது.
ஆனால் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கமைவாக பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டில் இருந்து இலகுவாக வெளியேறிவிடலாம் என்ற வகையிலான ஒரு மாயத் தோற்றத்தை சிங்கள மக்கள் மத்தியிலும், சிங்களப் பேரின தீவிரவாதப் போக்குடைய தனது ஆதரவு தளத்திலும் அரசு ஏற்படுத்தியிருப்பதைத் தெளிவாகக் காண முடிகின்றது.
சிங்கள மக்களையும் தனது ஆதரவு தளத்தில் உள்ளவர்களையும் தனக்கு வசதியான வகையில் கையாள்வதற்கு இராணுவத் தளபதி மீது விதிக்கப்பட்டுள்ள அமெரிக்க தடை உத்தரவு மிகவும் வசதியான ஒரு வாய்ப்பை அரசுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வரப்போகின்ற பொதுத் தேர்தலில் சிங்கள மக்களின் பேராதரவைத் திரட்டுவதற்கான ஒரு தந்திரோபாயச் செயற்பாடாகவும் இந்த விடயத்தை அரசு கையாண்டிருக்கின்றது என்பதே உண்மையான அரசியல் நிலைமை.
அதேநேரத்தில் ஐ.நா. பிரேரணையில் இருந்து விலகிக் கொள்வதாக அரசாங்கம் எடுத்துள்ள முடிவு குறித்து காரண காரியங்களுடனான அச்ச நிலைமையே ஏற்பட்டுள்ளது. ஓர் அரசாங்கம் மனித உரிமைப் பேரவையின் நடவடிக்கைகளில் இருந்து விலகிக் கொள்ள விரும்பினால் அவ்வாறு விலகிக் கொள்ளலாம்தானே, அவ்வாறு விலகினால் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூற வேண்டும் என்ற அரசாங்கத்தின் மீதான சர்வதேசத்தின் பிடி கைவிட்டுப் போகலாம் அல்லவா என்ற வகையிலான நியாயப்பாடுகளும் சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
அவ்வாறு அரசாங்கம் விலகிக்கொண்டால், ஐ.நா. செயற்பாட்டாளர்களையும், சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரையும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வெளியேற்றிவிட்டு சாட்சியமற்ற யுத்தமாக முள்ளிவாய்க்காலில் அரச படைகள் கோரத்தாண்டவம் ஆடியதைப் போன்ற ஒரு நிலையில்; அரசாங்கம் செயற்பட ஆரம்பித்துவிடுமே என்ற அச்சமும் சாதாரண மக்கள் மத்தியில் தென்படுகின்றது.
இந்த நிலையில் அரசாங்கம் ஐ.நா. தீர்மானம் தொடர்பில் எடுத்துள்ள நிலைப்பாட்டைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே நன்கு அறிந்திருந்தது என்றும் அது குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் வட்டாரங்களில் தெளிவுபடுத்தி அவர்களை உசார்படுத்துகின்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்ற தோற்றம் தமிழ்த்தரப்பில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
ஐ.நா. தீர்மானத்தில் இருந்து அரசு வெளியேறினால் அதற்கான மாற்று நடவடிக்கைகளுக்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தயாராக இருப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆயினும் அந்த மாற்று நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்த விபரங்களை அவர் வெளியிடவில்லை. அதற்கான அவசியம் இப்போது ஏற்படவில்லை என்ற காரணத்திற்காக அதனை அவர் வெளியிடாமல் இருக்கக் கூடும்.
விட்டுக்கொடுப்புமில்லை வினைத்திறனுமில்லை
ஆனால் இங்கேயும் பொதுத்தேர்தலையொட்டிய பிரசார அரசியல் நெடியை உணர முடிகின்றது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அதற்காக சர்வதேச நாடுகள் மத்தியில் சாதகமான ஒரு நிலைமையை உருவாக்கியிருப்பதாகவும் அது விடயத்தில் தொடர்ந்து செயற்பட்டு வருவதான ஒரு தோற்றமும் ஏற்கனவே மக்கள் மத்தியில் தொடர்ச்சியாகக் காட்டப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் ஐ.நா. தீர்மானத்தில் இருந்து அரசாங்கம் வெளியேறுவதற்கான முடிவை மேற்கொண்டுள்ளமையினால், தமிழ் மக்கள் அனைவரும் ஓர் அணியில் அதுவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பின்னால் அணி திரள வேண்டும் என வலியுறுத்தி கருத்துக்கள் வெளியாகத் தொடங்கி இருக்கின்றன.
தேர்தலாக இருந்தாலும்சரி தேர்தல் இல்லாவிட்டாலும்சரி, சிங்கள பௌத்த தேசியத்தை முதன்மைப்படுத்தி அதனைத் தூக்கி நிறுத்துவதற்காகப் பல்வேறு வழிகளிலும் பாடுபட்டு வருகின்ற சிங்கள பௌத்த தீவிரவாதச் செயற்பாடுகளுக்கு உறுதியாக முகம் கொடுப்பதற்காக தமிழ் மக்கள் ஓரணியில் உறுதியாக ஒன்றிணைந்திருக்க வேண்டியது அவசியம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால் மக்கள் மாத்திரம் ஓரணியில் திரண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற தமிழ் அரசியல் தலைமைகள் தாங்கள் ஏன் ஓரணியில் ஒன்று திரளாமல் இருக்கின்றன என்ற கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை.
தமிழ் அரசியல் கட்சிகளானாலும்சரி, தமிழ் அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளானாலும்சரி தாங்கள் தாங்களே பெரியவர்கள், தங்களால் மட்டுமே முடியும் என்ற வகையிலான ஒற்றைப் போக்கிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முரண்பாடுகள் இருந்தாலும் கொள்கைகள் என்று வரும்போது எல்லோரும் கிட்டத்தட்ட ஒத்த வகையிலான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் தமிழ் மக்களை முதன்மைப்படுத்தி அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், ஏனைய பிரச்சினைகளுக்கும் முடிவு காணப்பட வேண்டும் என்ற காரணங்களை முன்வைத்து, உள்ளூராட்சி மன்றங்கள், மாகாணசபைகள் மற்றும் நாடாளுமன்றம் என்பவற்றில் உறுப்புரிமைகளைப் பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே நோக்கம் கொண்டு செயற்படுகின்றார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து தங்களுக்குள் விட்டுக்கொடுத்து. ஒன்றிணையத் தயாராக உள்ள மக்களை அணிதிரட்டி தமிழ்த்தரப்பை அரசியலில் பலப்படுத்துவதற்கும், பேரம் பேசுவதற்கான சக்தியை வளர்த்துக் கொள்வதற்குமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக இல்லை.
இந்த நிலைமை மிகவும் மோசமானது. தமிழ் மக்களை அரசியலில் மேலும் மேலும் பின்னடையச் செய்வதற்கும், பாரதூரமான நிலைமைகளை எதிர்கொள்வதற்குமே இந்த நிலைமை இட்டுச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
- பி.மாணிக்கவாசகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM