(செ.தேன்­மொழி)

அர­சாங்கம் உகந்த பொரு­ளா­தார கொள்­கை­யின்றி செயற்­ப­டு­வதன் கார­ண­மா­கவே நாடு பெரும் பொரு­ளா­தார நெருக்­க­டியை எதிர்­நோக்கி வரு­கின்­றது என்று கூறி­யி­ருக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஜித்  மன்­னப்­பெ­ரும, ஜனா­தி­பதி தேர்­தலில் இழைத்­ததைப் போன்ற தவறை மக்கள் மேலும் செய்­யாமல் எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் விவே­கத்­துடன் சிந்­தித்து செயற்­பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனை அவர் குறிப்­பிட்டார்.

செய்­தி­யாளர் சந்­திப்பில்   அவர் மேலும் கூறி­ய­தா­வது,

அர­சாங்கம் உகந்த பொரு­ளா­தார கொள்­கை­யின்றி செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது. இதன்­கா­ர­ண­மா­கவே இன்று அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை அதி­க­ரித்­துள்­ளன. எமது ஆட்­சிக்­கா­லத்தில் 52 நாட்கள் அர­சியல் நெருக்­கடி, உயிர்த்த ஞாயி­று­ தாக்­கு­தல்கள் போன்ற சம்­ப­வங்­க­ளுக்கு மத்­தியில் நாங்கள் அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை­களை இவ்­வாறு மக்­க­ளுக்கு சுமை ஏற்­ப­டுத்தும் வகையில் அதி­க­ரிக்­க­வில்லை, இவ்­வா­றான சந்­த­ர்ப்­பத்தில்கூட சர்­வ­தேச கடனை செலுத்த முடி­யாது என்று குறிப்­பிட்டு இந்­தி­யா­வுக்கோ அல்­லது ஏனைய நாட்­டுக்கோ சென்று கையேந்தி நிற்­க­வில்லை. பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ இந்­தி­யா­வுக்குச் சென்று இந்­திய பிர­தமர் நரேந்­திரமோடி­யிடம் கடனை கட்­டு­வ­தற்­காக 3 வருட கால­ அவ­கா­சத்தை பெற்றுக்கொடுக்­கு­மாறு கூறி யாசகம் பெற்று வந்­துள்ளார். இந்த நிலை­மைக்கு ஒரு­போதும் நல்­லாட்சி அர­சாங்கம் சென்­றி­ருக்கவில்லை. எத்­தனை சிக்­கல்கள் வந்­த­போ­திலும் சர்­வ­தேச நாடு­க­ளுக்கு செலுத்த வேண்­டி­யுள்ள கடன்­களை ஒழுங்­கான முறையில் செலுத்­தி ­வந்­தது.

அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலையை குறைக்­கு­மாறு அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விட்டால், மஹிந்த அதற்கு இந்­தி­யாவின் விளைச்­சல்கள் அறு­வடை செய்­யப்­பட்­டதன் பின்னர் அந்த பொருட்­களை இந்­திய பிர­த­ம­ரிடம் கலந்­து­ரை­யாடி பெற்றுக்கொண்டு உண­வுப்­ப­யிர்­க­ளுக்­கான சலு­கையை பெற்றுக்கொடுக்­கலாம் என்று தெரி­விக்­கின்றார். இவ்­வாறு இந்­திய பிர­த­மரின் உத­வியை நாடவா மக்கள் இவ­ருக்கு வாக்­க­ளித்­தார்கள்.

நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட நிய­ம­னங்கள் மற்றும் அபி­வி­ருத்தி செயற்­றிட்­டங்­க­ளுக்காக நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருந்த போதிலும்  24 ஆயிரம் பேரின் நிய­ம­னங்­களை அர­சாங்கம் தடுத்து வைத்­துள்­ளது  .  இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு நியா­யத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளுக்­கான ஒப்­பந்­த­ங்களை மேற்­கொள்ளும்போது அதற்­கான நிதியும் ஒதுக்­கி­வைக்­கப்­படும். இந்­நி­லையில் நல்­லாட்சி அர­சாங்­கத்தால் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்தி செயற்­றிட்­டங்­க­ளுடன் தொடர்பு கொண்­டுள்ள ஒப்­பந்­த­தாரர்­க­ளுக்­கான கொடுப்­ப­ன­வுகள் இன்னும் வழங்­கப்­ப­டாமல் இருக்­கின்­றன இந்த அபி­வி­ருத்தி செயற்றிட்­டங்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினதோ, ஐ.தே.க. கூட்­ட­ணி­யி­னரின் நலன்­க­ளுக்கோ முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. நாட்டு மக்­களின் நல­னுக்­கா­கவே முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

அர­சாங்­கத்­திற்கு பெரிதும் ஆத­ர­வ­ளித்த அரச ஊழி­யர்கள் இன்று விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றனர். அவர்­க­ளுக்­காக இந்த அர­சாங்கம் எந்­த­வித நல­னையும் பெற்றுக்கொடுக்­க­வில்லை. இந்த விடயம் தொடர்பில் அரச ஊழி­யர்கள் சிந்­திக்க வேண்டும். 2015ஆம் ஆண்­டுக்கு முன்­ன­ரான காலப்­ப­கு­தி­களில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் தொடர்பில் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் காலத்தில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு சில­ருக்கு எதி­ராக வழக்­கு­களும் தொட­ரப்­பட்­டுள்­ளன. தற்­போ­தைய அர­சாங்கம் இவ்­வாறு தொட­ரப்­பட்­டுள்ள வழக்­குகள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்­ப­தற்­காக குழு­வொன்றை நிய­மித்­துள்­ளது. இது முறை­யற்ற செயற்­பா­டாகும். நீதி­மன்­றத்தில் இடம்­பெற்­று­வரும் வழக்கு விசா­ர­ணைகள் தொடர்பில் யாருக்கும் குழு அமைத்து ஆராய்ந்து பார்க்க முடி­யாது.

இன்று வெளி­நா­டு­களில் தஞ்­ச­ம­டைந்­துள்ள குற்­ற­வா­ளிகள் அனை­வரும் அச்­ச­மின்றி நாடு­தி­ரும்­பு­கின்­றனர். வெளி­நாட்டில் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த உத­யங்க வீர­துங்­க போன்றோர் இன்று நாட்­டுக்கு திரும்­பி­யுள்­ள­மைக்கு காரணம் தற்­போ­தைய அர­சாங்­கத்தில் தமக்கு இல­குவில் சட்­டத்­தி­ட­மி­ருந்து தப்பிக்கொள்­ளலாம் என்ற அவர்­களின் நம்­பிக்­கை­யே­யாகும். ஆட்­சிக்கு வந்து மூன்று மாத­கா­ல­மா­கி­யுள்ள நிலையில் தாம் வழங்­கிய எந்த வாக்­கு­று­தி­க­ளையும் நிறை­வேற்­றாது இருக்கும் அர­சாங்கம் தொடர்பில் மக்கள் நன்கு அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்டும். தொடர்ந்தும் பிழையை விடாது எதிர்­வரும் பொதுத்தேர்­த­லி­லா­வது சிறந்த தீர்­மா­னத்தை எடுக்­க­வேண்டும் என்றார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சந்­திப்­ ச­ம­ர­சிங்க  குறிப்­பி­டு­கையில்,

அர­சாங்கம் நாட்டின் அபி­வி­ருத்­திக்­கா­கவும், மக்­க­ளுக்­கான சலு­கை­களை  பெற்றுக் கொடுப்­ப­தற்­கா­கவும் தீர்­மா­ன­மொன்றை எடுத்­தி­ருந்தால் நாங்கள் அதற்கு எமது பூரண ஒத்­து­ழைப்பை வழங்­கி­யி­ருப்போம். ஆனால் குறை­நிரப்பு பிரே­ரணை ஒன்றை கொண்டு வந்து அதன்­மூலம் மேலும் கட­னைப்­பெ­றவே அர­சாங்கம் முயற்­சித்­தது. இதற்கு நாங்கள் ஒரு­போதும் அனு­மதி கொடுக்­க­மாட்டோம். பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ மக்­க­ளுக்­கான சலு­கையை பெற்றுக்கொடுக்க அர­சாங்கம் எடுத்த முயற்­சிக்கு நாங்கள் ஒத்­து­ழைப்பு வழங்­க­வில்லை என்று தெரி­வித்­துள்ளார். இவர்­களால் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த குறை­நி­ரப்பு பிரே­ர­ணையில் மக்­க­ளுக்கு சலு­கை­களை பெற்­றுக்­கொ­டுப்­பது தொடர்பில் எதுவும் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்கவில்லை.

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து 100 நாட்­க­ளுக்குள் மக்­களின் நல­னுக்­காக பல்­வேறு சலு­கை­களை பெற்றுக் கொடுத்­தி­ருந்த போதிலும் தற்­போ­தைய அர­சாங்கம் அதனைச் செய்­யாமல் இருப்­ப­துடன், மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களைக்கூட நிறை­வேற்­றாமல் இருக்கின்றது.இந்நிலையில் ராஜ­பக் ஷக்களின் முன்னைய ஆட்சியில் எவ்வாறு செயற்பட்டார்களோ அதேபோன்றே தற்போதும்  செயற்படு கின்றனர் என்பது தற்போது வெளிப் படையாகின்றது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி பழமையான கட்சி என்பதுடன், அது வரலாற்று சிறப்புமிக்கது. இவ்வாறான கட்சியையோ, அதன் சின்னத்தையோ விமர்சிப்பது தொடர்பில் எமக்கு விருப்ப மில்லை. பொதுத்தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் சட்டசிக்கல்கள் காணப்படுவதால் அதனை நிவர்த்தி செய்து கொண்டு செயற்குழுவின் அனுமதியுடன் தேர்தலில் போட்டியிடுவோம். இந்நிலையில் மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நன்கு அவதானம் செலுத்தி சரியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்.