மன்னார் ச­தொச மனித புதை­குழி வழக்கு விவா­தத்­தின்­போது சட்­டத்­த­ர­ணிகள் வெளி­ந­டப்பு செய்­தி­ருக்­கின்­றனர். அரச சட்­டத்­த­ர­ணிக்கும் காணாமல் போயுள்­ள­வர்­களின் உற­வி­னர்­க­ளது சார்பில் நீதி­மன்­றத்தில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்த சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற சூடான விவா­தத்­தின்­போது ஒரு கட்­டத்தில் அரச தரப்பு சட்­டத்­த­ரணி எதிர்த்­த­ரப்­பினர் மீது தகாத வார்த்தைப் பிர­யோகம் செய்­தி­ருந்­த­தை­ய­டுத்தே சட்­டத்­த­ர­ணிகள் வெளி­நடப்பு செய்­தனர்.

பொது இடங்­களில் விவா­தத்தில் ஈடு­ப­டும்­போது அல்­லது வார்த்தைப் பிர­யோகம் செய்யும் போது கவ­ன­மா­கவும் கௌர­வ­மா­கவும் சொற்­களைப் பயன்­ப­டுத்த வேண்டும் என்­பது சமூ­கத்தில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட நிய­தி­யாகும்.

அதே­போன்று மக்கள் பிர­தி­நி­திகள் அடங்­கிய சபை­களில் உரை­யாற்­றும்­போதும், விவா­தங்­களில் ஈடு­ப­டும்­போதும் பொது­வா­கவே கௌர­வ­மான முறையில் கருத்­துக்­களை வெளி­யிட வேண்டும் என்ற நியதி உள்­ளது. இந்த வகையில் நீதி­மன்­றத்தில் நீதி­ப­தியின் முன்­னி­லையில் வாதங்­களை முன்­வைக்­கும்­போதும் விவா­தங்கள் ஏற்­படும் போதும் கௌர­வ­மான முறையில் சொற்­களைப் பயன்­ப­டுத்த வேண்டும் என்ற பொது­வான எதிர்­பார்ப்பு உள்­ளது. அத்­த­கைய நடை­முறை நீதி­மன்­றங்­களில் கையா­ளப்­ப­டு­வதும் மரபு ரீதி­யான வழ­மை­யாக இருந்து வரு­கின்­றது.

இந்­நி­லையில் மன்னார் நீதி­மன்­றத்தில் இடம்­பெற்ற விவா­தத்­தின்­போது அரச தரப்பு சட்­டத்­த­ரணி எதிர்த்­த­ரப்பு சட்­டத்­த­ர­ணிகள் மீது கௌரவக் குறை­வான வார்த்தைப் பிர­யோ­கங்­களை மேற்­கொண்­ட­போது மன்று அந்த நிலை­மையைச் சரி­யாகக் கையா­ள­வில்லை என்­பதைச் சுட்­டிக்­காட்டி எதிர்த்­த­ரப்பு சட்­டத்­த­ர­ணிகள் வெளி­ந­டப்பு செய்­தனர். மன்னார் மாவட்ட நீதி­மன்ற சட்­டத்­த­ர­ணி­களும் அவர்­க­ளுடன் மன்­றை­விட்டு வெளி­யேறி இருந்­தனர்.  

அரச தரப்பு சட்­டத்­த­ரணி மன்­னிப்பு கோரி­ய­தை­ய­டுத்தே வெளி­ந­டப்பு செய்த சட்­டத்­த­ர­ணிகள் மீண்டும் நீதி­மன்­றத்தில் பிவே­சித்து வழக்கு விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யி­ருந்­தனர்.

இத்­த­கைய சம்­பவம் மன்னார் நீதி­மன்­றத்தில் முதற் தட­வை­யாக இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. ஏனைய நீதி­மன்­றங்­களில் இவ்­வா­றான சம்­பவம் இடம்­பெற்­றி­ருந்­ததா என்­பது தெரி­ய­வில்லை. ஆயினும் கற்­ற­வர்கள் விடய ஞானம் மிகுந்­த­வர்கள் என்றே சமூகம் சட்­டத்­த­ர­ணி­களைக் கரு­து­கின்­றது. அவர்­களை மதித்து நடந்து கொள்­கின்­றது. அதற்கும் மேலாக நீதி­மன்­றங்­களில் சட்­டத்­த­ர­ணிகள் ஒரு­வரை ஒருவர் விளிக்­கும்­போது கற்­ற­றிந்த நண்பர்  Learned Friend என்றே குறிப்­பி­டு­வ­தையே வழக்­க­மாகக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இந்த வெளி­ந­டப்பு சம்­பவம் பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி நடை­பெற்­றது. அன்­றைய தினத்தில் ச­தொச மனிதப் புதை­கு­ழியில் கண்­டெ­டுக்­கப்­பட்­டி­ருந்த மனித எலும்­புக்­கூட்டு எச்­சங்­களின் மாதி­ரி­களைத் தட­ய­வியல் மற்றும் மருத்­துவ நிபு­ணர்கள் பார்­வை­யி­டு­வ­தற்­காக நீதி­மன்­றத்­தினால் நாள் குறிக்­கப்­பட்­டி­ருந்­தது.

நிபுணர் குழு நடத்­திய 156 நாள் அகழ்­வா­ராய்ச்சி

அப்­போது இந்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது, மனிதப் புதை­கு­ழியில் இருந்து அகழ்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருந்த மனித எலும்­புக்­கூட்டு எச்­சங்கள் வைக்­கப்­பட்­டி­ருந்த களஞ்­சிய அறையின் கதவு உடைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும், ஜன்­னல்­களும் திறந்­தி­ருந்­தி­ருந்­த­தா­கவும், இதன் மூலம் அந்த சாட்­சியப் பொருட்­களில் தலை­யீடு செய்­யப்­பட்­டி­ருந்­ததைக் கண்­ட­தா­கவும் பொலிசார் நீதி­மன்­றத்தின் கவ­னத்­திற்குத் தெரி­வித்­தி­ருந்­தனர்.

இத­னை­ய­டுத்து, சம்­பவ இடத்தை உட­ன­டி­யாகப் பார்­வை­யிட்டு அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு  குற்­ற­வியல் சம்­பவ இடத்து பொலிஸ் விசா­ரணைப் பிரி­வி­ன­ருக்கு உத்­த­ர­விட்ட நீதி­பதி விசா­ர­ணையை மறு நாள் 11 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்தார்.

மன்னார் நகர மத்­தியில் அமைந்­துள்ள ச­தொச நிறு­வ­னத்­திற்குச் சொந்­த­மான கட்­டி­டத்தைப் இடித்துப் புதிய கட்­டிடம் ஒன்­றிற்­கான நிர்­மாண வேலை­களை மேற்­கொண்­ட­போது, அங்கு மனித எலும்­புக்­கூட்டு எச்­சங்கள் வெளி­வந்­தி­ருந்­தன. இந்த விடயம் பொலி­சாரின் கவ­னத்­திற்குக் கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து, நீதி­மன்ற உத்­த­ர­வுக்­க­மைய அங்கு அகழ்வுப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

தட­ய­வியல், தொல்­லியல் துறை­சார்ந்த நிபு­ணர்கள், இந்தப் பிரி­வு­களின் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மற்றும் மருத்­துவ நிபு­ணர்கள் உள்­ள­டங்­கிய குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட அகழ்­வாய்­வின்­போது பெரும் எண்­ணிக்­கை­யி­லான மனித எலும்­புக்­கூட்டு எச்­சங்கள் கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

வடக்கில் குறிப்­பாக மன்னார் மாவட்­டத்தில் பெரும் எண்­ணிக்­கை­யி­லா­ன­வர்கள் காணாமல் போயுள்ள நிலையில் வெளிக்­கிளம்­பிய மன்னார் ச­தொச மனிதப் புதை­கு­ழியின் எலும்­புக்­கூ­டுகள் பொது­மக்கள் மத்­தியில் பெரும் பதட்­டத்­தையும் பர­ப­ரப்­பையும் ஏற்­ப­டுத்தி இருந்­தன.

இந்த மனி­தப்­பு­தை­கு­ழியில் காணப்­பட்ட மனித எலும்­புக்­கூட்­டுக்கு உரி­ய­வர்கள் யார், அவர்கள் எவ்­வாறு கொல்­லப்­பட்­டார்கள், யாரால் கொல்­லப்­பட்­டார்கள் என்­பதை, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டைய குடும்ப உற­வி­னர்கள் அறி­வ­தற்குத் துடித்­த­தார்கள்.

காணாமல் ஆக்­கப்­பட்­டுள்ள தமது உற­வு­க­ளுக்கே இந்த கதி நேர்ந்­தி­ருக்­குமோ என்ற சந்­தேகம் அவர்­க­ளு­டைய மனங்­களில் பெரும் துயர வடிவில் எழுந்­தி­ருந்­தது. இந்த விவ­கா­ரத்தில் தங்­க­ளு­டைய கவ­னத்­தையும் கண்­கா­ணிப்­பையும் செலுத்­திய அவர்கள் இந்த நீதி­மன்ற வழக்கு விசா­ர­ணை­களில் தமது சட்­டத்­த­ர­ணி­களின் மூல­மாகப் பங்­கேற்­றி­ருந்­தனர்.  இந்த சட்­டத்­த­ர­ணிகள் அவர்­களின் நலன்­களைக் கவ­னிப்­ப­தற்­காக நீதி­மன்ற  விசா­ர­ணை­களில் முன்­னி­லை­யா­கினர்.

இந்த மனித எலும்­புக்­கூட்டு எச்­சங்கள் தொடர்பில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொலிசார் மேற்­கொண்ட ஆரம்ப விசா­ர­ணை­க­ளை­ய­டுத்து, நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வுக்­க­மைய அந்த வருடம் மே மாதம் 28 ஆம் திகதி நிபு­ணத்­துவ ரீதி­யி­லான அகழ்வுப் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இந்த அகழ்வுப் பணிகள் 2019 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் வரையில் நடை­பெற்­றன. சுமார் 270 நாட்­களைக் கொண்ட இந்தக் காலப்­ப­கு­தியில் விடு­மு­றைகள் மற்றும் பல்­வேறு கார­ணங்­க­ளினால் இடை­யி­டையே தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்ட அகழ்வுப் பணிகள் 156 தினங்கள் நடை­பெற்­றன.

கார­சா­ர­மான நிலைமை
காணாமல் போனோர் பற்­றிய விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்­காக நிலை­மாறு கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான நான்கு பொறி­மு­றை­களில் ஒன்­றாக அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸின் தலை­மை­யி­லான காணாமல் போயுள்­ளோ­ருக்­கான அலு­வ­ல­கமும் இந்த அகழ்வுப் பணி­களின் மூலோ­பாயச் செயற்­பா­டு­க­ளி­லான ஒத்­து­ழைப்பை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் நல்­கி­யி­ருந்­தது.  

இந்த வகையில் அகழ்வுப் பணி­க­ளுக்­கான நிதி­யு­தவி மற்றும் அகழ்ந்­தெ­டுக்­கப்­பட்ட தடயப் பொருட்­களை ஆய்­வுக்கு உட்­ப­டுத்த அமெ­ரிக்­கா­வுக்கு அனுப்­பு­வ­தற்கும் அந்தப் பொருட்­க­ளுடன் இரண்டு சட்­டத்­த­ர­ணிகள் உள்­ளிட்­ட­வர்கள் சென்று வரு­வ­தற்­கான செல­வுகள்  மற்றும் அது தொடர்­பி­லான நட­வ­டிக்­கைகள் என்­ப­வற்­றிலும் அது தனது பங்­க­ளிப்பை மேற்­கொண்­டி­ருந்­தது.

அரச அமைச்­சுக்கள் எதுவும் இந்த மனிதப் புதை­குழி விவ­கா­ரத்­தி­லான செல­வுகள் உள்­ளிட்ட விட­யங்­களில் கவனம் செலுத்தத் தவறி இருந்த நிலையில் காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­லகத் தலைவர் சாலிய பீரிஸின் ஒத்­து­ழைப்பே அகழ்­வா­ராய்ச்சி மற்றும் தடயப் பொருட்கள் பற்­றிய பகுப்­பாய்வு நட­வ­டிக்­கைகள் தடங்­க­லின்றி இடம்­பெ­று­வ­தற்குப் பெரிதும் உத­வி­யாக இருந்­தது.

காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தின் பணி­க­ளாகப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள பொறுப்­புக்­களில் காணாமல் போன­வர்கள் எவ்­வாறு காணாமல் போனார்கள், அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதைக் கண்­ட­றி­வது ஒரு முக்­கிய விட­ய­மாக உள்­ளது. இதன் அடிப்­ப­டை­யி­லேயே மன்னார் மனிதப் புதை­குழி விவ­கா­ரத்தில் காணாமல் போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தின் தலைவர் சாலிய பீரிஸின் ஒத்­து­ழைப்பு நட­வ­டிக்­கைகள் முக்­கி­யத்­துவம் பெற்­றி­ருக்கின்;றன.

ஊட­கங்­க­ளுக்கான கட்­டுப்­பா­டுகள்
மன்னார் ச­தொச மனிதப் புதை­குழி அகழ்­வின்­போது, 323 மனித எலும்­புக்­கூட்டு எச்­சங்­களும் பீங்கான் மற்றும் பாவைனப் பொருட்கள் உள்­ளிட்ட தடயப் பொருட்­களும் அகழ்ந்­தெ­டுக்­கப்­பட்­டன. இவற்றில் பெண்­களின் எலும்­புக்­கூ­டு­க­ளுடன், சிறு­வர்­களின் 28 எலும்­புக்­கூட்டு எச்­சங்­களும் அடங்­கி­யி­ருந்­தன. அத்­துடன் கைவி­லங்கு போன்ற வகையில் இரும்­பினால் கைகள் பிணைக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லான எலும்­புக்­கூட்டு எச்­சங்­களும் இவற்றில் அடங்­கி­யி­ருந்­தன.

தட­ய­வியல், தொல்­லியல் துறையில் இந்த நாட்டின் மிகவும் மதிப்­பார்ந்த ஒரே­யொரு ஆய்­வியல் நிபு­ணரும் இந்தத் துறையின் உயர் கல்வித் தகைமை பெற்­ற­வ­ரு­மா­கிய பேரா­சி­ரியர் ராஜ் சோம­தேவவின் தலை­மையில் இந்த அகழ்வுப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இருப்­பினும் பேரா­சி­ரியர் ராஜ் சோம­தே­வவின் தலை­மைத்­து­வத்தில் தன்­னிச்­சை­யாகத் தலை­யிட்டு அந்தப் பொறுப்­புக்­களில் ஊடு­ரு­விய சட்ட வைத்­திய அதி­காரி அகழ்­வாய்வு நட­வ­டிக்­கை­களின் வெளிப்­ப­டைத்­தன்­மையைத் தடை செய்ய முற்­பட்­டி­ருந்தார் என்று காணாமல் ஆக்­கப்­பட்­டோரின் உற­வி­னர்கள் சார்பில் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

அகழ்­வாய்வு நட­வ­டிக்­கை­களின் ஆரம்ப காலப்­ப­கு­தியில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் காணாமல் போனோர் சார்­பி­லான சட்­டத்­த­ர­ணிகள் அந்தப் பணிகள் நடை­பெ­று­வதைப் பார்­வை­யி­டவும் ஊட­க­வி­யா­ளர்கள் அவற்றை அறிக்­கை­யி­டவும் அனு­மதி அளிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆயினும் காலக்­கி­ர­மத்தில் இந்த வெளிப்­ப­டைத்­தன்­மையில் கட்­டுப்­பா­டுகள் கொண்டு வரப்­பட்டு குறிப்­பிட்ட நேரத்தில் மாத்­தி­ரமே ஊட­க­வி­ய­லா­ளர்கள் அகழ்வுப் பணி­களைப் பார்­வை­யி­டவும், புகைப்­ப­டங்கள் மற்றும் வீடியோ படங்கள் எடுக்­கவும் முடியும் என்ற இறுக்­க­மான கட்­டுப்­பா­டுகள் சட்ட வைத்­திய அதி­கா­ரி­யினால் விதிக்­கப்­பட்­டன.

குறிப்­பாக பிபிசி செய்தி நிறு­வன ஊட­க­வி­ய­லா­ளர்கள் இந்த அகழ்வுப் பணி­களைப் பார்­வை­யிட்டு, செய்தி சேக­ரிப்­ப­திலும் இடை­யூ­றுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஒரு கட்­டத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீது விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பாட்­டுக்கு எதி­ராக மன்னார் ஊட­க­வி­ய­லா­ளர்கள் நீதி­மன்­றத்தின் கவ­னத்­திற்குக் கொண்டு வந்து நிவா­ரணம் தேடி இருந்­தார்கள் என்­பதும் குறிப்­பி­டத்­தக்கது.

காணாமல் போனோரின் உற­வி­னர்கள் இந்த மனிதப் புதை­குழி விவ­கா­ரத்தில் நேர­டி­யாக சம்­பந்­தப்­ப­டு­வதைத் தடுத்து, முழு அளவில் ஒரு வெளிப்­ப­டைத்­தன்­மை­யற்ற முறையில் இந்த நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான ஒரு முயற்­சி­யா­கவே சட்ட வைத்­திய அதி­கா­ரி­யினால் இவ்­வா­றான தலை­யீடும் இடை­யூறும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன என்று கரு­து­வ­தற்கு நிலை­மைகள் இட­ம­ளித்­தி­ருந்­தன.

மன்னார் நீதி­மன்­றத்தில் இந்த மனி­தப்­பு­தை­குழி வழக்கு பெப்­ர­வரி 11 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போது, மனித எலும்­புக்­கூட்டு எச்­சங்கள் வைக்­கப்­பட்­டி­ருந்த களஞ்­சிய அறை உடைக்­கப்­பட்­டி­ருந்­தது தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வில் தடயப் பொருட்­களில் தலை­யீடு செய்­யப்­பட்­டி­ருக்­க­வில்லை என்று விசா­ரணைப் பிரிவு பொலிசார் நீதி­மன்­றத்தில் தெரி­வித்­தனர்.

அப்­பொ­ழுது மன்றில் சமுக­ம­ளித்­தி­ருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரின் கருத்தை அறி­வ­தற்கு அரச சட்­டத்­த­ரணி முற்­பட்­ட­போது காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்­களின் நலன்­களைக் கவ­னிப்­ப­தற்­காக முன்­னி­லை­யா­கி­யி­ருந்த சட்­டத்­த­ர­ணிகள் தமது ஆட்­சே­ப­னையை வெளிப்­ப­டுத்­தினர்.

அதனைத் தொடர்ந்து இரு தரப்பு சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கும் இடையில் சூடான விவா­தமும் வாக்­கு­வா­தங்­களும் இடம்­பெற்­றன. அப்­போது ஒரு கட்­டத்தில் அரச தரப்பு சட்­டத்­த­ரணி எதிர்த்­த­ரப்பு சட்­டத்­த­ர­ணி­களை அவ­ம­திக்கும் வகை­யி­லான மொழிப்­பி­ர­யோகம் செய்த போது மறு தரப்­பினர் தமது கடும் ஆட்­சே­ப­னையை வெளி­யிட்­ட­தை­ய­டுத்து, மன்றில் ஒரு குழப்­ப­மான பதட்ட நிலைமை உரு­வா­கி­யது.

கட்­டுப்­பா­டு­க­ளுடன் கூடிய இர­க­சிய நடை­முறை

அதன்­போது மன்று அதில் தலை­யிட்டு நிலை­மையைக் கையாள்­வ­தற்குத் தவ­றி­ய­தனால், அரச சட்­டத்­த­ர­ணியின் செயற்­பாட்­டிற்குத் தமது எதிர்ப்பைத் தெரி­விக்கும் வகையில், எதிர்த்­த­ரப்பு சட்­டத்­த­ர­ணிகள் வழக்கு விசா­ர­ணையில் இருந்து வெளி­ந­டப்பு செய்­தனர். அதே­வேளை நீதி­மன்றில் குழு­மி­யி­ருந்த மன்னார் மாவட்ட சட்­டத்­த­ர­ணி­களும் வெளி­ந­டப்பில் கலந்து கொண்­டனர்.

நீதி­மன்­றத்தில் சட்­டத்­த­ர­ணி­களை ஏசு­கின்ற தன்­மையில் தகாத வார்த்­தைகள் பிர­யோ­கிக்­கப்­பட்­டது மட்­டு­மல்­லாமல், அந்த நட­வ­டிக்­கை­யா­னது நீதி­மன்­றத்­திற்கு உரிய மதிப்­ப­ளிக்­காத நட­வ­டிக்கை என்ற கருத்­த­மை­வி­லேயே இந்த வெளி­ந­டப்பு மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆயினும் அரச சட்­டத்­த­ரணி மன்­னிப்பு கோரி­ய­தை­ய­டுத்து வெளி­ந­டப்பு செய்த சட்­டத்­த­ர­ணிகள் அனை­வரும் மன்­றிற்குத் திரும்­பி­ய­தை­ய­டுத்து ஒத்தி வைக்­கப்­பட்ட விசா­ர­ணைகள் தொடர்ந்­தன. விசா­ர­ணை­களின் போது அரச தரப்பு சட்­டத்­த­ர­ணியின் சமர்ப்­ப­ணங்­களை மொழி­மாற்றம் செய்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் சரி­யான முறையில் மொழி­பெ­யர்ப்பு செய்­ய­வில்லை என்­பதை எதிர்த்­த­ரப்பு சட்­டத்­த­ர­ணிகள் மன்றில் சுட்­டிக்­காட்­டி­னார்கள்.

அப்­போது நீதி­மன்றம் அன்­றைய தினம் இரண்­டா­வது தட­வை­யாக அந்த வழக்கு விசா­ர­ணையை ஒத்­தி­வைத்து, பிற்­பகல் 2 மணி­ய­ளவில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­த­போது, மேல் நீதி­மன்­றத்தின் முத­லியார் அங்கு சமுக­ம­ளித்து அரச சட்­டத்­த­ர­ணியின் சமர்ப்­ப­ணத்தை மொழி­மாற்றம் செய்தார்.

அரச சட்­டத்­த­ரணி தனது சமர்ப்­ப­ணத்தில், காணாமல் போயுள்­ள­வர்­களின் குடும்­பங்­களின் நலன்­க­ளுக்­காக அவர்­க­ளு­டைய சார்பில் சட்­டத்­த­ர­ணிகள் முன்­னி­லை­யா­வ­தற்கு இந்த வழக்கில் உரிமை இல்லை என சுட்­டிக்­காட்டி, அவ்­வாறு முன்­னி­லை­யா­கி­யி­ருந்த சட்­டத்­த­ர­ணி­களின் பிர­சன்­னத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்தார்.

அரச சட்­டத்­த­ர­ணியின் கூற்றை எதிர்த்­த­ரப்பு சட்­டத்­த­ரணி மறுத்­து­ரைத்து சட்ட வைத்­திய அதி­கா­ரியின் சார்பில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்த அரச சட்­டத்­த­ர­ணிக்கே இந்த வழக்கில் முன்­னி­லை­யா­வ­தற்கு உரிமை இல்லை என சுட்­டிக்­காட்­டினார்.

மனிதப் புதை­கு­ழியின் அகழ்­வா­ராய்ச்­சியில் பேரா­சி­ரியர் ராஜ் சோம­தேவ தலை­மையில் சிறப்­பான நிபு­ணத்­துவம் பெற்­ற­வர்கள் இடம்­பெற்­றி­ருந்த நிலையில் இந்த வழக்கில் சட்ட வைத்­திய அதி­காரி தானா­கவே முன்­வந்து முன்­னி­லை­யா­கி­யி­ருந்தார் என்றும் எதிர்த்­த­ரப்பு சட்­டத்­த­ரணி தெரி­வித்தார்.

இவ்­வாறு நீதி­மன்­றத்தில் ஆஜ­ரா­கிய சட்ட வைத்­திய அதி­கா­ரியின் சார்பில் தமது தரப்பில் எவரும் ஆஜ­ரா­வ­தற்கு சட்­டமா அதிபர் ஆர்வம் கொண்­டி­ருக்­க­வில்லை. இத்­த­கைய நிலை­யில்தான் சட்ட வைத்­திய அதி­கா­ரியின் சார்பில் அரச சட்­டத்­த­ரணி வழக்கில் ஆஜ­ரா­கி­யி­ருந்­த­தா­கவும் அந்த வகையில் அரச சட்­டத்­த­ர­ணிக்கே இந்த வழக்கில் முன்­னி­லை­யா­வ­தற்கு உரிமை இல்லை என எடுத்­து­ரைத்து எதிர்த்­த­ரப்பு சட்­டத்­த­ரணி தனது ஆட்­சே­ப­ணையை வெளி­யிட்டார்.

தொடர்ந்து வாதிட்ட அவர் ஆர்­ஜன்­டினா, சிலி, கௌத்­த­மாலா, பெரு போன்ற நாடு­களில் இது­போன்ற மனிதப் புதை­குழி அகழ்­வாய்வுச் செயற்­பா­டுகள் வெளித்­த­லை­யீ­டு­க­ளின்­றியும்  வெளிப்­ப­டை­யா­கவும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதனை உறு­திப்­ப­டுத்­த­ுவதற்­காக பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரு­டைய குடும்­பத்­தினர் அந்தப் பணி­களை அவ­தா­னிப்­ப­தற்கும் ஊட­கங்கள் சுதந்­தி­ர­மாக அவற்றைப் பார்­வை­யிட்டு அறிக்­கை­யி­டு­வ­தற்கும் அங்கு அனு­மதி வழங்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் மன்னார் ச­தொச மனி­தப்­பு­தை­குழி அகழ்­வாய்வுப் பணிகள் அந்த வகையில் கையா­ளப்­ப­ட­வில்லை என்­பதை அவர் எடுத்­து­ரைத்தார்.

மன்னார் மனி­தப்­பு­தை­குழி அகழ்­வாய்­வின்­போது, ஊட­கங்கள் சுதந்­தி­ர­மாகச் செயற்­பட முடி­யா­த­வாறு கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன், சட்­டத்­த­ர­ணி­க­ளும்­கூட அங்கு பிர­சன்­ன­மாகி இருக்க முடி­யாத வகையில் அவர்­களைக் கட்­டுப்­ப­டுத்தி, இர­க­சிய முறை கையா­ளப்­பட்­டி­ருந்­தது என்­ப­தையும் எதிர்த்­த­ரப்பு சட்­டத்­த­ரணி நீதி­மன்­றத்தின் கவ­னத்­துக்குக் கொண்டு வந்தார்.

தொடரும் மர்ம நிலைமை

அத்­துடன் மனி­தப்­பு­தை­கு­ழியில் இருந்து எடுக்­கப்­பட்­டி­ருந்த எலும்­புக்­கூட்டு எச்­சங்கள் மற்றும் தடயப் பொருட்கள் களஞ்­சி­யப்­ப­டுத்­தி­யி­ருந்த அறைக்­க­தவு உடைக்­கப்­பட்­டி­ருந்­த­மையும் ஜன்­னல்கள் திறக்­கப்­பட்­டி­ருந்­த­மையும் தடயப் பொருட்­களில் தலை­யீடு செய்­கின்ற ஒரு விட­ய­மாகும் என்றும் எதிர்த்­த­ரப்பு சட்­டத்­த­ரணி குறிப்­பிட்டார்.

அத்­துடன் அந்தக் களஞ்­சிய அறையின் திறப்பு சட்ட வைத்­திய அதி­கா­ரியின் பொறுப்பில் வைத்­தி­ருப்­ப­தற்கு அனு­ம­திப்­ப­தென்­பது தொடர்ச்­சி­யாக அங்கு வைக்­கப்­பட்­டுள்ள தடயப் பொருட்­களின் பாது­காப்­புக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூடும் எனவும் எதிர்த்­த­ரப்பு சட்­டத்­த­ரணி மன்­றுக்குச் சுட்­டிக்­காட்­டினார்.

தொடர்ந்து உடைக்­கப்­பட்­டி­ருந்த மனிதப் புதை­கு­ழியின் தடயப் பொருட்கள் வைக்­கப்­பட்­டி­ருந்த அறையின் நிலை­மை­களைப் பார்­வை­யிட்ட நீதி­ப­தியின் மேற்­பார்­வையில் இரு தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் மற்றும் நீதி­மன்ற உத்­தி­யோ­கத்­தர்கள் பார்த்­தி­ருக்க அந்தக் களஞ்­சிய அறைக் கத­வுகள் பூட்டி சீல் வைக்­கப்­பட்­டன.

கொந்­த­ளிப்­பா­ன­தொரு சூழலில் இடம்­பெற்ற அன்­றைய வழக்கு விசா­ர­ணைகள் முடி­வுக்கு வந்­த­துடன், காணாமல் ஆக்­கப்­பட்டோர் உற­வி­னர்­களின் சார்பில் முன்­னி­லை­யா­கிய சட்­டத்­த­ர­ணியின் சமர்ப்­ப­ணங்­க­ளுக்­காக நீதி­பதி வழக்கு விசா­ர­ணை­களை பெப்ரவரி 25ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில் சதொச மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வுத் தடயப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறை உடைக்கப்பட்டதைக் கண்டித்து மன்னார் மாவட்டத்தின் காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தியுள்ளனர். அத்துடன் அந்தத் தடயப் பொருட்களைப் பொறுப்போடு பாதுகாப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் தமது ஆர்ப்பாட்டத்தின்போது முன்வைத்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டி, மாத்தளை, யாழ்ப்பாணம், மன்னார் போன்ற நாட்டின் தெற்கு மற்றும் வட–கிழக்குப் பிரதேசங்­களில் மனிதப்புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

இருப்பினும் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயச் சூழல் மற்றும் மன்னார் நகர மத்தியில் உள்ள சதொச கட்டிட வளாகம் என்பவற்றில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகள் பெரும் பரபரப்பையும் அச்ச உணர்வையும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தன. அதிலும் குறிப்பாக மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் இருந்தே 28 சிறுவர்களினது எச்சங்கள் உட்பட அதிக எண்ணிக்கையாக 323 மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந் தெடுக்கப்பட்டன.

ஆனாலும் இந்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட விசேட ஆய்வில் இந்த எலும்புக்கூடுகள் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவை என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த ஆய்வு மாத்திரமே இந்த மனிதப் புதைகுழி தொடர்பில் இறுதியான முடிவை மேற்கொள்வதற்கு போதுமானதல்ல என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் சார்பிலான சட்டத்தரணிகள் குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் அந்த மனிதப் புதைகுழியின் மண், மண் துணிக்கைகள், எலும்புக்கூட்டு எச்சங்களுடன் கண்டு பிடிக்கப்பட்ட ஏனைய தடயப் பொருட்கள் என்பனவும் விசேடமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, ஒரு பரந்த அளவிலான ஆய்வின் பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இந்த நிலையில் 323 மனித எலும்புக்கூட்டு எச்சங்களை வெளிப்படுத்திய பின்னரும் முடிவு காணப்படாதிருக்கின்ற மன்னார் நகரின் சதொச மனிதப் புதைகுழியின் மர்மம் விடை காணப்படாத ஒரு புதிராகவே திகழ்கின்றது.  

- பி.மாணிக்கவாசகம் -