கிழக்கு மாகாணத்தில் யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகியும் நாளுக்கு நாள் பறிபோய்க் கொண்டிருக்கும் தமிழர்களின் இருப்பை, இழந்தது போக இருப்பதை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்தற்காகவும், அமையப் போகின்ற அரசுடன் சோரம் போகாமல் பேரம் பேசும் சக்தியாக பலமடைவதற்காகவுமே தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார் 

நான்கு கட்சிகள் இணைந்து புதிதாக தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கினர் இது தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று திங்கட்கிழமை (24) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவத்வாறு தெரிவித்துள்ளார் 

கடந்த இரண்டு வருடங்களாக எமது கட்சி கிழக்கு மாகாணத்தின் களநிலவரங்ளை நன்கு ஆராய்ந்து எடுத்த முடிவே இது. இதே காலகட்டத்தில் இங்கு உருவான கிழக்கு தமிழர் ஒன்றியமும் அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதற்காக, கிழக்கு மாகாணத்தில உள்ள அனைத்து தமிழ்க் கட்சிகளையும் அழைத்து பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டிருந்தது.

அதற்கமைவாக நாமும் எமது ஒத்துழைப்பை நல்க முன்வந்தோம். அதன் அடிப்படையில் - சிரேஷ்ட சட்டத்தரணி ரி. சுpவநாதனை தலைவராக கொண்ட கிழக்கு தமிழர் ஒன்றியம்,. முன்னாள் பிரதி அமைச்சர் நா. கணேசமூர்த்தி தலைவராகக் கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு கூட்டணி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனை தலைவராகக் கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு மற்றும் தமிழர் விடுதைக் கூட்டணி அகிய நான்கு அமைப்புகள் மட்டுமே கலந்து கொண்டு கலந்துரையாடி மேற்படி முன்னணி அமைக்கப்பட்டது.

நிலைமை இவ்வாறு இருக்க முன்னணி சம்மந்தமாக ஆச்சரியப்படத்தக்க தவறான கருத்துக்களை ஒரு சிலர் தெரிவித்ததாக  சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. மேற்படி முன்னணி உருவாக்குதல் சம்மந்தமாக கருணா அம்மானுடன் நாம் எந்தவிதமான கலந்துரையாடல்களையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். மேற்குறிப்பிட்ட நான்கு அமைப்புகள் மட்டுமே அதனை உருவாக்கியது என்பதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கின்றேன்.

எம்முடன் இணைய விரும்புபவர்கள் மேற்குறிப்பிட்ட நான்கு அமைப்புக்களால் உருவாக்கபட்ட தேர்தலுக்கான நடவடிக்கைக் குழுவை முறைப்படி அணுகி அவர்களின் சம்மதத்துடன் கருணா அம்மான் உட்பட எவரும் இணைந்து கொள்ளலாம்.

இந்த முன்னணியை ஆரம்பத்திலேயே அழித்துவிட எண்ணும் சில சக்திகளுக்கு துணை போகாமல் சிந்தித்து செயற்பட்டு முன்னணியின் வளர்ச்சிக்கு சம்மந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது