(எம்.மனோசித்ரா)

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, குழந்தையொன்று உள்ளிட்ட 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

வென்னப்புவ

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பரவில - வயிக்கால வீதியில் தம்பரவில தேவாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த தேவாலயம் அமைந்துள்ள திசையிலிருந்து வயிக்கால நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்த்திசையில் வந்த சிறியரக (டிப்பர்) வாகனமொன்றுடன் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர், அவரது மனைவி மற்றும் குழந்தை சிகிச்சைகளுக்காக தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மாரவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

இதன் போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 30 வயதுடைய வயிக்கால பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்துடன் தொடர்புடைய சிறியரக வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

கட்டுநாயக்க

கட்டுநாயக்க - எவரிவத்த , யாகொடமுல்ல பிரதான வீதியில் ஹீனடியன பிரதேசத்தில் எவரிவத்த நோக்கி சென்று கொண்டிருந்த கெப் வாகனம் வீதியை விட்டு விலகி மின்கம்பம் ஒன்றில் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்னொருவர் உயிரிழந்துள்ளதோடு 13 பேர் காயமடைந்துள்ளனர். 

அநுராதபுரத்துக்கு யாத்திரை சென்று திரும்பி கொண்டிருந்த கெப் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதி தூக்கத்தில் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்கான காரணம் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

குறித்த சாரதி உள்ளிட்ட வாகனத்தில் பயணித்த 16 பேரில் 14 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 84 வயதுடைய வயோதிபப் பெண்னொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

காத்தான்குடி

காத்தான்குடி பிரதேசத்தில் காத்தான்குடியிலிருந்து புனச்சிமுனை நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி பாதையில் சென்ற பெண்னொருவர் மீது விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த பெண் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 60 வயதுடைய ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.