(எம்.எப்.எம்.பஸீர்)

21/4 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற  தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் குறித்து சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இடம்பெறும் விசாரணைகளின் முன்னேற்றத்தை ஆராயவும் அவ் விசாரணைகளை துரிதப்படுத்தவும்  விஷேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 

தாக்குதல்கள் தொடர்பிலான  உண்மை தகவல்களை அடையாளம் காணல்,  உண்மை தகவல்களை சேகரித்தல், புதிய தகவல்கள், சாட்சிகளை சேகரிப்பதன் ஊடாக  தாக்குதலுடன் தொடர்புடைய  அடிப்படைவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதை நோக்காகக் கொண்டு இந்த செயலணி உருவாக்கப்பட்டதாக பாதுகாப்பு செயலர் மேஜர் ஜெனரால் கமல் குணரத்ன கூறினார்.

தேசிய உளவுத் துறை பிரதானி மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலணியில் 6 பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர். 

மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸுக்கு மேலதிகமாக இக்குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய ஐந்து பேரும் உளவுத் துறைகளில் பிரதான அதிகாரிகளாக திகழ்பவர்கள்  என பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.