இலங்கையின் வறுமை நிலைக்கு 72 வருடங்களாக ஆட்சியாளர்களாக இருந்த கொள்ளையர்களே காரணம். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன்

இலங்கையின் வறுமை நிலைக்கு 72 வருடங்களாக மாறி மாறி ஆட்சியாளர்கள் என்ற பெயரில் இருந்த கொள்ளையர்களே காரணம் என ஜே வி பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய யாழ் மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

இன்று வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்டத்திற்கான மாநாடு இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் உள்ள எல்லாப் பிரதேச மக்களும் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். ஆட்சியாளர்கள் தாம் ஆட்சியை கைப்பற்றிக்கொள்வதற்கும் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காகவுன் தங்கள் மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி தாங்கள் ஆட்சிப்பீடமேறி குபேரர்களாக மாறி கொள்ளையடித்தது மாத்திரமின்றி நாட்டை இலஞ்சம் ஊழலில் கொடிகட்டி பறக்கவிட்டார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை.

அண்மையில் பிரதமர் இந்தியப்பிரதமர் மோடியை சந்தித்து கடன் தொடர்பாக கதைத்த விடயங்களை வைத்து பார்க்கின்ற போது எமது நாடு எதியோப்பியாவை விட கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாடாக காணப்படுகின்றது. எமது நாடு ஒரு காலத்தில் செல்வ நாடாக அனைத்து வளங்களும் உள்ள நாடாக இருந்தது. தற்போதும் அனைத்து இனத்தவரையும் ஒரு கொடியின் கீழ் கொண்டு வருவோமேயானால் அனைத்து வளங்களையும் பாதுகாத்தால் எமது நாட்டை செல்வந்த நாடாக கொண்டு வர முடியும். ஆனால் அவ்வாறான நாட்டை வறிய நாடாக மாற்றியவர்கள் யார்?

பிணைமுறி மோசடியில் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமல்ல ராஜபக்ச குடும்பத்தினரும் ஈடுபட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. ஆயிரத்தி நூறு கோடி ரூபாக்களை கொள்ளையடிப்பதற்கும் ராஜபக்ச அரசாங்கம் ஆதரவு வழங்கியுள்ளது. ஆகவே அப்போது மத்திய வங்கி ஆளுனராக இருந்த அஜித் நிவால் கப்பராலும் அவரது சகோதரிகளும் நாட்டின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பாவிகளாக மாறியிருக்கின்றனர்.

அது மாத்திரமின்றி ஏயார் பஸ் கொள்வனவிலும் பல கோடி இலஞ்சம் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு தேடிப்பார்க்கின்ற போது அஜித் நிவால் கப்பரால், அப்போதைய ஏயார் லங்கா தலைவர் மற்றும் அவரது மனைவியும் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அவது நண்பரான ரணில் விக்கிரமசிங்கவோடு மகேந்திரனின் தலைவராக இருந்த ராஜபக்சக்களும் பக்கா திருடர்கள் அவர்கள் கொள்ளைர்கள். இந்த கொள்ளைக்கூட்டமே எமது நாட்டை இந்த வறுமை நிலைக்கு தள்ளிய பாவிகள்.

இந்நிலையில் வறுமை கூடிய மாகாணமாக வட மாகாணமே காணப்படுகின்றது. அந்த வகையில் வறுமையால் வாடுகின்ற மக்கள் தமிழ் மக்களேயாகும். தொழில் இன்றி இருப்பவர்களில் 10 வீதமானவர்கள் வடமாகாணத்தை சேந்தவர்களாக இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் எந்த விதமான அபிவிருத்தியையும் காணாமல் தேர்தல் காலத்தில் மாத்திரம் யானையை தருகின்றேன் பூனையை தருகின்றேன் என போலி வாக்குறுதிகளை வழங்குகின்றார்களே தவிர இதில் இருந்து மாற்று வழிகளை யாரும் பெற்றுத்தரவில்லை.

எனவே வன்னி மக்கள் விழித்தெழ வேண்டும். நாளையில் இருந்து உங்கள் செயற்பாட்டை முன்னெடுங்கள். அது இன மத வேறுபாடின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.