(இராஜதுரை ஹஷான்)

ஜெனிவா பிரேரணையில் இருந்து  அரசாங்கம் விலகும் தீர்மானத்தை தொடர்ந்து, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் நடவடிக்கைகளை புலம் பெயர் அமைப்புக்கள் மிக தீவிரமாக முன்னெடுத்து வருவதாக இராணுவத்தினரது உரிமைகளை  பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இலங்கையின் உள்ளக  விவகாரத்தினை  நல்லாட்சி அரசாங்கம் தங்களின் அரசியல் தேவைகளுக்காக சர்வதேசத்தின்  மட்டத்தில்  கொண்டு சென்றது. 

இதற்கு  தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய பங்களிப்பினை   வழங்கியது. கூட்டமைப்பினர் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுகளுக்கு தீர்வு  காண்பதற்கு    கடந்த அரசாங்கத்தில்  எதிர்க்கட்சியாக இருந்து செயற்படவில்லை. மாறாக புலம் பெயர் விடுதலை புலிகளின் அமைப்புக்களின் நோக்கங்களை  சர்வதேச  நாடுகளின் ஒத்துழைப்புடன்  நிறைவேற்றிக் கொள்ளவே  முயற்சித்தார்கள்.    

அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை தொடர்ந்து  இலங்கையை  சர்வதேச  குற்றவியல் நீதிமன்றில்  நிறுத்தும் நடவடிக்கைகளை  புலம் பெயர் அமைப்புக்கள் மிக தீவிரமாக முன்னெடுத்து வருவதை  அவதானிக்க முடிகின்றது.  இலங்கையை  சர்வதேச நீதிமன்றில்  முன்னிலைப்படுத்தும் நோக்கிலேயே   காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது.  

காணாமல் போனோர் அலுவலகத்தில்  செயற்பாடுகள் அனைத்தும்     ஆரம்பத்தில் இருந்து   ஒர தரப்பினருக்கு  சாதகானது என்பதை   குறிப்பிட்டோம். ஆகவே இலங்கையை   சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்  நிறுத்தும்  நடவடிக்கைகள்  ஏற்கெனவே   முன்னெடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.