நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியானது மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 39 ஓட்டங்களினால் பின்னிலையில் உள்ளது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, முதலாவது நாளில் 55 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 122 ஓட்டங்களை எடுத்து தடுமாறியபோது மழையால் முதல் நாள் ஆட்டம் இடை நடுவில் நிறுத்தப்பட்டது. அஜிங்யா ரஹானே 38 ஓட்டங்களுடனும், ரிஷாத் பந்த் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

2 ஆவது நாளான நேற்று, இந்திய வீரர்கள் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினர். அஜாஸ் பட்டேல் வீசிய முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த ரிஷாத் பந்த் 19 ஓட்டங்களுடன், சிறிது நேரத்தில் ரன்-அவுட் ஆனார். 

இதன் பின்னர் வந்தவர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேற, இந்திய அணி முதல் இன்னிங்சில் 68.1 ஓவர்களில் 165 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

முதல் இன்னிங்சில் விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி பெற்ற 3 ஆவது மோசமான இதுவாகும். 

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் புதுமுக வீரர் கைல் ஜாமிசன், டிம் சவுதி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் டொம் லெதம் 11 ஓட்டத்துடனும் டோம் பிளன்டெல் 30 ஓட்டத்துடனும் இஷாந்த் ஷர்மாவின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேற்றினார்.

இதைத் தொடர்ந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சனும், தனது 100 ஆவது டெஸ்டில் ஆடும் ரோஸ் டெய்லரும் கைகோர்த்து அணிக்கு வலு சேர்த்தனர். 

எனினும் ரோஸ் டெய்லர் 44 ஓட்டங்களில் இஷாந்த் ஷர்மாவின் பந்தில் வீழ்ந்தார். இந்த ஜோடி 3 ஆவது விக்கெட்டுக்கு 93 ஓட்டங்களை சேர்த்தது.

பின்னர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்சன் 89 ஓட்டங்களுடன் மொஹமட் ஷமியின் பந்து வீச்சில் ஜடேஜாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஹென்றி நிகோல்ஸ் 17 ஓட்டங்களுடன் அஸ்வினின் சுழற்பந்து வீச்சில் கோலியிடம் பிடிகொடுத்தார்.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 71.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 216 ஓட்டங்களை எடுத்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் இரண்டாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. வோட்லிங் 14 ஓட்டங்களுடனும், கிரான்ட்ஹோம் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இந் நிலையில் இன்று ஆரம்பமான மூன்றாவது நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி மொத்தமாக 100.2 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 348 ஓட்டங்களை குவித்தது.

இதன் மூலம் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றது.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுக்களையும், அஷ்வின் 3 விக்கெட்டுக்களையும், பும்ரா மற்றும் மொஹமட் ஷமி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்பின் இந்திய அணி 2 ஆவது இன்னிங்ஸை இந்திய அணி ஆரம்பித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மயங்க் அகர்வால் அரை சதம் கடந்து 58 ஓட்டங்களுடன், பிருத்வி ஷா 14 ஓட்டங்களுடனும் புஜாரா 11 ஓட்டங்களுடனும் கோலி 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந் நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும்போது இந்திய அணி 65 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்றுள்ளது. ரஹானே 25 ஓட்டங்களுடனும், விஹாரி 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

இதனால் இந்திய அணி 39 ஓட்ட வித்தியாசத்தில் பின்னிலையில் உள்ளது.

Photo credit : ICC