கொழும்பு, (சின்ஹுவா) கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் சீனாவின் வெற்றிக்காக பிரார்த்தனைகளை ஒழுங்கு செய்வதில் ஏனைய மதத்தவர்களுடன் இலங்கையின் இந்துக்களும் கடந்த வெள்ளிக்கிழமை இணைந்துகொண்டனர்.

 சிவராத்திரி தினமான கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு கொச்சிக்கடையில் அமைந்திருக்கும் கீர்த்தி பெற்ற ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் மிகவும் பக்திமயமான எளிமையான பிரார்த்தனை நிகழ்வொன்றை இலங்கை -சீன பத்திரிகையாளர்கள் சங்கம் (Srilanka - China Journalists' Forum) ஏற்பாடு செய்திருந்தது. ஆலயத்தின் மணி கம்பீரமாக ஒலிக்க சிவாச்சாரியார்கள் சமஸ்கிருதத்தில் மந்திரங்களை ஓதி சிவபெருமானுக்கு மலர்களால் பூசை செய்து அங்கு கூடியிருந்த பெருந்திரளான அடியார்களுக்கு கிருபை வேண்டி பிரார்த்தித்தனர். பல்வேறு வகையான பழங்களும் சிவபெருமானுக்கு படைக்கப்பட்டன.

 அந்த நிகழ்வில் பெருந்திரளானோருடன்  கொழும்பில் உள்ள சீனத்தூதரகத்தின் பேச்சாளர் லுவோ ஷொங், கொழும்பு இந்திய தமிழ்ச் சமூகத்தின் தலைவரும் முன்னாள் இந்து சமய விவகார அமைச்சருமான மனோ கணேசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அங்கு அடியார்கள் மத்தியில் உரையாற்றிய மனோ கணேசன், " இலங்கை நெருக்கடியை எதிர்நோக்கிய சந்தர்ப்பங்களில் எல்லாம் சீனா உதவ வந்திருக்கிறது. இப்போது சீனா ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பரவலினால் பெரும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்போது சீனாவுக்கு ஆதரவை நாம் வெளிக்காட்டவேண்டிய தருணம் வந்திருக்கிறது. ஆனால், இலங்கையர்களாகிய நாம் செய்யக்கூடியதெல்லாம் இந்த வைரஸ் தொற்று கொள்ளை நோயில் இருந்து சீனா விடுபடுவதற்கு பிரார்த்திப்பதேயாகும் " என்று கூறினார்.

இலங்கை - சீன பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரான நளின் அல்போன்சோ தமதுரையில்," சீனா எமது நீண்டகால நட்பு நாடாகும். எமக்கிடையிலான சகோதரத்துவம் 2000 வருடங்ளுக்கும் அதிகமான காலம் பழமை வாய்ந்தது. எந்த விதத்திலும் அதை பிரிக்கமுடியாது. இலங்கைக்கு அவசியமாக உதவிகள் தேவைப்பட்ட நேரங்களில் எல்லாம் உண்மையான நட்பு நாடென்ற வகையில் எமக்கு உறுதுணையாக சீனா நின்றிருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் பல்வேறு வழிகளில் சீனா எம்மைப் பாதுகாத்திருக்கிறது. சுகாதாரம் உட்பட எந்தவொரு இடர்பாட்டையும் அல்லது பிரச்சினையையும் வெற்றிகொள்ளக்கூடிய வல்லமை சீனாவுக்கு இருக்கிறது என்று நாம் நம்புகிறோம். நீண்ட காலமாக அதை சீனா நிரூபித்திருக்கிறது.எனவே, கொரோனா வைரஸ் தொற்று கொள்ளை நோயையும் மிகவிரைவில் சீனா வெற்றிகொள்ளும் என்று நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம் " என்று கூறினார்.

" இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு சாத்தியமான சிறந்த நடவடிக்கைகளை சீனா எடுத்திருக்கிறது என்பதை நாமெல்லோரும் அறிவோம்.இலங்கையில் உள்ள சகல மதங்களினதும் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு இந்த பிரார்த்தனைகளை ஒழுங்குசெய்வதன் மூலம்  இலங்கை - சீன பத்திரிகையாளர் சங்கம் சீனாவுடனான சகோதரத்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் வெளிக்காட்டுகின்றது. இது எமது உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று நாம் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம் " என்றும் அபோன்சோ மேலும் கூறினார். 

சீனாவில் கொரோஸ் பரவலினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் ஹுபீ மாகாணத்தில் ' மண்டலமும் பாதையும் " செயற்திட்டம் தொடர்பான ஒரு மாத கால  கருத்தரங்கொன்றில் கலந்துகொண்ட ஒரு  இலங்கைப் பத்திரிகையாளரான மேனகா மூக்காந்தி வெத்தசிங்க , " அமைதி, சமாதானத்துக்காகவும் சகலரினதும் நல்வாழ்வுக்காகவும் இரவு பூராகவும் இந்துக்கள் பிரார்த்தனைகளில் ஈடுபடுகின்ற சிவராத்திரி தினத்தன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து சீனா மீண்டுவரவேண்டும் என்று பிரார்த்தனை செய்வது மிகவும் பொருத்தமானதாகும் " என்று குறிப்பிட்டார். இந்த புனித தினத்தில் நாம் செய்கின்ற பிரார்த்தனைகள் நிச்சயம் பயன்தரும் என்பது நிச்சயம் என்றும் வெத்தசிங்க கூறினார்.

பிரார்த்தனையில் கலந்தகொண்டவர்கள் ளெிப்படுத்திய நல்லெண்ண உணர்வுகளுக்கு பதிலளித்துப் பேசிய கொழும்பு சீனத்தூதரக பேச்சாளர் லுவோ ஷொங் பின்வருமாறு கூறினார் ;

"கொறோனாவைரஸுக்கு மதமோ, தேசமோ அல்லது எல்லைகளோ கிடையாது. அதனால், எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவற்றுக்கு அப்பால் எல்லோரும் இந்த வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஐக்கியப்படவேண்டியது அவசியமானதாகும். சீன அரசாங்கத்தினதும் சீனத் தலைவர்களினதும் வழிகாட்டலின் கீழ் சீனாவின் 140 கோடி மக்களும் இந்த வைரஸை தோற்கடிப்பார்கள் என்ற உறுதியான நம்பிக்கையை நாம் கொண்டிருக்கின்றோம். கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கோவில்களிலும் பள்ளிவாசல்களிலும் சிவராத்திரி தினமான இன்று  சீனாவுக்காக பிரார்த்தனைகளில் ஈடுபட்டமைக்காக இலங்கையர்களுக்கு நாம் நன்றி கூறுகின்றோம் "

கடந்த சில வாரங்களாக பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று இலங்கையின் நான்கு மதங்களையும் பின்பற்றுபவர்கள் தங்களுக்குரிய வணக்கத்தலங்களில் வைரஸ் கொள்ளை நோயிலிருந்து சீனாவின் விரைவான  மீட்சிக்காக பிரார்த்தித்துவருகின்றார்கள்.இது சகல வர்க்கங்களையும் மதங்களையும் இனக்குழுமங்களையும் சேர்ந்த இலங்கையர்கள் சீனா மீது கொண்டிருக்கும் நல்லெண்ணத்தை பிரதிபலித்து நிற்கிறது.

இலங்கை - சீன பத்திரிகையாளர் சங்கத்தினால் முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட  பிரார்த்தனை நிகழ்வுகள் கொழும்பில் கங்காராமய பௌத்த ஆலயம், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் தெவட்டக்கஹ முஸ்லிம் பள்ளிவாசல் ஆகியவற்றில் நடைபெற்றது. புனித அந்தோனியார் தேவாலயத்தில் ஆராதனை கொழும்பு அதிமேற்றிராணியாரும் இலங்கையில் வத்திக்கானின் அதியுயர் பிரதிநிதியாக இருப்பவருமான கார்டினல் மெல்கம் ரஞ்சித் தலைமையிலேயே  ஆராதனை இடம்பெற்றது.