அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2020 ஆம் ஆண்டின் மகளிர் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியுடனானா போட்டியில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

2020 ஆம் ஆண்டிக்கான மகளிர் இருபதுக்கு - 20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டி நேற்றைய தினம் இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையே பேர்த்தில் ஆரம்பமானது.

போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை அணி சார்பில் அணித் தலைவி சாமரி அத்தபத்து 41 ஓட்டங்களையும், ஹர்ஷிதா மாதவி 27 ஓட்டங்களையும், ஹசினி பெரேரா 20 ஓட்டங்களையும், அனுஷ்கா சஞ்சீவானி 15 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற ஏனைய வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.

128 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது 17.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை குவித்து வெற்றியை உறுதி செய்தது.

நியூஸிலாந்து அணி சார்பில் அணித் தலைவி சோஃபி டெவின் 75 ஓட்டங்களையும், ரேச்சல் பூசாரி 6 ஓட்டங்களையும், சுசி பேட்ஸ் 13 ஓட்டங்களையும் மேடி கிரீன் 29 ஓட்டங்களையும், கேட்டி மார்ட்டின் ஓட்டங்களையும் பெற்றனர்.

நாளை பேர்த்தில் ஆரம்பமாகவுள்ள 5 ஆவது போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.