வெள்ளவாய பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தின் பொறுப்பாளர் கடமையிலிருந்த நபர் 86 இலட்ச ரூபா பணத்தை மோசடி செய்து தப்பிச் சென்றுள்ளார். 

இது குறித்து, எரிபொருள் நிலைய உரிமையாளர் சோமசுந்தரம் கேதீஸ்வரம்பிள்ளை வெள்ளவாய பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

வெள்ளவாய நகரின் “ஊவா மெடிகல் சென்டர்” என்ற மருந்து நிலையத்தை நடத்தி வந்த சோமசுந்தரம் அகேதீஸ்வரம்பிள்ளை தனது வர்த்தக நிலையத்தில் மிகவும் நம்பிக்கையாக இருந்து வந்த ஊழியரை வெள்ளவாயவிலுள்ள தனது எரிபொருள் நிலையத்தின் பொறுப்பாளராக நியமித்தார்.

கடந்த இரு வாரங்களாக எரிபொருள் நிலைய இலாபப் பணம் தமக்குக் கிடைக்கப் பொறாமையால் அது குறித்துச் சம்மந்தப்பட்ட ஊழியரிடம் (பொறுப்பாளரிடம்) வினவினார். அதையடுத்து  குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில்  86 இலட்ச ரூபா பணம் தனக்கு வரவேண்டியுள்ளதாக  பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெள்ளவாய பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில்  இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லையென பொலிசார் தெரிவித்தனர்.