ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணையிலிருந்து விலகுவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவின் பாரதூர தன்மை தொடர்பில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான மங்கள சமரவீர கருத்து தெரிவித்திருக்கின்றார்.

ஜெனிவா பிரேரணை தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் பாரதூரமானது. பொருளாதார ரீதியில் மோசமான நிலைமையை தோற்றுவித்துள்ள அரசாங்கம் சர்வதேச மட்டத்தில் இலங்கையை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை மாத்திரமே முன்னெடுத்திருக்கின்றது. இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காணப்படவேண்டிய விடயத்தை இவர்களே தங்களின் சுயநல அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை நாம் காட்டிக்கொடுக்கவில்லை. மாறாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை மின்சாரக் கதிரையிலிருந்து காப்பாற்றினோம் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார்.
யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறைந்தபட்சம் எவ்விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுமில்லை. இதன் காரணமாகவே நாட்டுத் தலைவரும் இராணுவ அதிகாரிகளும் மின்சாரக் கதிரைக்கு செல்லவேண்டிய நிலை தோற்றம் பெறும் என்ற கருத்து அப்போது ஏற்பட்டிருந்தது. சர்வதேச பொறிமுறையிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே ஜெனிவாவின் அழுத்தமான நிலைப்பாடாக இருந்தது. இதனால்தான் சர்வதேச உறவை பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதுடன் பிரேரணைக்கு அனுசரணை வழங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது என்றும் மங்கள சமரவீர எம்.பி. சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் விளக்கமளித்துள்ளார். யுத்தம் முடிந்து ஐந்து நாட்களில் ஐ.நா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் மேற்கொண்ட கூட்டுப் பிரகடனத்தின் மூலம் உள்நாட்டில் தீர்த்துக்கொள்ள முடியுமாகவிருந்த பிரச்சினையை சர்வதேசமயமாக்கியவர் அன்றைய அரச தலைவராவார். அதனால்தான் சர்வதேசம் எமது உள்ளக விடயங்களில் தலையிட்டு வருகின்றது. பான் கீ மூனுடனான பிரகடனத்தில் சர்வதேச மனித உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்தது. இதனால்தான் எமது பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்பட்டது. அன்று தவறைச் செய்துவிட்டு தற்போது எங்களை தேசத்துரோகிகள் என தெரிவிக்கின்றனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்.
நல்லாட்சி அரசாங்கமானது ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியதன் மூலம் வரலாற்று தவறு இழைத்துவிட்டது. இதனாலேயே ஏனைய நாடுகள் எமது பாதுகாப்புப் படைகள் மீது மனித உரிமை குற்றச்சாட்டை சுமத்தும் நிலை ஏற்பட்டது என்று பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ உட்பட அரசாங்க அமைச்சர்கள் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதுடன் அரசாங்கத்தின் முடிவின் பாரதூரத் தன்மையையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தி நீதி வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கவில்லை. இந்த நிலையில் அரசாங்கத்தின்மீது சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தன. ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இடைநிறுத்தப்பட்டிருந்தது. சர்வதேச விசாரணையின் அவசியம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இத்தகைய அழுத்தங்கள் காரணமாக அன்றைய அரசாங்கம் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியிருந்தது. இவ்வாறான நிலையில்தான் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றது. சர்வதேசத்தின் அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கு ஏற்றவகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து செயற்பட அன்றைய அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதன் காரணமாகவே 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி 30/1 பிரேரணைக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியிருந்தது.
சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய உள்ளக விசாரணைப் பொறிமுறையின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இந்தப் பிரேரணை வலியுறுத்தியது. அன்றைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருந்தபோதிலும் சர்வதேச நீதிபதிகளை விசாரணையில் உள்ளடக்க முடியாது என்றும் உள்ளக விசாரணைப் பொறிமுறையினை மட்டுமே நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்க முடியும் என்றும் அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.
இதனால் பிரேரணையில் குறிப்பிடப்பட்டவாறு பொறுப்புக்கூறல் தொடர்பில் உரிய வகையில் விசாரணைகள் நடைபெற்றிருக்கவில்லை. ஒருசில முன்னேற்றகரமான விடயங்கள் இடம்பெற்றனவே தவிர நல்லாட்சி அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கியதற்கேற்ப செயற்பட்டிருக்கவில்லை. ஆனாலும் கால அவகாசத்தைப் பெற்று பொறுப்புக்கூறும் விடயத்தில் இழுத்தடிப்பையே அன்றைய அரசாங்கம் மேற்கொண்டு வந்தது.
ஆனாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமானது ஐ.நா. மனித உரிமைப் பேரவையுடன் முற்றாக பகைக்காத தன்மையை கொண்டு செயற்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கமானது பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து முற்றாக விலகுவதாக அறிவித்திருக்கின்றது. மாற்று திட்டமொன்றினை எடுக்காது இந்த விடயத்தில் அரசாங்கம் திடீர் முடிவு எடுத்தமை நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகவே அமையப்போகின்றது.
இந்த விடயம் தொடர்பில் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசாங்கமானது ஜெனிவா பிரேரணையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து நாட்டுக்கு பாதகமாக அமையக்கூடிய மேலும் தடைகள் விதிக்கப்படக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது. தேசிய நல்லிணக்கத்தின்மீது தொடர்ந்தும் பற்றுறுதி கொண்டிருப்பதை வெளிக்காட்டக்கூடியதாக மாற்றுப் பயணத்திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டியது இன்றியமையாததாகும் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
ஜெனிவா பிரேரணையிலிருந்து அரசாங்கம் விலகினால் அடுத்த கட்ட மாற்று நடவடிக்கைகளுக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கருத்து தெரிவித்திருக்கின்றார். இதேபோன்றே தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றுகையில், அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் தீர்வுக்கு வழியை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
47 நாடுகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையிலிருந்து அரசாங்கம் விலக எடுத்திருக்கும் தீர்மானத்தால் சர்வதேசத்தை நாட்டுக்குள் வலிந்து அழைக்கும் நிலை ஏற்படும். அதன் மூலம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வழி பிறக்க இடமிருக்கிறது என்று மாவை சேனாதிராஜா எம்.பி. சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பிலான பாதகத் தன்மை குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அந்த விடயத்தை மாற்றுக் கண்ணோட்டத்துடன் அணுகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
தற்போது நாடு பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு நிரந்தர சமாதானம் உருவாக்கப்பட்டால்தான் நாட்டை கட்டியெழுப்ப முடியும். இதனைவிடுத்து பிரதான அரசியல் கட்சிகள் தமது அரசியல் சுயநலன்களுக்காக தீர்மானங்களை எடுத்தால் நாடு பின்னோக்கிச் செல்வதை தவிர்க்க முடியாது. இன்றைய நிலையில் பொறுப்புக்கூறும் விடயத்திலிருந்து அரசாங்கம் பின்வாங்குவதானது பெரும் நெருக்கடிகளையே உருவாக்கும். அதனைத்தான் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்திருக்கின்றது.
எனவே எதிர்காலத்தில் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் அரசாங்கம் செயற்படவேண்டியது இன்றியமையாதது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
(22.02.2020 வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் )