மகா சிவராத்திரி தரிசனத்திற்காக திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு 5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை

22 Feb, 2020 | 10:09 AM
image

மகா சிவராத்திரி தினமான நேற்று, இரவு கண்விழித்து சிவனை ஆராதிப்பதால், எமது பாவங்கள் நீங்கி முக்தி அடையலாம் என்ற நம்பிக்கையால், உலகளாவிய ரீதியில் சிவாலயங்களில் பக்தர்கள் சிவராத்திரி விரதத்தை கண்விழித்து அனுஷ்டிக்கின்றனர்.

இதே வேளை, இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான பாடல்பெற்ற திருத்தளமான மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில்  மகா சிவராத்திரி விரதமானது, 5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் மகா சிவராத்திரியில்  திருக்கேதீச்சர நாதரை தரிசிப்பதை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர். 

எனவே, ஒவ்வொரு ஆண்டும் திருக்கேதீச்சர ஆலயம் மகா சிவராத்திரி தினத்தில் விழாக்கோலம் பூணுகின்றது. 

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு  நேற்று காலை தொடக்கம் திருக்கேதீச்சர ஆலயத்தில் சிறப்பாக, மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் பல்வேறு  சமய நிகழ்வுகள் பூஜைகள் மற்றும் சமய சொற்பொழிவுகள் என்பன இடம்பெற்றது.

இதன்போது புனித பாலாவி தீர்த்தக்குளத்தில் நீராடிய பக்தர்கள் தீர்த்தங்களை சுமந்து சென்று மஹாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து இரவு நான்கு சாம பூஜைகளில்  சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் இடம் பெற்றன. 

இரவு வரை பக்கதர்கள் தீரத்தங்களை சுமந்து சிவலிங்க அபிஷேகத்தில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

 மகா சிவராத்திரி தினத்தில் அதிகமான பக்தர்கள்  திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு வருகை தருவதால்,  விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் பிரதேசம் முழுவதும் சுமார் 300க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் பெரும்பாலான சகோதர இனத்தவர்களும் சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right