சிரியாவின் வடபகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்கள் பாரிய இரத்தக்களறியில் முடிவடையலாம் என எச்சரித்துள்ள ஐநா யுத்தநிறுத்தத்திற்கான அழைப்பை விடுத்துள்ளது.

சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களின் பிடியில் உள்ள இறுதிபகுதியை கைப்பற்றுவதற்காக  ரஸ்யாவின் விமானப்படையின் உதவியுடன்  சிரிய படையினர் டிசம்பர் மாதம் முதல் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அலெப்போவின் வடமேற்கு மற்றும் இட்லிப்பில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக 1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

பெருமளவு பெண்களும் குழந்தைகளும் துருக்கி எல்லையில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஏற்கனவே 3.7 மில்லியன் சிரிய அகதிகள் தனது நாட்டில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள துருக்கி தன்னால் மேலும் அகதிகளிற்கு இடமளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளதுடன் இட்லிப்பை நோக்கி சிரிய படையினரின் முன்னேற்றதை முறியடிப்பதற்காக தனது படையினரை பயன்படுத்தப்போவதாகவும் இதன் மூலம் மனிதாபிமான நெருக்கடியை முறியடிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

கடும் குளிரின் மத்தியில் சிரிய அகதிகள் வீதியோரங்களிலும் தோட்டங்களிற்குள்ளும் உறங்குகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையிலேயே ஐநா இரத்தக்களறி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலதிக துயரத்தையும், இரத்தக்களறியையும் தடுப்பதற்காக நாங்கள் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம் என ஐநாவின் மனிதாபிமான முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

குழந்தைகளுடன் தப்பியோடிய 900,000 பேர் குறைவடைந்து வரும் பகுதியொன்றிற்குள் சிக்குண்டுள்ளனர், மோதல் அவர்களை நோக்கி செல்கின்றது என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.