(எம்.ஆர்.எம்.வஸீம்)

மாகாணசபை தேர்தலை பழைய முறைமையில் நடத்த தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றோம். பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மாகாணசபை தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் திட்டமாகும் என நீதி மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

பொதுத் தேர்தலைத்தொடர்ந்து மாகாணசபை தேர்தலை நடத்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்ற பின்னர் மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்த அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது. மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை தற்போது மேற்கொண்டு வருகின்றோம்.

இதுதொடர்பான சட்ட ஏற்பாடுகளை நீதி மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

அத்துடன் மாகாணசபை தேர்தல் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டு வருவது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஒருசில மாகாணசபைகளின் ஆட்சிக்காலம் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்கும் அதிக காலம் சென்றுள்ளது. அதனால் மாகாணசபைகளினால் மக்களுக்கு மேற்கொள்ளவேண்டிய சேவைகளை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றது. 

மேலும் கடந்த காலங்களில் மாகாணசபைகளினால் மேற்கொள்ளப்படும் சேவை தொடர்பாக பார்க்கும்போது, மாகாணசபை தேவையா இல்லையா என்பது வேறுவிடயம். அதுதொடர்பாக வேறு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும்.

என்றாலும் தற்போதுள்ள சட்டத்திற்கமைய பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்தவுடன் மாகாணசபை தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்போம். அதற்கு தேவையான சட்ட வரைபுகளை தயாரித்து வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.