(செ.தேன்மொழி)

ஊழல் , மோசடிகள் மற்றும் சமூகவிரோத செயல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அரசியல் வாதிகளுக்கும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இது வரையில் சபையில் ஒரு உரையேனும் நிகழ்த்தாமல் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று  மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க , இவ்வாறான அரசியல்வாதிகளை மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கடந்த அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் தொடர்ந்தும் செயற்பட்டுவந்தது. அதற்கமைய பாராளுமன்றத்திற்கே முழு அதிகாரத்தையும் பெற்றுக் கொண்டிருந்தது.

இருந்த போதிலும் 52 நாட்கள் அரசியல் நெருக்கடியின் போது பாராளுமன்றத்தை அவமதிக்கும் வகையில் முறைகேடான சம்பவங்கள் இடம்பெற்றன.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மிளகாய்த்தூளை வீசியதுடன் , புத்தகங்களையும் கீழே எறிந்தனர்.

இவ்வாறான உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் போனதையிட்டு கவலையடைகின்றேன்.

ஊழல் , மோசடிகள் மற்றும் சமூகவிரோத செயல்களுடன் தொடர்பு கொண்டுள்ள அரசியல்வாதிகள் மற்றும் ,  பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இதுவரையிலும் ; ஒரு உரையையேனும் ஆற்றாமல் இருக்கும் வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.

மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் தெரிவிக்க கூடிய சிறந்த உறுப்பினர்களையே மக்கள் தெரிவு செய்ய வேண்டும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை அடுத்து அவர்கள் அரசாங்கத்தை ஆட்சி அமைக்க நாங்கள் சந்தரப்பத்தை வழங்கியிருந்தோம்.

அவர்கள் ஆட்சிக்கு வந்து 100 க்கும் அதிகமான நாட்கள் கடந்துள்ள நிலையில் நாட்டின் நலனுக்காக எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்கவில்லை.

அரசாங்கம் இடைக்கால வரவு செலவு திட்டமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் இடைக்கால கணக்கறிக்கையொன்றை தயாரித்து அதனை சபையில்சமர்ப்பிக்க முயற்சித்தது.

பிறகு அது தொடர்பில் சிக்கல்கள் ஏற்படக்கூடிய நிலைமைகள் காணப்பட்டதால் அதனை சமர்ப்பிக்காமல் கைவிட்டுள்ளது. எவ்வாறாயினும் அதனை அரசாங்கம் சமர்ப்பித்திருந்தால் நிச்சயம் அது நிராகரிக்கப்பட்டிருக்கும்.

தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறும் விடயங்களை பார்க்கும் பொழுது 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுவதாக தோன்றுகின்றது என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.