வெளிநாட்டு பெண்ணொருவரை ஏமாற்றி 300 இலட்சம் ரூபாய் மோசடி செய்த சந்தேக நபரொருவரை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர்  திருகோணமலையில்  இன்று (21.02.2020) கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் காலி-கல்பே பகுதியைச் சேர்ந்த சமீர சம்பத் (33வயது) என குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

வெளிநாட்டு பெண் ஒருவருடன் தொடர்புகளை வைத்துக்கொண்டு திருகோணமலை  நிலாவெளி  பகுதியில் அரசுக்குச் சொந்தமான காணி ஒன்றை  பெற்று ஹோட்டல் ஒன்றை அமைத்துள்ளதாகவும்  அதன்பின்னர் வெளிநாட்டு பெண்ணொருவரை அதில் இருந்து வெளியேற்றி அவருடைய 300 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாகவும்  சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் சந்தேக நபர் பல தடவைகள் தேடப்பட்டு வந்திருந்த நிலையில் நேற்றிரவு நிலாவெளி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

குறித்த ஹோட்டல் அமைக்கப்பட்ட இடம் அரசுக்குச் சொந்தமான ( உல்லாச பிரயாணம் சபைக்குச்)  இடம் எனவும் குறித்த வெளிநாட்டு பெண் ஒருவரை ஏமாற்றி அக்காணியில் ஹோட்டல் ஒன்றினை அமைத்து   அப்பெண்னை ஏமாற்றி பணத்தை மோசடி செய்ததாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேலு முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்தனர்.