மகளிர் இருபதுக்கு : 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணியுடானா முதல் போட்டியில் பூணம் யாதவ்வின் சிறப்பான பந்து வீச்சினால் இந்திய அணி 17 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய தினம் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் ஆரம்பமானது மகளிர் இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத் தொடரின் லீக் சுற்றின் முதல் போட்டியில் இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி களத்தடுப்பை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை குவித்தது.

இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 49 ஓட்டங்களையும் ஷஃபாலி வர்மா 29 ஓட்டங்களையும் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 26 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

அதன் பின்னர் 135 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணிக்கு இந்திய அணியின் பூணம் யாதவ் தனது சுழல் பந்து மூலமாக அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

அதனால் அவுஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 17 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவினர்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் அலிஷா ஹெலி 51 ஓட்டங்களையும்,  ஆஷ்லீ கார்ட்னர் 34 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற, ஏனைய வீராங்கனைகள் அனைவரும் சொப்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பூணம் யாதவ் 4 விக்கெட்டுக்களையும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டுக்களையும் மற்றும் ராஜேஸ்வரி கயக்வாட் ஒருவிக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Photo Credit : ICC