கொரோனா வைரஸ் தொற்றின் மையப் பகுதியான சீனாவின் ஹூபேயில் கொரோனா தொற்று தொடர்பாக 631 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் இன்றையதினம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஹொங்கொங்கில் பொலிஸ் அதிகாரியொருவர் கொரோனாவினால் பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி பெப்ரவரி 18 ஆம் திகதி ஒரு உணவத்தில் 59 ஏனைய பொலிஸ் அதிகாரிகளுடனும் விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். அதனால் குறித்த 59 பொலிஸ் அதிகாரிகளும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைரஸ் தொடர்பில் சோதனை செய்த நோயாளிகள் மட்டுமே தற்போது அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களில் கணக்கிடப்பட்டுள்ளனர் என்று சீன அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இதேவேளை சீனாவில் சுமார் 500 க்கு மேற்பட்ட சிறைக் கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிகரித்து செல்லும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை : 

சீன அரசாங்கத்தின் புள்ளி விபரங்களின் அடிப்படையில் சீனாவில் 1,100 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். சீனாவின் பிரதான நிலப்பரப்பில் மொத்தமாக பதிவாகிய நோயாளர்களின் எண்ணிக்கை  தற்போது 75,600 க்கும் அதிகமாக உள்ளது, உலகளாவிய ரீதியில் மொத்தம் 76,900 க்கும் அதிகமாகமான கொரோனா நோயர்ளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதிகரித்து செல்லும் உயிரிழப்புகள்:

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்தும் அதிகரித்து செல்கிறது. சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் நேற்றைய தினம் மாத்திரம் 118 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 115 பேர் ஹூபேயில் உயிரிழந்துள்ளனர். உலகளாவிய ரீதியில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,247 ஆக பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட் சிறைக் கைதிகள்: 

சீனாவின் சிறைச்சாலைகளுக்குள் சுமார் 512 கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹூபேயிலுள்ள சிறைச்சாலையில் 271 கைதிகளும், ஷான்டோங்கிலுள்ள சிறைச்சாலையில் 207 கைதிகளும் மற்றும் ஜெஜியாங்கிலுள்ள சிறைச்சாலையில் 34 கைதிகளும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்கொரியாவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு:

தென் கொரியாவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு வாரத்திற்கு முன்னர் 28 இல் இருந்தது. எனினும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை அந்த எண்ணிக்கையானது 204 ஆக உயர்வடைந்துள்ளது.

தென் கொரியாவில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தும் உள்ளார்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சீயோல் முயற்சி:

தென்கொரிய அரசாங்கம் இன்று வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சியில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதில் தலைநகர் சீயோலில் பொது இடங்களை மூடுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுத்தல் போன்றன மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை தென்கொரியாவின் ஆயுதப் படையில் மூன்று வழக்குகள் கண்டறியப்பட்ட பின்னர், தென்கொரிய இராணுவ வீரர்கள் அனைவரும் தங்களது தளங்களை விட்டு வெளியேறுவதற்கும் விடுமுறைக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளியேற்றப்பட்டவர்களிடம் சோதனை:

டயமண்ட் பிரின்சஸ் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய பயணிகளிடம் கொரோனா தொற்று தொடர்பான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில், சோதனைக்காக நெப்ராஸ்கா பல்கலைக்கழக  மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கப்பலில் பயணித்த 13 பேரில் 11 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்ட அவுஸ்திரேலியர்கள் இருவர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் இன்றைய தினம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அவுஸ்திரேலியாவின் ஹோவர்ட் ஸ்பிரிங்ஸ் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணித்த 639 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கப்பலிலிருந்து பயணிகள் தொடர்ச்சியாக தரையிறக்கம்:

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணித்த பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று தொடர்பான சோதனையின் பின்னர், வைரஸ் தொற்றுக்குள்ளாகாத பயணிகள் கப்பலிலிருந்து இன்று மூன்றாவது நாளாகவும் வெளியேறுகின்றனர்.

வெஸ்டர்டாம் பயணிகளின் சோதனை முடிவுகள்  

வெஸ்டர்டாம் பயணக் கப்பலில் பயணித்த 747 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்கள் எவரும் வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கப்பலிலிருந்து தரையிறங்கியுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள்:

ஹொங்கொங்கில் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட கொரோனா தொடர்பான 3 புதிய பதிவுகளின் படி பொலிஸ் அதிகாரியொருவரும் உள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி பெப்ரவரி 18 ஆம் திகதி ஒரு உணவகத்தில் 59 ஏனைய பொலிஸ் அதகாரிகளுடனும் விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். அதனால் குறித்த 59 பொலிஸ் அதிகாரிகளும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Photo Credit : CNN