ராஜபக்ஷவினர் தமது குடும்பத்தினரின் அமெரிக்க குடியுரிமையை கைவிட முடியுமா ? - ஜே.வி.பி.சவால்

By R. Kalaichelvan

21 Feb, 2020 | 04:44 PM
image

(எம்.மனோசித்ரா)

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்திருக்கின்றமையை ராஜபக்ஷாக்கள் உண்மையில் எதிர்ப்பவர்களாக இருந்தால் , அவர்கள் தங்கள் குடும்பத்தினரின் அமெரிக்க குடியுரிமையை கைவிட முடியுமா என்று சவால் விடுத்த மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, உள்நாட்டு விவகாரங்களில் ஏகாதிபத்திய நாடுகளின் தலையீட்டுக்கு ராஜபக்ஷ ஆட்சியே வழியமைத்துக் கொடுத்ததாகவும் குற்றஞ்சுமத்தினார்.

ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குற்றஞ்சுமத்திய அவர் மேலும் கூறியதாவது : 

' 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில்  அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அப்போதைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது.

இதனால் ஜெனீவாவில் இலங்கை காட்டிக்கப்பட்டதோடு பாரிய பாதகங்கள் ஏற்பட்டுள்ளன. விஷேடமாக தற்போதைய இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுப்பதற்கு இதுவே மூல காரணமாக அமைந்தது. அந்த தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கிய போது ஐ.தே.க, ஜே.வி.பி. , தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்த அரசாங்கமே காணப்பட்டது என்றும் இதற்கு எதிராக ஜே.வி.பி. எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை ' என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கையொன்றில் குறிப்பிட்டிருந்தார். 

பிரதமரின் பொறுப்பற்ற இந்த கருத்தினை நிராகரிக்கின்றோம். ஜே.வி.பி. தொடர்பில் அவரால் முன்வைக்கப்படுகின்ற இந்த கருத்துக்கள் பொய்யானவையாகும். இதற்கு நாம் கடும் எதிர்ப்பினைத் தெரிவிக்கின்றோம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 5 ஆண்டு காலத்தில் நடைபெற்ற விடயங்களை மறந்துவிட்டார் என்று எண்ணுகின்றோம். இல்லையெனில் நினைவிருந்தும் இவ்வாறான கருத்தினை வெளியிட்டுள்ளார் என்றும் தோன்றுகிறது. 2015 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவை கூடிய போது , இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்று சமர்பிக்கப்படவிருந்தது.

அந்த சந்தர்ப்பத்திலேயே அமெரிக்கா தனது யோசனையை முன்வைத்தது. அதன் காரணமாகவே அப்போதைய அரசாங்கம் அதற்கு இணை அனுசரணை வழங்கியது. அதன் போது ஜே.வி.பி அந்த அரசாங்கத்தின் பங்காளியாகவோ அல்லது இணைந்து செயற்படும் கட்சியாகவோ இருக்கவில்லை. அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதை நாம் அங்கீகரிக்கவும் இல்லை. அதற்கு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தோம். 

2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அதில் அரசாங்கம் எடுத்த அந்த தீர்மானத்தின் பாரதூரத்தன்மை குறித்து தெரியப்படுத்திருந்தோம்.

 அத்தோடு கொழும்பு பொது நூலகத்தில் கருத்தரங்கொன்றையும் நடத்தியிருக்கின்றோம். இவ்வாறிருக்கையில் ஜே.வி.பி. இணைந்த அரசாங்கம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடாமல் பிரதமர் அவரது வயதுக்கும் பதவிக்கும் பொருத்தமான வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். 

இவ்வாறான மனித உரிமைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து மீள்வதற்கு நாட்டில் மனித உரிமைகள் , ஜனநாயகம் என்பன பாதுகாக்கப்படுவதோடு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை வழங்க வேண்டும் என்பதே ஜே.வி.பி.யின் நிலைப்பாடாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right