ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் செப்டெம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அஷ்ரப் கானி வெற்றி பெற்றிருப்பதாக நீண்ட தாமதத்துக்குப் பிறகு சுயாதீன தேர்தல் ஆணைக்குழு விடுத்த அறிவிப்பு போரினால் சின்னாபின்னமான அந்த நாட்டின் அரசியல் நெருக்கடியை மேலும் ஆழப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளைப் பிரகடனம் செய்வதற்கு சுமார் 5 மாத காலம் எடுத்ததென்பது நெருக்கடியின் பாரதூரத் தன்மையை தெளிவாக வெளிக்காட்டுகிறது. ஜனாதிபதி கானிக்கு 50.64 வீத வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிரணி வேட்பாளர் அப்துல்லா அப்துல்லாவுக்கு 39.52 வீத வாக்குகளும் கிடைத்திருந்தன. 

தேர்தல் முடிவுகளை மோசடித்தனமானவை என வர்ணித்திருக்கும் அப்துல்லா சமாந்தரமான அரசாங்கமொன்றை அமைக்கப் போவதாக சூளுரைத்திருக்கிறார். அவ்வாறு அவர் செய்வாரேயானால் பிரதான நகர மையங்களுக்கு அப்பால் தனது அதிகாரத்தைச் செலுத்த முடியாமல் ஏற்கனவே பலவீனப்பட்டிருக்கும் அரசாங்கத்தை மலினப்படுத்துவதாகவே இருக்கும். ஆப்கானிஸ்தான் வாக்காளர்களைப் பொறுத்தவரை இத்தகைய நிலைவரத்தை அவர்கள் ஏற்கனவே அனுபவித்திருக்கிறார்கள். 

5 வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலில் கானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போதிலும் , அந்த முடிவை ஏற்றுக் கொள்ள அப்துல்லா மறுத்துவிட்டார். அப்போதைய அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி இரு தரப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி அதிகாரப்பகிர்வு உடன்படிக்கையொன்றுக்கு வழிவகுத்தார். அந்த உடன்படிக்கை ஜனாதிபதியாக கானி பொறுப்பேற்க அனுமதித்தவுடன் அரசாங்கத்தின் பிரதம நிறைவேற்று தலைவராக அப்துல்லா வருவதற்கும் வழிவகுத்தது. 

அந்த 5 வருடங்கள் பூராகவும் கானியும் அப்துல்லாவும் ஒருவருடன் ஒருவர் ஒத்துப்போகவில்லை. அதே வேளை நாட்டுப்புறங்களில் படிப்படியாக தங்களது நடவடிக்கைகளை விரிவுபடுத்திய தலிபான்கள் நகர மையங்கள் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினார்கள். கடந்த செப்டெம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆப்கானிஸ்தானின் மொத்த வாக்காளர்களில் 25 சத வீதமானவர் மாத்திரமே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தார்கள் என்பது ஆச்சரியத்துக்கு உரியதல்ல. இது முழு தேர்தல் செயன்முறை மீதான நம்பிக்கை குறித்து கேள்விகளை எழுப்பியது. 

அமெரிக்கா தலிபான்களுடன் உடன்படிக்கையொன்றை செய்வதை அண்மிக்கும் நேரத்தில் கானிக்கும் அப்துல்லாவுக்கும் இடையிலான சச்சரவு நிலைவரத்தை மேலும் மோசமாக்குகிறது. கிளர்ச்சியாளர்கள் 7 நாள் பரீட்சார்த்த காலத்துக்கு வன்முறையை குறைப்பார்களேயானால், உடன்படிக்கையை கைச்சாத்திடும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அதிகாரிகளுக்கு அனுமதியளித்திருப்பதாக ஆரம்ப செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த உடன்படிக்கை ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் வெளியேறி , அமெரிக்காவின் நீண்ட காலப் போர் முடிவுக்கு வருவதற்கு வழி வகுக்கும் ;  இறுதி இணக்கத் தீர்வொன்றுக்காக தலிபான்களும் ஆப்கான் அரசாங்கமும் நேரடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.  

ஆனால், அமெரிக்கத் துருப்புக்கள் நிலை கொண்டிருக்கும் போது கூட நாட்டின் பாதுகாப்பு நிலைவரத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கு ஒரு போதும் இயலுமாக இருக்கவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். அமெரிக்கா தலிபான்களுடனான அதன் நேரடிப் பேச்சுவார்த்தைகளிலிருந்து அரசாங்கத்தை விலக்கி வைத்தது. அரசாங்கத்தை ஆப்கானிஸ்தானின் சட்ட பூர்வமான ஆட்சியாளர்களாகக் கிளர்ச்சியாளர்கள் கருதவில்லை என்பதே அதற்குக் காரணமாகும். அமெரிக்கப் படை விலகல் பெரும்பாலும் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தலிபான்களுக்கு உதவுவதாக அமையும். சர்ச்சைக்குரிய தேர்தல் முடிவுகளும் நீண்ட நாள் அரசியல் உட்சண்டைகளும் நிர்வாகத்தை மேலும் பலவீனப்படுத்தும். 

மீண்டெழுகின்ற தலிபான் இயக்கத்துடன் பலவீனமானதொரு நிலையிலிருந்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தப்போகின்றதானால் எவ்வாறு அரசியலமைப்பை அது பாதுகாக்கப் போகிறது ? தலிபான்கள் அதிகாரத்திலிருந்து விரட்டப்பட்டதற்கு பின்னரான கால கட்டத்தின் எந்தவொரு சாதனையையும் எவ்வாறு பாதுகாக்கப் போகின்றது ? நெருக்கடியில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முக்கியமான பிரச்சினையை விளங்கிக் கொள்ள தவறுகிறார்கள் போலத் தோன்றுகிறது. 

தோல்வி கண்ட போரொன்றில் இருந்து வெளியேறிவிடவே அமெரிக்கா விரும்புகிறது. கானி தனது பதவியை தக்க வைக்க விரும்புகிறார். எதிரணியுடன் அரசாங்கம் அதிகாரப்பகிர்வை செய்து கொள்வதை உறுதிப்படுத்த அப்துல்லா விரும்பக் கூடும். இந்த சுயநல - குறுகிய நோக்குடனான நகர்வுகளில் தீவிரவாதிகளைத் தோற்கடித்து ஆப்கானிஸ்தானை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமாக தேவைப்படும் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை சகல தரப்பினரும் மறந்து செயற்படுகின்றார்கள். 

( த இந்து )