லண்டன் மசூதியில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தினை தொடர்ந்து சந்தேக நபர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு , குறித்த சம்பவத்தினை பொலிஸார் பயங்கரவாத செயலாக இருக்க வாய்ப்பில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

சம்பவத்தில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை , ஆனாலும் 70 வயதுடைய நபர் ஒருவர் காயங்களுக்குள்ளானதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளதோடு , அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை காயமடைந்த நபர்  மசூதியில் இடம்பெறும் பிரார்த்தனைகளுக்கு அழைப்பு விடுபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு பிரார்த்தனை இடம்பெற்றுக்கொண்டிருந்து வேலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால் , உடனடியாக பிரார்த்தனைகளை நிறுத்திய வழிப்பாட்டாளர்கள் சந்தேக நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

எனினும்  இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இம் மாதிரியான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருக்க பொலிஸார் விழிப்புடன் இருக்கவேண்டுமென  வழிப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Photography by : BBC