கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் தற்போது தங்களது பொலிவான தோற்றத்திற்காக சிக்ஸ் பேக் மற்றும் சைஸ் ஜீரோ ஆகியவற்றின் மீது விருப்பம் கொண்டு காலை உணவை தவிர்க்கிறார்கள். அத்துடன் பல்வேறு வகையிலான உணவுமுறையையும் பின்பற்றுகிறார்கள்.

அத்துடன் தண்ணீரைக்கூட போதுமான அளவிற்கு மட்டுமே அருந்தி, உணவுகளை குறைத்து, அதற்கு பதிலாக விற்றமின் சத்து மற்றும் ஏனைய சத்துகளைக் கொண்ட மாத்திரைகளை காலை உணவாக எடுத்துக்கொள்கிறார்கள். அதே தருணத்தில் மற்றொரு பிரிவினர் பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித வகை உணவுகளை உட்கொண்டு உடல் எடையை அதிகரித்து, உடற்பருமனுக்கு ஆளாகிறார்கள். இவர்களுக்கு வளர்சிதை மாற்ற குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்களின் உடல் எடை சீரற்றதாக மாறுகிறது.

இந்நிலையில் உடல் எடையை குறைக்கவும், உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றக் குறைபாட்டை அகற்றவும், ஆரோக்கிய உணவை மேற்கொண்டு உடல் எடையை சீராக பராமரிக்கவும், உடற்பருமனால் பாதிக்கப்பட்டவர்களும் காலை உணவை தவிர்க்கக் கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

ஏனெனில் காலை உணவு உட்கொள்ளும் போது அதனை வளர்சிதை மாற்றத்திற்கு உதவும் உடலிலுள்ள சுரப்பிகளின் செயல்பாடு சீராக இருந்து, உடலுக்குத் தேவையான சக்தியை உணவிலிருந்து உறிஞ்சு கிறது என்பதை ஆய்வின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். 

காலை உணவை தவிர்க்க வேண்டாம் என்று பரிந்துரைக்கும் ஊட்டச்சத்து நிபுணர்கள், இரவு உணவின் அளவைக் குறைத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் இரவு உணவை, உடலிலுள்ள சுரப்பிகள் அதிலிருந்து உறிஞ்சும் ஆற்றலுக்கான செயல்பாடு குறைகிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலை உணவை தவிர்க்க கூடாது என்றும், காலை உணவில் உங்கள் ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைக்கும் ஊட்டசத்துகள், நுண்ணூட்ட சத்து, விற்றமின் சத்து ஆகியவை இடம்பெறவேண்டும் என்பது முக்கியம்.