ஜெனீவா விவகாரத்தில் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் இம்முறை ஜெனீவா விவகாரத்தை மிகவும் இலகுவாக கையாள்வோம். இலங்கையில் தற்போது சிறந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். 

எனவே ஜெனீவாவில் இம்முறை இலங்கை அரசாங்கத்திற்கு எந்தவிதமான நெருக்கடியும் ஏற்படாது. நாங்கள் அனைத்து விடயங்களையும் உரிய முறையில் கையாள்வோம். ஐக்கிய நாடுகள் சபை எமக்கு கால அவகாசத்தை வழங்கும் என நம்புகிறோம். நாம் சரியான முறையில் நல்லிணக்க வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் 

கேள்வி ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ளது. எதிர்வரும் 29 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். இதற்கு அரசாங்கம் எவ்வாறு தயாராகியுள்ளது ? 

பதில் ஜெனீவா விவகாரத்தில் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் இம்முறை ஜெனீவா விவகாரத்தை மிகவும் இலகுவாக கையாள்வோம். இலங்கையில் தற்போது சிறந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஜனநாயகத்தின் சம்பியன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உலகம் பாராட்டுகின்றது. மனித உரிமையை மதிப்பதில் இலங்கையிடம் தற்போது பாடம் கற்க வேண்டுமென அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் கூறுகிறார். எனவே ஜெனீவாவில் இம்முறை இலங்கை அரசாங்கத்திற்கு எந்தவிதமான நெருக்கடியும் ஏற்படாது. நாங்கள் அனைத்து விடயங்களையும் உரிய முறையில் கையாள்வோம். ஐக்கிய நாடுகள் சபை எமக்கு கால அவகாசத்தை வழங்கும் என நம்புகிறோம். நாம் சரியான முறையில் நல்லிணக்க வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். 

கேள்வி மஹிந்த தரப்பிலிருந்த தயான் ஜெயதிலக்க தற்போது மைத்திரி தரப்பிற்கு வந்துவிட்டதாக தெரிகிறது. என்ன நடக்கிறது ? 

பதில் அவ்வாறு அவர் இந்த தரப்பிற்கு வரவில்லை. ஆனால் கடந்த காலங்களில் அவர் சற்று தடுமாறிவிட்டார் என்று எண்ணுகிறோம். ஆரம்பத்தில் மஹிந்தவின் அரசை கவிழ்க்க வேண்டுமென என்னுடன் தயான் கலந்துரையாடினார். ஆனால் மஹிந்தவின் அரசு கவிழும்போது தயான் ஜயதிலக்க மஹிந்தவின் பக்கம் இருந்தார். இதுதான் நிலைமையாகும் என்றார். 

இதேவேளை இலங்கையின் மனித உரிமை நிலைமை மற்றும் உள்ளக விசாரணைப் பொறிமுறை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியிடவுள்ள வாய்மூல அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகிவருகின்றது. 

அதன்படி எதிர்வரும் 29 ஆம் திகதி ஜெனிவாவில் உரையாற்றவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பான முன்னேற்றம் மற்றும் அரசாங்கம் இது தொடர்பில் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளார். 

கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரின் ஆரம்ப அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய செய்ட் அல் ஹுசேன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திடமிருந்து பரந்துபட்ட உபாயமார்க்கம் தேவைப்படுகின்றது என்று குறிப்பிட்டிருந்தார். 

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் நடைபெறும்.