(எம்.எப்.எம்.பஸீர்)

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் மார்ச் 11 ஆம் திகதியும், 16,17 மற்றும் 24,26 ஆம் திகதிகளிலும் முன்னெடுக்க கொழும்பு, மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்ற அமர்வு இன்று தீர்மானித்தது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 இராணுவ புலனாய்வாளர்களுக்கும் குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவ்வழக்கு நீதிபதி சம்பத் அபேகோன் தலைமையில் சம்பத் விஜேரத்ன மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய விஷேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன்னாள்  விஷேட மேல் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் விசாரணைக்கு வந்தது. 

இதன்போதே  எதிர்வரும் மார்ச் 11 ஆம் திகதி முதல் விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது. 

அதன்படி முதல் இவ்வழக்கின் முதலாவது சாட்சியாக காணாமல் ஆக்கப்பட்டுள்ள பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்யா எக்னெலிகொட சாட்சியம் அளிக்கவுள்ளார். 

அவரை விட மேலும் மூன்று சாட்சியாளர்களுக்கு அறிவித்தல் அனுப்பட்டுள்ளது.