மக்கள்மயப் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பி வறுமையை ஒழிப்பது தனது நோக்கமாகுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று (20) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி அலுவலர்கள் சங்கத்தின் 22வது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். “சமூர்த்தி
விவசாய உரிமைகளை உறுதிப்படுத்தும் பொதுஜன யுகம்” என்ற கருப்பொருளின் கீழ் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சமூர்த்தி மற்றும் விவசாய அலுவலர்கள் 176 பேருக்கு இதன்போது நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. கடந்த ஐந்து வருடக் காலப்பகுதியில் நிரந்தர நியமனங் கிடைக்காத சமூர்த்தி புதிய நியமனங்களை பெற்றுக்கொண்டவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டன.
சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மக்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்திற்கான வருமானத்தை அதிகரிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதன் ஒரு கட்டமாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கு அரசாங்க தொழில்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர்களை தெரிவு செய்யும்போது சமூர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி அலுவலர்களின் உதவி அவசியமாகுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எமது அரச ஊழியர்களின் எண்ணிக்கை 15 இலட்சமாகும். அவர்களது உரிமைகள் மற்றும் சலுகைகளுக்காக மக்களின் பணத்திலிருந்தே செலவிடப்படுகின்றது. அரச வருமானம் முறையாக திறைசேரிக்கு கிடைக்குமானால் அனைத்து துறைக்குமான உரிமைகள் சலுகைகளை உறுதிப்படுத்த முடியும். அரசாங்கம் என்ற வகையில் அனைத்து அரச ஊழியர்களினதும் உரிமைகளை பெற்றுக்கொடுக்க தயாராகவுள்ளது.
அரச ஊழியர்கள் அவர்களது பொறுப்புக்களை நாட்டுக்காக நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கையை இலகுபடுத்தும் முயற்சிக்கு பங்களிப்பது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும். தங்களது அறிவை நேரடியாக அரச நிர்வாகத்துடன் தொடர்புபடுத்தி மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் முன்னேற்றக்கூடிய, நடைமுறைக்கு சாத்தியமான முன்மொழிவுகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி அரச ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார்.
விவசாயத்துறையில் இரண்டாவது தலைமுறையொன்று உருவாகாது இருப்பது ஒரு பிரச்சினையாகும். உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியின்மை உரிய சந்தைவாய்ப்பு இல்லாதிருத்தல், சந்தை மேலாதிக்கம், இருக்கின்ற வசதிகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யாமை இதற்கு தாக்கம் செலுத்துகின்றது.
இத்துறையின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி விவசாயத்துறையை கட்டியெழுப்புவதை துரிதப்படுத்த வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பல்வேறு சட்டதிட்டங்கள் மற்றும் தடைகள் காரணமாக மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அத்தகைய சட்டங்களை இலகுபடுத்தி மக்கள் வாழ்க்கையை இலகுபடுத்துவது அரச ஊழியர்களின் பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்த கடந்த அரசாங்கத்தின் குறைகளை காரணமாகக்கொள்ளாது. அந்த அரசாங்கத்தின் தூரநோக்கற்ற நடவடிக்கைகளின் காரணமாக நாடு முகங்கொடுத்துள்ள அனைத்து சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். அனைத்து அரச ஊழியர்களினதும் பலம் அதற்காக அரசாங்கத்திற்கு அவசியமானதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அமைச்சின் செயலாளர்களான எஸ்.மகாநாம, அசோக்க அலவத்த, சமூர்த்தி பணிப்பாளர் நாயகம், சமூர்த்தி சங்கத்தின் செயலாளர் ஜகத் குமார சுனித்ர ஆராச்சி மற்றும் அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி அலுவலர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM