சந்தாப்பண அரசியல் : தகுந்த நேரத்தில் உதவிகளின்மையால் தவிக்கும் மலையக மக்கள் 

20 Feb, 2020 | 04:24 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

மகாதேவி வயது 49, இரு பிள்ளைகளின் தாய். நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை  ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் இரண்டாவது லயன்  குடியிருப்பில் 10 க்கு 10 அறைக்குள் வாழ்கின்றார். முன் வாசல் ஊடாக செல்லும் போது இடது புற நிலப்பரப்பில் வறுமையை எடுத்துரைப்பது போல் சமயலறை. பிள்ளைகளுடன் படுத்துறங்க மற்றுமொரு அறை . இதுவே மகாதேவியின் லயன் வீடு .

இரண்டாவது மகள் பிறந்து ஒரிரு வருடங்களிலேயே கணவன் விட்டுச்செல்ல , நிஷாந்தினி (19) மற்றும் நிர்மலாதேவி (18) வயதிற்கு வந்த இரு பெண் பிள்ளைகளுடன் மகாதேவியின் வாழ்க்கையின் அவல நிலை கரையை தொடும் ஓயாத அலைகளை போன்று தொடர்கின்றது. மூத்த மகளான நிஷாந்தினிக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள துவாரத்தினால் படுமோசமான உடல் நிலை பாதிப்பை ஏதிர் நோக்கியுள்ளார். இதனால் கல்வியை தொடர முடியாமல் வீட்டிலேயே பல வருடங்களாக முடங்கி போயுள்ளார்.

போதிய வருமானம் இல்லமால் மகளின் சிகிச்சைகளை கூட முன்னெடுக்க முடியாதுள்ளதாக மகாதேவி கண்ணீருடன் கூறினார்.

மகாதேவி வயது 49

வீட்டின் வாழ்வாதார பிரச்சினைகளை தனியாக சமாளிக்க முடியாது மகாதேவி தேயிலை மலைகளில் போராடுகையில் "அம்மாவிற்கு " கரம் கொடுக்கும் நோக்கில் பாடசாலை கல்வியை விட்டு , வீட்டு சுமையின் ஒரு பகுதியை இரண்டாவது மகளான நிர்மலாதேவியும் சுமக்கின்றார். இரு பிள்ளைகளுக்கும் எட்டாக்கனியானது கல்வி.  வயிற்றுப் பசியை போக்க தேயிலை மலைகளில் வாழ்க்கையை  தொலைத்த தாயாகவே மகாதேவி காணப்படுகின்றார். 

நிர்மலாதேவியின்  பாடசாலை  முன்னேற்ற  அறிக்கை

"இரு பிள்ளைகளுமே ஆரம்ப கல்வியில் சிறந்து விளங்கினார்கள். ஆனால் மூத்த மகளின்  இதயத்தில் பாதிப்பு என்பதால் பாடசாலை செல்லவில்லை. சிறிய மகளும் அக்காவின் நோய் கவலை - வறுமையால் பாடசாலை செல்லாது தேயிலை மலைக்கு செல்கிறாள் என மகாதேவி கண்ணீருடன் கூறினார்"

அதிகாலை 5 மணிக்கு எழும்பி வீட்டு வேலைகளை முடித்துவிட்டு 6.50 மணிக்கு மலைக்கு செல்லும் மகாதேவி பிற்பகல் 12.30 மணி வரை தேயிலை கொழுந்து பறிப்பார். பின்னர் மதியம் உணவிற்காக வீடு திரும்பி நோயுற்ற மகளுக்கு உணவளித்து விட்டு மீண்டும் 1.30 மணிக்கு தேயிலை கொழுந்து  பறிப்பதற்காக மலைக்கு செல்வார்.

இடிந்து விழும் நிலையில் லயன் வீட்டில்பெரும் மழை காலங்களில் அச்சத்துடனேயே  மூவரும் வாழ்கின்றனர். போதிய ஆரோக்கியமான உணவு, குடிநீர், போக்குவரத்து மற்றும் மருத்துவம் என எவ்விதமான அடிப்படை வசதிகளின்றி வாழும் மகாதேவி தமது உரிமைகளுக்காக பல தரப்பிடம் கோரிக்கைகள் விடுத்த போதும் எவ்விதமான பலனும் இதுவரையில் கிடைக்க வில்லை என கூறினார்.

மகள்மார் இருவருடனும் மகாதேவி 

" இலங்கையை பொறுத்த வரையில் தொழிற் சங்கங்களும் அதற்கான சந்தாப்பண விவகாரமும் காலாகாலமாக பேசப்படுகின்ற விடயமாகவே காணப்படுகின்றது. 49 வயதான மகாதேவி சுமார் 30 வருடத்திற்கு மேலாக சந்தாப்பணம் செலுத்தி வருகின்றார். அவ்வாறு செலுத்துவதற்கான காரணம் என்ன ? 

மலையகத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் ஏதோ ஒரு தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்றனர். அவ்வாறு அங்கத்தும் பெற்ற நாள் முதல் நாள்சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை சந்தாப்பணமாக அங்கத்தும் வகிக்கும் தொழிற் சங்கத்திற்கு செலுத்துகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் வீடு வீடாக சென்று சந்தாப்பணம் அறவிட்ட போதிலும் நாளடைவில் அந்த நிலைமை மாறி சம்பளத்திலிருந்து நேரடியாகவே அறவிடும் நிலை ஏற்பட்டது. 

சந்தாப்பணம் செலுத்துவதோ தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுப்பதோ சட்டத்தின்  பிரகாரம் குற்றத்திற்குரிய விடயமல்ல . ஆனால் அதன் பலன்கள் மக்களுக்கு போய் சேர்கின்றதா ? என்பதே கேள்விக்குரிய விடயமாகும். 

குறித்த தொழிற்சங்கம் பெற்றுக்கொள்ளும் சந்தாப்பணம் குறித்து வெளிப்படை தன்மையை பாதுகாக்காத நிலையில் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டு தொழிலாளிகளின் உரிமைகளை பாதுகாக்காது செயற்பட்டால் உறுப்புரிமையை நீக்கி வேறு தொழிற்சங்கத்தில் இணைய கூடிய வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன. 

ஆனால் அவ்வாறானதொரு தீர்மானங்களை அந்த அப்பாவி மக்கள் எடுக்க அஞ்சுகின்றனர். இதனால் தொழிற் சங்கமொன்றில் அங்கத்துவம் பெறாத தொழிலாளியை காண்பதே அரிதாகி விட்டுள்ளது. "

மகாதேவியின்  (2019) செப்டெம்பர் மாத சம்பள விபரம்

தொழிற்சங்கம் எமது குறைகளை கேட்கவோ அல்லது தோட்ட நிர்வாகத்திடம் எடுத்துரைத்து தீர்வை பெற்றுக்கொடுக்கவோ முன்வருவதில்லை. நாங்கள் விரும்பா விடினும் சம்பளத்தில் மாதா மாதம் சந்தாப்பணம் சென்று விடுகின்றது . இவ்வாறு எவ்வித பலனுமற்ற வகையில் சந்தாப் பணம் செலுத்துவதாக மிகவும் வேதனையுடன் மகாதேவி கூறினார். "

இவ்வாறு கொட்டகலை - ஸ்டோனிகிளிப்  தோட்டத்தில் பலர் மோசமான வாழ்வதார நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். உண்ணுவதற்கு கூட உணவின்றி அந்த லயன் தொகுதியில் முதியவர்கள் அநாதரவாக உள்ளனர். உழைக்கும் காலத்தில் சந்தாப்பணம் செலுத்தினோம். ஆனால் அதனால் நாங்கள் அடைந்த பயன் தான் என்ன ? என்பது விளங்க வில்லை கூறினர் .

விரும்பியோ விரும்பா விட்டாலோ ஏதோவொரு தொழிற் சங்கத்தில் அங்குவத்தும் ஆக வேண்டிய நிலையே காணப்படுகின்றது. இன்று எவ்விதமான உதவிகளுமின்றி உள்ளோம் என அந்த லயன் வீட்டு மக்கள் மேலும் தெரிவித்தனர். 

இதனடிப்படையில் மலையக தோட்டத் தொழிலாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கும் 6 தொழிற்சங்கங்கள் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தொழில் திணைக்களத்தில் கோரினோம். குறிப்பாக அங்கத்தவர்கள் எண்ணிக்கை, ஒரு தொழிலாளியிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சந்தாத் தொகை, தொழிற்சங்கங்கள் மாதாந்தம், வருடாந்தம் பெற்றுக்கொண்ட சந்தாப் பணம், ஓராண்டுக்கு தொழிற்சங்கங்கள் செலவழித்த தொகை, கடந்த 3 வருடங்கள் மேற்கண்ட தொழிற்சங்கங்களால் கிடைக்கப்பெற்ற ஆண்டு கணக்கறிக்கை போன்ற விடயங்களடங்கிய தகவல் கேட்டுக்கொண்டோம்.

அட்டவணை

சந்தாப்பண விபரம் தொடர்பில்  தொழிலாளர் தேசிய சங்கத்தின்  பிரதிநிதி செயலாளர் சோ.சிறிதரன்  கூறுகையில் ,

" எமது தொழிற்சங்கம் இன்று வரையில் சந்தாப்பணம் வழங்கும் ஊழியர்களின் உரிமைகளுக்காக முன்னின்று செயற்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து தகவல் கிடைத்ததும் எமது தொழிற்சங்க சட்டத்தரணிகள் உரிமைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுப்பர். இதற்காக எந்தவொரு தொகையினையும் பாதிக்கப்பட்ட தொழிலாளியிடமிருந்து பெற்றுக்கொள்வதில்லை. 

அனைத்து பகுதிகளிலும் எமது தொழிங்சங்கத்திற்கு உறுப்பினர்கள் உள்ளனர். உதவிகள் கோரும் பட்சத்தில் அது குறித்து கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளோம். சந்தாப்பண நிதி சம்பந்தப்பட்ட அறிக்கைகள் உரிய வகையில் பேணப்படுகின்றது. 

இந்த விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர்  பழனி சக்திவேல் கூறுகையில் ,

நாம் பெற்றுக்கொள்கின்ற சந்தாப்பணத்தின் ஊடாக உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்கள் தொழில் உரிமை சார்ந்த விடயங்கள் மற்றும் அவர்களின் ஏனைய பொதுப் பிரச்சினைகளின் போது எவ்விதமான நிதியும் பெற்றுக்கொள்ளாமல் முன்னின்று வழக்காடுவோம். 

மலையக வரலாற்றை கவனத்தில் கொண்டால் எத்தனை தொழிற்சங்க போராட்டங்களுக்கு தலைமை தாங்கியுள்ளோம். அவற்றின் வழக்குகளில் வெற்றிபெற்றுள்ளோம் என்பது அனைவருக்கும் தெரியும். எதனையும் தனித்தனியே கூற இயலாது . 

தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சிணைகள் குறித்து எமக்கு அறிவித்தால் உடன் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். தொழில் உரிமை சார்ந்த விடயம் என்றாலும் சரி , வாழ்வாதார பிரச்சினை என்றாலும் சரி நேரடியாக எம்முடனோ அல்லது கிளை அலுவலகங்கள் ஊடாகவோ அறிவித்தல் வரும் பட்சத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். 

அவ்வாறு அறிவிக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சந்தாப்பணம் மீண்டும் பணமாக அல்லாது நிறைவான சேவையாகவே தொழிலாளர்களிடம் போய் சேர்கின்றது. "

தோட்டத்தொழிலாளர்களின் உழைப்பின் ஒரு பகுதியை சந்தாப்பணமாக பெற்றுக்கொள்ளும் தொழிற்சங்கங்களின் மலையக மக்களுக்கான கடப்பாடு என்ன ? சந்தாப்பணம் செலுத்தும் உறுப்பினர்களுக்குள்ள உரிமைகள் என்ன ? என்பது குறித்து அறியப்பட வேண்டியது அவசியமாகும். இல்லையென்றால் மகாதேவி போன்ற அப்பாவி மலையக தாய்மார்கள் எவ்வித பலனுமின்றி வாழ்நாள் முழுவதும் சந்தாப்பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். 

மலையக தொழிற்சங்க சந்தாப் பண விவகாரம் குறித்து  சட்டத்தரணி இ.தம்பையா குறிப்பிடுகையில்  , 

" தொழிற்சங்கங்கள் சந்தாப்பணம் பெற்றுக்கொள்வது தவறான விடயமோ குற்றமோ அல்ல. ஆனால் அதற்கான பொறுப்புமைடயிலிருந்து மீறும் நிலை காணப்படுமாயின்  சவாலுக்கு உட்படுத்த முடியும் "

சந்தாப்பணத்தை பெற்றுக்கொள்ளும் தொழிற்சங்கம் ஊழியர்களின் பொறுப்புக்கூறலிலிருந்து மீறும் பட்சத்தில் சட்டத்திற்கு முன் சவாலுக்குட்படுத்த முடியும். தொழில் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்தால் நிச்சயமாக குழு அமைத்து கணக்கு வழக்குகள் குறித்து தொழில் ஆணையாளர் ஆராய்வார். இதன் பின்னரும் குறித்த தொழிற்சங்கத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படா விட்டால் நீதிமன்றில் வழக்கு தொடர முடியும் என்றார் . 

" எந்தவொரு தொழிற்சங்கமும் சந்தாப்பண நிதி அறிக்கையை வெளிப்படுத்த விரும்ப வில்லை. நாம் தொடர்புகொண்ட அனைத்து தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும் நிதி செலவீடுகள் மற்றும் இருப்பு தொகை என்பவை குறித்து தகவல்களை வழங்க மறுத்து விட்டனர். தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் ஊடாக உண்மையான தகவல்களை பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமையே காணப்படுகின்றன. 

அதேபோன்று தான் தொழிலாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் சந்தாப்பணம் குறித்தும் அதன் கணக்கறிக்கைகள் குறித்தும் வெளிப்படைதன்மை அற்ற நிலைமையே காணக்கூடியதாக உள்ளது. "

உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டு சந்தாப்பணத்தில் வரும் வறுமானத்தை கொண்டு தொழிற்சங்கம் சுகபோகமாக அனுபவிப்பார்களாயின் அதனை அனுமதிக்க இயலாது. ஆனால் இவ்வாறனதொரு சூழ்நிலை மலையகத்தில்  இன்று காணப்படுகின்றமை துர்ப்பாக்கியமானதாகும் எனவும் சட்டத்தரணி இ.தம்பையா தெரிவித்தார். 

"2019 -  செப்டெம்பர் மாத சம்பளமாக மகாதேவி 5950 ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளார். இந்த தொகையில் 233 ரூபாவை சந்தாப்பணமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு 20 வருடங்களுக்கு மேலாக மகாதேவி செலுத்தும் உழைப்பிற்கு பலன்  கிடைத்துள்ளதா ? இந்த சந்தா தொகையை பெற்றுக்கொண்டுள்ள குறித்த தொழிற்சங்கத்தின் மகாதேவிக்கான கடப்பாடு என்ன ? "

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41