ஏறாவூர் சதாம் குசைன் கிராமத்தைச் சேர்ந்த கச்சிமுகமது வகாப்தீன் என்பவருக்கு காயம் விளைவிக்கும் நோக்குடன் ஒன்றுகூடியமை அக்காயத்தின் விளைவாக மரணம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் எதிரிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரச தரப்பினர் நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தவறியதால் எதிரிகளை விடுதலை செய்வதாக இவ்வழக்கை விசாரணை செய்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் தீர்ப்பு வழங்கினார். எதிரிகளின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் ஆஜரானார்.

2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக கயாத்துக்குட்டி அலி முகமது, கயாத்துக்குட்டி மாபீர், கயாத்துக்குட்டி ஜெயினுவஸ்தீன், அப்துல் ஹக் ஜலால்டீன், முகம்மதுலெவ்வை பாத்துமுத்து, முகமது ஜிப்றி, அப்துல் ஹலால் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடுநர் சார்பாக இறந்தவரின் மனைவியான காசிமாலெவ்வை முஸ்ஸலின், ஜக்குறியா பௌஸ், ஆதம் லெவ்வை, சாகுல் ஹமீட், உபபொலிஸ் பரிசோதகர் அமரசிறி, உப பொலிஸ் சாஜன்ட் ஜெகநாதன், உப பொலிஸ் காண்ஸ்டபிள் நஜிமுதீன், டாக்டர் கே. சுகுமார் ஆகியோர் சாட்சியமளித்தனர்.

1 ஆம் சாட்சியான காசிமா லெவ்வை முஸ்ஸலின் என்பவரின் சாட்சியத்தில் பாரிய முரண்பாடு காணப்படுவதாகவும் ஏனைய சாட்சிக்காரர்களும் ஒருவருக்கொருவர் முரண்பாடாக சாட்சியம் அளித்துள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் அவரின் விவாதத்தில் எடுத்துரைத்தார்.

இதனை அடுத்து எதிரிகளை விடுதலை செய்வதாக மட்டு. மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.