(எம்.ஆர்.எம்.வஸீம்) 

மத்திய வங்கியை பாதுகாக்க சகல உறுப்பினர்களும் தவறியுள்ளனர். தடயவியல் அறிக்கை சான்றுகளின்படி உரிய நடவடிக்கை எடுக்காவிடின் எதிர்காலத்தில் கூட இவை நடைபெறலாம்.

அத்துடன் மத்திய வங்கியை எந்த ஒரு அரசியல் தலையீடும் இன்றி சுயாதீனமாக செயற்பட பொறிமுறையொன்றை அமைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற பிணை முறி தொடர்பான மத்திய வங்கி தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்தி வைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கி பணிகளை அனைவரும் சூழ்ச்சியாக கையாண்டதால் பொதுமக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தடயவியல் கணக்கறிக்கையில் அடையாளங்காணப்பட்ட அனைவரும் நம்பிக்கை பொறுப்பாளர்களாக இருந்தவர்கள். அவர்கள் அரச பணத்தின் நிர்வாகத்தை சரிவர மேற்கொண்டிருக்க வேண்டும்.

மத்திய வங்கிக்கு பொருளாதார ஸ்தீரத்தன்மையை பேண பொறுப்புள்ளது.சமூக பாதுகாப்பு முறைமையையும் பேண வேண்டும்.மத்திய வங்கியில் தற்பொழுதும் எதிர்காலத்திலும் நுட்பம் வாய்தவர்கள் செயற்பட வேண்டும்.குற்றச்சாட்டுகள் பரவலாக வந்துள்ளது. நிதி இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன் இந்த மோசடிக்கு யார் பொறுப்பு என அறிய வேண்டும்.ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டுப் பொறுப்புடன் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.மத்திய வங்கியை பாதுகாக்க சகல உறுப்பினர்களும் தவறியுள்ளனர்.

தடயவியல் அறிக்கை சான்றுகளின் படி உரிய நடவடிக்கை எடுக்காவிடின் எதிர்காலத்தில் கூட இவை நடைபெறலாம். மத்தியவங்கி அரசியல் தலையீடின்றி சுயாதீனமாக செயற்பட வேண்டும். அரசியல் நிகழ்ச்சி நிரலின்றி அது செயற்பட வேண்டும்.

மேலும் குற்றத்தை மற்றவர் மீது சுமத்திக் கொண்டிருப்பதால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாது.அரசியல் பேதமின்றி மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக செயற்பட இடமளிக்க வேண்டும். அத்துடன் வெளிப்படையாகவும் பொறுப்புக் கூறும் வகையிலும் மத்திய வங்கி செயற்பட வேண்டும்.

அரசியல் ரீதியில் தனிப்பட்ட நபர்கள் தலையீடு செய்வதை தடுக்க வேண்டும். இதற்காக பொறிமுறையொன்றை முன்வைத்து மத்திய வங்கியை பாதுகாக்க வேண்டும்.எந்த ஒரு கட்சி சார்பும் இன்றி சுயாதீனத்தன்மையுடன் செயற்படுவதற்கு உத்தரவாதம் செய்ய வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.