(எம்.ஆர்.எம்.வஸீம்)

சிறுவர் துஷ்பிரயோங்களை சட்டத்தால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது. என்றாலும் இதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமால் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற்கட்டளை 27 இன்2 கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரது கேள்வியில்,

கடந்த வெள்ளிக்கிழமை கற்பழிப்புகள் மற்றும் சிறுபவர் துஷ்ரயோகங்கள் தொடர்பிலான அறிக்கையொன்று அரசாங்கத்தால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதேவேளை, 2020 ஆம் ஆண்டின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 140 கற்பழிப்புகளும், 41 சிறுவர் துஷ்பிரயோகங்களும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் சில முறைப்பாடுகள் தொடர்பில்தான் விசாரணைகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன. 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போதும் 2019ஆம் ஆண்டில் கற்பழிப்புகள் 107.6 சதவீதத்தாலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் 26 சதவீதத்தாலும் வீழ்ச்சிக்கண்டுள்ளன.

என்றாலும் 2020ஆம் ஆண்டின் முதல் 20 நாட்களை பார்த்தால் இதில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இவற்றை தடுக்க அரசாங்கம் விசேட செயற்றிட்டங்கள் ஏதும் வகுத்துள்ளதா? சம்பங்களுக்கான தண்டனையை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறதா எனக் கேள்வியெழுப்பினார்

இதற்கு அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ் பதிலளிக்கையில்,

2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2019ஆம் ஆண்டின் புள்ளி விபரங்களை பகுப்பாய்வு செய்கின்ற போதும் குற்றங்கள் குறைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது. 2018ஆம் ஆண்டில் 253 கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும் 2019இல் 183 சம்பவங்கள்தான் பதிவாகியுள்ளன.

இத்தகைய குற்றச்செயல்களை தடுக்க 498 பொலிஸ் பிரிவுகள் நாடளாவிய ரீதியில் செயற்படுகின்றன. அவற்றின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பயிற்சிச் பெற்ற உத்தியோகர்களும் தெடார்ந்து இணைக்கப்பட்டு வருகின்றனர். அதற்கு மேலதிகமாக  சில அரச சார்பற்ற நிறுவனங்களும் இவற்றை தடுக்க செயற்படுகின்றன.

பாடசாலை மாணவர்கள், பெற்றோர், சமூக குழுகள் எனப் பலரும் இவர்களை அடையாளம் கண்டு விழிப்புணர்வு செய்யப்படுகின்றனர்.

பெண்கள், சிறுவர்கள் துஷ்பிரயோகங்கள் பொருளாதார காரிணிகளை மையப்படுத்தியும் இடம்பெறுகின்றன. சில மாதங்களில் இக்குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றன. சில மாதங்களில் குறைவடைகின்றன. அதன் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அதிகரித்துள்ளன.

எனவே எதிர்காலத்தில் பெண் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமுல்படுத்த எதிர்பார்க்கின்றோம். அதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சர்வதேச பொலிஸாருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுகிறன. குற்றச்செயல்கமளை தடுப்பதற்காக சைபர் சட்டமொன்றும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என அவர் தெரிவித்தார்.