(எம்.ஆர்.எம்.வஸீம்)

பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடம்மாற்றம் பொலிஸ் திணைக்களத்தின் மூலமே செய்யப்படுகின்றது. மாறாக இதில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இல்லை என அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் ஒவ்வொரு வருடத்திலும் இறுதியில் பொலிஸாரின் சேவை மற்றும் அவர்களது கோரிக்கையின் பிரகாரம் கோரப்படும் இட மாற்றங்களுக்கு அமைவாகவே இச்செயற்பாடு இடம்பெறுகிறது. 

இவை வருட இறுதியில் சாதாரணமாக நடைபெறக் கூடியவை. இட மாற்றங்களில் அசாதாரணங்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் மேன்முறைபீடுகளை மேற்கொள்ளலாம் என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று நிலையியற்கட்டளை 27 இன் 2 கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.