(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பின் 19வது திருத்ததினால் சீரகுலைந்துள்ள அரச நிர்வாகங்கள், அரச அதிகார போட்டி உள்ளிட்ட அடிப்படை  பிரச்சினைகளுக்கு பொதுத்தேர்தலின் வெற்றியை தொடர்ந்து தீர்வு வழங்கப்படும். என தெரிவித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ,  19வது திருத்தத்தினை முழுமையாக மாற்றியமைத்து பலமான அரசாங்கத்தை உருவாக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுடனான நிர்வாக கட்டமைப்பினை நிச்சயம் தோற்றுவிப்பேன். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் பலமான அரசாங்கத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

100,000 கிலோ மீற்றர் இடை வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கலகாவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டுகையில்,

பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென ஜனாதிபதித் தேர்தலின் போது மக்கள் கோரக்கை விடுத்தனர். அதற்கமைய தேர்தலுக்கு பின்னரான 3 மாதக் காலப்பகுதியில் பாதுகாப்புத் துறைக்கு தேவையான அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ளதுடன்,  நாட்டின் பாதுகாப்பிற்காக பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை அனைத்துக்கும் சிறந்த பாதுகாப்பு அதிகாரிகளையும் நியமித்து பாதுகாப்பு துறையை   முழுமையாக மாற்றியமைத்து தேசிய பாதுகாப்பினை   பலப்படுத்தியுள்ளேன்.

 நாட்டில் பயங்கரவாதங்கள் தலைதூக்கு இடமில்லையென்பதை உறுதியாகக் கூறுகின்றேன். அதேபோன்று போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் மாணவர்களை மீட்பதற்கு தேவையான முக்கிய செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளோம்.

மேலும் அனைவருக்கும் சட்டம் சாதாரண முறையில் நடைமுறைப்படுத்தாவிட்டால் நீதிமன்றத்தின் சுயாதீனம் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். அதனால், நீதிமன்றங்களுக்கு சுயாதீனமாக செயற்படுவதற்கு இடமளித்துள்ளோம்.

ஜனாதிபதித் தேர்தலில் என்னுடைய வெற்றிக்கு பின்னர் சிறுபான்மைப் பலம் கொண்ட அரசாங்கத்தையே உருவாக்கியுள்ளோம்.

ஆகவே பெரும்பான்மை பலம் கொண்ட எங்களுடைய தனி அரசாங்கத்தை உருவாக்கும் வரை புதிய வரவு - செலவுத் திட்டமொன்றை நிறைவேற்றுவதற்கு முடியாது. ஆனால்  இந்த நாட்டிலுள்ள வறுமையை நீக்குவதற்கு முதல் 100000 குடும்பங்களில், குடும்பத்தில் ஒருவருக்கு அரச வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

ஆகவே  தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த அனைத்தையும்  நிறைவேற்றுவது பிரதான எதிர்பார்ப்பு.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பலமானதொரு அரசாங்கம் தேவை. குறிப்பாக, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினால் கடந்த 5 வருடங்களில் அரச இயந்திரத்தின் பலம் மற்றும் அதிகாரங்கள என அனைத்தும் சீர்குலைக்கப்பட்டுள்ளது.

 ஆகவேஇ 19 ஆவது திருத்தத்தை மாற்றியமைத்து மீண்டும் பலமிக்கதொரு அரசாங்கம் மற்றும் நிறைவேற்றிதிகார ஜனாதிபதி முறையின் மூலம் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய ஒரு அரசாங்கத்தை உருவாக்குவோம்.

அரச அதிகாரிகள்  சுயாதீனமாக முடிவெடுக்க முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தனர். தற்போது எவ்வித அச்சமுமின்றி மக்களுக்கு தேவையான சேவையை வழங்குவதற்கு சுயாதீனமாக முடிவெடுக்கும் அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கியுள்ளோம்.

இன்று சர்வதேசத்திற்கு மத்தியில் எங்கள் நாட்டின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. இந்தியா  சீனா மற்றும் ஆசிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளமையினால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன.

ஆகவே எதிர்காலத்தில் பலமானதொரு அரசாங்கத்தை உருவாக்குவதற்காக எதிர்வரும் தேர்தலில் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும். குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் என் மீது நம்பிக்கை வைத்து மாபெரும் வெற்றியை பெற்று கொடுத்தது போன்று பலமானதொரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கு உங்கள் ஆதரவை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.