(எம்.ஆர்.எம்.வஸீம்)

பல தசாப்தங்கள் பழமையான ஜப்பான் - இலங்கை நட்புறவை பலப்படுத்த ஒஹ்டானி சோசன் தேரர் உள்ளிட்ட ஹோங்கான்சி மன்றத்தினால் வழங்கப்பட்ட பங்களிப்பு மகத்தானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் நேற்று  இடம்பெற்ற ஜப்பான் ஹோங்கான்சி மன்றம் மற்றும் கியோட்டோவிலுள்ள ஹோங்கான்சி விகாரையின் வணக்கத்துக்குரிய ஒஹ்டானி சோசன் தேரருக்கு ‘சாசன ரத்ன’ கௌரவ பட்டம் மற்றும் ‘சன்னஸ்’ சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீண்ட கால வரலாறு கொண்ட ஜப்பான் ஹோங்கான்சி கலாசார மேம்பாடு மன்றம் உலகளாவிய பௌத்த சமூகத்தினரின் சமூக, பொருளாதார மற்றும் கலாசார தொடர்புகளை மேம்படுத்த அதிக பங்களிப்புகளை மேற்கொண்டுள்ளது.

ஜப்பானும் இலங்கையும் பழங்காலத்திலிருந்தே கடினமான சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் முன்னின்றுள்ளது.  ஹோங்கான்சி மன்றத்தினால் இலங்கையில் சர்வதேச பௌத்த நூதனசாலைக்கு ஜப்பானியஅறையொன்றை வழங்கியமைக்கு  நன்றி தெரிவிக்கின்றேன்.

ஜப்பான் முன்னாள் பேரரசரின் சகோதரர் ஒஹ்டானி சோசன் தேரர் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் மற்றும் பிரான்ஸ் சோபோன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று நகோயா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக செயற்படுவதோடு விசேடமாக ‘மஹாயான தர்ம’ மற்றும் ‘தேரவாத’ பௌத்தத்துக்கு இடையில் பரஸ்பர தொடர்புகளை விருத்தி செய்ய செயற்பட்டுள்ளார் என்றார்