பெல்ஜியம், ஏஜென்டில் அமைந்துள்ள தேவாலயத்தில் மனித எலும்புகளை உபயோகித்து நிர்மாணிக்கப்பட்ட சுவர்களை கடந்த 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

பெல்ஜியத்தில் தனித்துவமான கண்டுபிடிப்பாக அடையாளம் காணப்படும் குறித்த தேவாலயத்தின் சுவர்கள், இறந்தவர்களின் தொடை மற்றும் தாடை எலும்புகளால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எலும்புகளால் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுவர்களுக்கு இடையில் மண்டை ஓடுகளால் நிரப்பப்பட்டுள்ளது.

அவற்றில் பல மண்டை ஓடுகள் சிதைந்த நிலையில் காணப்படுவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இத் தேவாலயத்தின் விசுவாசிகள் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்டதால், புதிய கல்லறைகளுக்கு இடமளிப்பதற்காக தேவாலயத்திற்கு வெளியே உள்ள கல்லறையிலிருந்து எலும்புகள் அகற்றப்படும் போது எலும்பு எச்சங்களை தூக்கி எறிய முடியாததால், அவை தேவாலயத்தின் சுவராக நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

 

இச் சுவர்களுக்கிடையில், முழு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. "எனவே சுவர்கள் கட்டப்பட்ட பின்னரும் இக் கல்லறை மயான பூமியாக சில காலம் பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும்." என  நம்புகின்றனர். 

இங்கு காணப்படும் எலும்புகள் 15 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து தோன்றுவதாகவும்  இந்த கல்லறைகள் குறித்து முழுமையாக அறிய இன்னும் பல ஆராய்ச்சிகள் செய்யப்படவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 

எனினும் இத் தேவாலயம் சுற்றுலா தலமாக மாறாது என்று தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு,  எலும்புகள் அகற்றப்பட்டு வேறொரு இடத்தில் பார்வைக்காக வைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.