(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜனாதிபதி தனது சிறிய மூளையை பயன்படுத்தி மத்திய வங்கி ஆளுநரை வெளியேற்றி நாட்டிற்கு பெரும் சேவை ஆற்ற வேண்டும் என கூட்டு எதிர் கட்சி தெரிவித்துள்ளது.

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டு எதிர் கட்சியின் ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் டியூ குணசேகர தெரிவிக்கையில்,

மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிராக அனைத்து தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் வரும் போது அவரை பாதுகாக்க வேண்டிய தேவை பிரதமருக்கு ஏன் உள்ளது. இதன் மர்மம் என்ன ?

ரூபாவின் விலை வீழ்ச்சிக்கு மத்திய வங்கியின் செயற்பாடுகள் தான் காரணம் . முறையற்ற நிதி நிர்வாக கொள்கையினால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் 68 பில்லியன் தொகை மேலதிகமான கடன் தவணையாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. நாட்டிற்கு பாரிய பொருளதார இழுக்கை ஏற்படுத்தி மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மத்திய வங்கி ஆளுநர் 365 நாட்களில் 145 நாட்கள் மத்திரமே நாட்டில் இருந்துள்ளார். இதனை விட அவர் தொடர்பில் பல விடயங்கள் வெளிப்படுத்த முடியும். ஆனால் அதற்கு இது தருணம் அல்ல.  இவரது நடவடிக்கைகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.