பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துக் கடந்த இரண்டாம் திகதி காலை 08.30 மணியளவில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில்  ஆரம்பித்த சக்கர நாற்காலி பயணமானது இலங்கையின் பல பகுதிகளிற்குச் சென்று நேற்று முற்றுப்பெற்றது. 

இந்நிலையில் வவுனியா பொது அமைப்புகளால் பயணத்தை ம.மொகமட்அலி மற்றும் ஜெகதீஸ்வரன், சகோதர மொழிபேசும் பிறேமசந்திர(தவிர்க்க முடியாத காரணத்தால் இடைவழியில் பயணத்தை முடித்துக்கொண்டவர்) ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை வலியுறுத்தி  இலங்கை முழுதுமான  சுற்றுப்பயணத்தைச் சக்கரநாற்காலி மூலம் மேற்கொண்டிருந்தனர்.

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும். மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் ஏனையோர் அனுபவிக்கும் சகல உரிமைகள் சலுகைகளையும் அனுபவிக்க வழியமைக்க வேண்டும். நாட்டிலுள்ள சகல மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்த கொடுப்பனவு 5000 ரூபாவை வழங்கி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  

மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக சமய கலாச்சார விளையாட்டு கல்வி பொருளாதார விடயங்களில் சமவாய்ப்பு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும். பொது நிறுவனங்கள், அரங்கு மேடைகள், பொதுமலசலகூடங்கள், பொதுப்போக்குவரத்துகள், பொதுக்கட்டடங்கள், அலுவலகங்கள், வைத்தியசாலைகள், சேவை மையங்கள், போக்குவரத்து தரிப்பிடங்கள் என சகலதுறைகளிலும் அணுகுவசதி ஏற்படுத்தப்பட வேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்துக் குறித்த பயணம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யாழில் ஆரம்பித்த குறித்த பயணம் இலங்கையின் பல்வேறு பகுதிகளிற்குச் சென்றிருந்ததுடன் அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் தமது பயணத்தை முடித்துக்கொண்ட அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு வவுனியாவில் வாடிவீட்டில் சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.சிறினிவாசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  பயணத்தை மேற்கொண்ட இருவருக்கும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.