(எம்.ஆர்.எம்.வஸீம்)

ஐக்கிய தேசிய கட்சியின் தேவைக்கு தடயவியல் அறிக்கை தயாரிக்கப்படவில்லை. ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமையவே மத்திய வங்கியினால் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எமது காலத்தில் இடம்பெற்ற நட்டத்தை ஈடுசெய்ய முடியும்.

ஆனால் 2015க்கு முன்னர் இடம்பெற்ற நஷ்டத்தை எவ்வாறு ஈடுசெய்யப்போகின்றது என்பதை அரசாங்கம் தெரிவிக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  இடம்பெற்ற பிணைமுறி தொடர்பான மத்திய வங்கி தடயவியல் கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தடயவியல் அறிக்கை 2015க்கு முன்னரும் அதற்கு பின்னரும் என இரண்டு காலகட்டத்தை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

2015க்கு முன்னர் ஊழியர் சேமலாப நிதியம் முற்றாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. 2002 மற்றும் 2015 காலப்பகுதியில் போலி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன.

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் அவருடன் இருந்த குழுவினர் 17போலி நிறுவனங்களை நிறுவி பங்குச்சந்தையின் பெறுமதிகளை திட்டமிட்டு அதிகரித்து அவற்றை ஊழியர் சேமலாப நிதியத்துக்கு விற்றார்கள்.

சிறிது காலத்தில் அதன் பெறுமதி குறைவடைந்து சென்றது. இதன் காரணமாக ஊழியர் சேமலா நிதியத்துக்கு இந்த காலப்பகுதியில் 9ஆயிரத்தி 830 பில்லியன் நட்டமேற்பட்டுள்ளது. ஆனால் 2015க்கு பிறகு நாங்கள் ஊழியர் சேமலாப நிதியத்தை பயன்படுத்தவில்லை.

அத்துடன் 2002 முதல் 2015 காலப்பகுதியில் மத்திய வங்கி பிணைமுறியினால் 10 பில்லியன் ரூபா நட்டமேற்பட்டுள்ளது. அதேபோன்று ஊழியர் சேமலாப நிதியத்துக்கு 9ஆயிரத்தி 830 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 20ஆயிரம் பில்லியன் நட்டம் ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த பயணத்தை எவ்வாறு ஈட்டிக்கொள்வது என அரசாங்கம் தெரிவிக்கவேண்டும். எமது காலத்திலும் பிணைமுறியினால் 10 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காளர் நாயகம் தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் தடயவியல் அறிக்கையின் பிரகாரம் எமது காலத்தில் ஆயிரத்தி 100 மில்லியன் ரூபாவே ஏற்பட்டிருக்கின்றது என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது காலத்திலும் நஷ்டம் ஏற்பட்டிருக்கின்றதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் எமது காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.